Published:Updated:

அரசாங்கம் வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்கிறதா? #DoubtOfCommonMan

மரம்
News
மரம்

ரிசர்வ் ஃபாரஸ்ட் எனப்படும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் காடுகளில் உள்ள மரங்கள் மற்றும் பொதுமக்களின் பட்டா நிலத்திற்கு உட்பட்ட மரங்கள் என மரங்களைப் பொதுவாக இரு வகைப்படுத்தலாம்.

Published:Updated:

அரசாங்கம் வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்கிறதா? #DoubtOfCommonMan

ரிசர்வ் ஃபாரஸ்ட் எனப்படும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் காடுகளில் உள்ள மரங்கள் மற்றும் பொதுமக்களின் பட்டா நிலத்திற்கு உட்பட்ட மரங்கள் என மரங்களைப் பொதுவாக இரு வகைப்படுத்தலாம்.

மரம்
News
மரம்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "மரங்களை வெட்டுவதற்கான சட்டம் என்ன... நம்முடைய இடம் என்றாலும் நம்மால் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்ட முடியுமா... பொது இடங்களில் இருக்கும் மரங்களை வெட்டுபவர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை என்ன... அரசாங்கம் மரங்களை வெட்டுவதற்கு இணையாக மரங்களை வளர்த்து ஈடு செய்கிறதா?" ஆகிய கேள்விகளை எழுப்பி, அவற்றிற்குப் பதில் கேட்டிருக்கிறார் விகடன் வாசகர் வீர அமுதன். அதன் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
Doubt of a common man
Doubt of a common man

உணவு மற்றும் சுவாசத்திற்கான காற்று என எண்ணிலடங்கா பல நன்மைகளையும் நமக்கு அளிக்கின்றன மரங்கள். மரங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்துவருகிறது. இதனால் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் நிகழக்கூடும் என்பதால், காடுகள் அழிப்பைத் தடுக்கவும், மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வனத்துறை அதிகாரி கோபிநாத்திடம் பேசினோம்.  

“ ரிசர்வ் ஃபாரஸ்ட் எனப்படும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் காடுகளில் உள்ள மரங்கள் மற்றும் பொதுமக்களின் பட்டா நிலத்திற்கு உட்பட்ட மரங்கள் என இதை இரு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில், ரிசர்வ் ஃபாரஸ்டில் உள்ள மரங்கள் வனத்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும். அவற்றை வெட்டுவதற்கு வனத்துறை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டிக்கொள்ள அதன் உரிமையாளருக்கு முழு உரிமையும் உண்டு.

மரங்கள்
மரங்கள்

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மரங்களைத்தான் வெட்ட முடியும், அதற்கு மேல் வெட்டக்கூடாது என எந்தவித கட்டுப்பாடும் தனிநபரின் பட்டா நிலங்களில் கிடையாது. வெட்டப்பட்ட மரங்களை வேறோர் இடத்திற்கு எடுத்துச்செல்லும்போது மட்டும் அந்த நிலத்திற்கு உட்பட்ட கிராம அலுவலரிடம் ‘ இந்த பட்டா நிலத்தில் இருந்து இத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன ’ என்பதற்கான சான்றிதழைப் பெறுவது அவசியம். ஆனால், 'Scheduled Timbers' எனப்படும் விலையுயர்ந்த மர வகைகளை வெட்டுவதற்கு, அவை தனிநபருக்குச் சொந்தமான நிலத்திலேயே இருந்தாலும்கூட வனத்துறையினரின் அனுமதியை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

Doubt of a common man
Doubt of a common man

சந்தனம், தேக்கு, செம்மரம், கருங்காலி மற்றும் ஈட்டி (தோதகத்தி மரம்)  ஆகிய ஐந்து வகையும் 'Scheduled Timbers' எனும் வகைக்குள் அடங்கும். விலையுயர்ந்த வகையைச் சேர்ந்த அவை பாதுகாக்கப்படும். இந்த விதி காடுகளிலும் மட்டுமல்ல, தனிநபரின் நிலங்களுக்கும் பொருந்தும் என்பதால், அவற்றின் எண்ணிக்கையைப் பராமரிக்கவும் சட்டவிரோதமான வர்த்தகங்களைத் தடுக்கவும்  சில விதிகளைக் கட்டாயமாக்கியுள்ளது அரசு" என்றார்.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதற்கான தண்டனைகள் குறித்து அவர் கூறுகையில் , “வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டினால் அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறை உள்ளிட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுவே பட்டா நிலங்களில் முன் சொல்லப்பட்ட 'Scheduled Timbers' வகைகளைச் சரியான அனுமதியின்றியும் போதிய ஆவணங்களின்றியும் கடத்த முற்பட்டால், அதற்கான 'Permit value' அபராதமாக வசூலிக்கப்படும். அம்மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுகின்றன என்பதை அவை வெட்டப்படும்போது அறிய இயலாது, அவை ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு கொண்டுசெல்லப்படும்போதுதான் அறிந்துகொள்ளமுடியும்.  அபராதத் தொகையாக வசூலிக்கப்படும் அதன் 'Permit Value' அதிகபட்சம் 50 முதல் 100 ரூபாய் வரைதான் இருக்கும். அந்த அபராதத் தொகை தண்டனை குறித்த எந்த ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தாது என்பதால், வெட்டப்பட்ட மரங்களை கடத்திச்செல்லப் பயன்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அதற்கேற்ப அபராதம் கூடவே  வசூலிக்கப்படும்” என்றார்.

சந்தன மரம்
சந்தன மரம்

மேலும், வெட்டப்படும் மரங்கள் ஈடுசெய்வது பற்றி கூறும்போது, “ இப்போது எங்களின் வனத்துறையின்கீழ் பராமரிக்கப்பட்டுவரும் காடுகளுக்கு உட்பட்ட பகுதிகளை, ஏதேனும் சாலை அல்லது பாலம் போன்ற மக்கள் நலப் பணிகளுக்காக விட்டுத்தருவோம். ஆனால், இந்திய அரசின் வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி ( Forest conservation act ) அதற்கு பல விதிகள் உண்டு. காடுகள் உள்ள வனத்துறையின் நிலத்தை போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற வேறொரு துறைக்கு அளிக்கும்பட்சத்தில் அந்நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ளப்போகும் அத்துறை, வனத்துறை அளிக்கப்போகும் நிலத்தின் அளவில் இரண்டு மடங்கை வேறோர் இடத்தில் வனத்துறைக்கு அளிக்க வேண்டும். மேலும், அளிக்கப்படும் அந்நிலம், வனத்துறை ஏற்கெனவே பராமரிக்கும் காடுகளுக்கு அருகில் இருப்பது அவசியம். அப்போதுதான் அந்நிலத்தை வனத்துறையினரால் எளிதில் பாதுகாக்க முடியும். இதுமட்டுமின்றி கொடுக்கப்பட்ட நிலத்தைப் பராமரிப்பதற்கான மூன்று வருட செலவுத் தொகையையும் சம்பந்தப்பட்ட துறை அளிக்க வேண்டும். இத்தனை விதிகளுக்கும் ஒப்புதல் பெற்றால்தான் வனத்துறையின் காடுகள் மற்ற துறைக்கு சொந்தமாகும்” என்றார்.

“Scheduled Timbers வகைகளில் ஒன்றான தேக்கு மரம், நமக்கு எளிதில் வெளிச்சந்தைகளில் கிடைத்துவிடும். அதை தனிநபர் நிலங்களில் வளர்த்து சந்தைக்குக் கொண்டுவருவதில் அதை வெட்டுவதற்கான அனுமதியைத் தவிர வேறு எந்த விதிகளும் கிடையாது. ஆனால், சந்தனம் மற்றும் செம்மரங்களைத் தனிநபர் நிலங்களில் இருந்து சந்தைக்குக் கொண்டுசெல்ல பல நிலைகளைக் கடக்க வேண்டும். முதலில், இந்த இருவகை மரங்களும் பட்டா நிலங்களில் வளர்க்கப்பட்டாலும் அதை உரிமையாளர் தானாகவே அறுவடைசெய்துகொள்ள இயலாது. அதற்குப் பதில், அந்த நில உரிமையாளர் சம்பந்தப்பட்ட வன அலுவலரை அணுக வேண்டும். அவர்கள்தான் அவற்றை அறுவடைசெய்வர். பின்னர், அறுவடை செய்யப்பட்ட அம்மரங்கள் அரசுக்குச் சொந்தமான கிடங்குக்கு கொண்டுசெல்லப்பட்டு, தரவாரியாகப் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்படும். தமிழகத்தில் இதற்கென கிடங்குகள் சத்தியமங்கலம், சேலம் மற்றும் திருபட்டூர் ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளன . மேலும், அவற்றிற்கான ஏலம் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். அவை ஏலத்தில் எடுக்கப்பட்ட பின்பு, ஒவ்வொரு தனிநபர் நிலத்தில் இருந்தும் கொண்டுவரப்பட்ட மரங்களில் அளவைப் பொறுத்து உரிமையாளருக்கு 60%, அரசுக்கு 40% என பிரித்துக்கொடுக்கப்படும்” என்றார்.

இதேபோல விகடனின் #DoubtOfCommonman பக்கத்தில் கேட்க உங்களிடம் கேள்விகள் இருந்தால், இந்தப் படிவத்தில் பதிவுசெய்யவும்.