2019 -ம் ஆண்டு அமேசான் காடுகள் எரிந்து கொண்டிருந்தபோது உலகத்தின் நுரையீரல் கருகிக் கொண்டிருப்பதாக அனைவரும் கண்ணீர் வடித்தனர். அதே ஆண்டு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய காட்டுத்தீ உருவாகியது. உயிரினங்கள் சாலைகளில் தீக்காயங்களுடன் ஓடி வந்த படங்களைப் பார்த்தவுடன் கலங்காத இதயங்கள் இல்லை.

நாம் வாழும் பூமிக்குக் காற்றையும், நீரையும் தந்து மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் வாழவைப்பது காடுகளே! ஆனால் இன்றுள்ள மனிதன் காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை!இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது திருவள்ளுவர்
"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்". என்ற குறள் மூலம்,
நீல மணி போன்ற நீரும், வெட்ட வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழல் செறிந்த காடும், ஒரு நாட்டிற்கு உண்மையான பாதுகாப்பு அரண் என்பதை அழகாகச் சொல்லிச் சென்றிருக்கிறார். ஆனால் இன்றைய உலகம் பீரங்கிகளும், விமானம் தாங்கி கப்பல்களும், துப்பாக்கிகளும், அணுகுண்டுகளும் ஒரு நாட்டிற்குப் பாதுகாப்பு அரண் என எண்ணிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனது இந்தத் தொடர், காடுகளின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் உணர்த்தும் ஒரு சிறு முயற்சி தான்..
தண்ணீர் எங்கிருந்து வருகிறது...
ஒரு முறை மதுரையில் காடு பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நன்கு படித்தவர்கள் பெரிய அளவில் கலந்து கொண்ட அந்த நிகழ்வில், மக்களிடம் காடு பற்றிய புரிதல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிய ஒரு கேள்வியை முன் வைத்தேன்! நீங்கள் மதுரையில் வசிக்கிறீர்கள், வைகை நதிக்கு எங்கிருந்து தண்ணீர் உற்பத்தி ஆகி வருகிறது என்று கேட்டேன்.

அதில் பெரும்பாலானோர் எனக்குச் சொன்ன பதில் "வைகை அணையிலிருந்து தண்ணீர் கிடைக்கிறது" என்றனர்.
அடுத்த கேள்வியைக் கேட்டேன், வைகை அணைக்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது? ஓரிருவர் "முல்லைப்பெரியாறு அணையில் இருந்து" என்றனர். அடுத்த கேள்வியை கேட்டேன் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு முன்பு வைகைக்கு எப்படித் தண்ணீர் கிடைத்தது? எனக்குக் கிடைத்தது ஒரு நீண்ட நிசப்தம்தான்!
இன்றைய மக்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் வரும் என்பது தெரியும், ஆனால் அணைக்கு எப்படித் தண்ணீர் வருகிறது என்பது தெரியாது.. காடு பற்றிய எந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் உள்ளனர் என்பதை தெரிந்து கொண்டேன். எனவே காடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தொடரை எழுத ஆரம்பித்தேன்.
உலகின் மிகப் பெரிய காடுகள்...
இந்த உலகத்தை அமேசான் காடு மட்டும் வாழ வைக்கவில்லை. பரப்பளவில் ரஷ்யா உலகின் மிகப்பெரிய தேசம். காடுகளின் பரப்பளவிலும் ரஷ்யா உலகில் முன்னிலை வகிக்கிறது. இதன் பரப்பளவில் ஏறக்குறைய 49.78 % காடுகளே. இந்தக் காட்டின் பரப்பளவு ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையானது.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய காடுதான் அமேசான் மழைக்காடுகள். "உலகின் நுரையீரல்" என்று வர்ணிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் உள்ள இந்தக் காடுகளின் பரப்பளவு நமது இந்திய நாட்டின் பரப்பளவைக் காட்டிலும் பெரியது.
அடுத்து கனடா, நமது இந்திய நாட்டின் பரப்பளவில் சமமான அளவில் காடுகளைக் கொண்ட நாடு, அடுத்து முறையே அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, காங்கோ, அர்ஜென்டினா இந்தோனேஷியா, இறுதியாக இந்தியா.

இந்த முதல் 10 இடங்களில் கடைசி இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் மொத்த பரப்பளவில் ஏறக்குறைய 24.62% காடுகள். இந்தக் கணக்கை வேறொரு முறையில் சொல்கிறேன், [இது எல்லாம் ஒரு உத்தேச கணக்குதான்] கனடாவில் ஒரு மனிதனுக்கு 8986 மரங்கள் இருக்கின்றன. பிரேசில் நாட்டில்1494 மரங்கள். சீனாவில் ஒரு மனிதனுக்கு 102 மரங்கள். ஆனால் நமது இந்தியாவில் ஒரு மனிதனுக்கு 28 மரங்களே உள்ளன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் உலகில் சுமார் 130 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. காடுகளின் அழிவு பறவைகளின் அழிவு. காடுகளின் அழிவு தண்ணீரின் அழிவு. காடுகளின் அழிவு மனிதனின் அழிவு. காடுகளின் அழிவு உலகத்தின் அழிவு.
காடுகளும் அதன் பல்லுயிர்ச்சூழல்களும் அழிவதற்கு, மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல், நீர்மின் திட்டங்கள், வணிக பயிர்கள், அயல் தாவரங்கள், பிளாஸ்டிக் கழிவுகள், வன உயிரின வேட்டை என நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த அழிவுகள் இன்று தொடங்கவில்லை. காலனிய ஆதிக்கம் தொடங்கும்போதே காடுகள் அழிவைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டன.
ஆங்கிலேயர்கள் கொன்று குவித்த புலிகள்...
இருபதாம் நூற்றாண்டுக்கு முன் இந்திய துணைக்கண்டத்தில் ஒரு லட்சம் புலிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜிம் கார்பெட் (JIM CORBETT) என்ற ஆங்கிலேயர், காலனிய காலத்தில் பதினெட்டாயிரம் புலிகள் இருந்ததாகத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயர்கள் நமது நாட்டை நம்மிடம் ஒப்படைக்கும் போது நம்மிடம் வெறும் ஆயிரம் புலிகளே இருந்தன. எப்படிக் கொன்று அழித்தார்கள் இத்தனை ஆயிரம் புலிகளை!

இந்தியாவின் காடுகளில் புலிகள்தான் அரசன். இன்றும் பூமிப்பந்தில் காட்டில் வாழும் புலிகளில் 80% இந்தியாவில் மட்டுமே உள்ளது. காலனிய ஆதிக்கத்தின் போது இங்கிலாந்தில், " இந்தியத் தேன்நிலவு சுற்றுலா" என விளம்பரம் செய்யப்பட்டு அதில் முக்கிய இணைப்பாக புலிகளின் வேட்டையும் இடம்பெற்றிருந்தது. பெரும் செல்வந்தர்கள், அரச குடும்பத்தினர் இந்தியா வரும்போது அவர்களுக்குப் புலி வேட்டை ஒரு முக்கிய நிகழ்வாகவே மாறிப்போயின. அடிமை இந்தியாவின் சிற்றரசர்கள் தனது படையினருடன் காடுகளுக்குள் சென்று, நாலாபுறமும் புலிகளைத் தேடி விரட்டி ஓரிடத்திற்குக் கொண்டுவர, யானைமேல் இருந்துகொண்டு இங்கிலாந்து செல்வந்தர்கள் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டு வீழ்த்தி அதனுடன் படம் எடுத்துக் கொண்டனர். இப்படியாகக் காட்டில் உள்ள புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கிச் சென்றன. புலிகளால் மனிதனுக்கு என்ன நன்மை? என உங்களுக்குத் தோன்றலாம், அதற்கு இரண்டு சம்பவங்களை உங்களுக்குத் தருகிறேன் !

ஓநாய் என்ன செய்யும் தெரியுமா?
அமெரிக்காவின் எல்லோஸ்டன் நேஷனல் பார்க் [YELLOWSTONE NATIONAL PARK] இதுதான் உலகின் முதல் தேசிய பூங்கா, 1872 இல் இது உருவாக்கப்பட்டது உலகில் அதிகமான காட்டு எருதுகளும் [AMERICAN BISON], மான்களும்[ Elk] கொண்ட ஒரு அழகிய தேசிய பூங்கா.இங்கிருந்து உருவாகும் ஆறுகள் அங்குள்ள பகுதியை வளம் கொழிக்கச் செய்தன, இங்குள்ள ஒரு நீர்நாய் [BEAVERS] ஆற்றுநீரில் சிறு சிறு அணைகள் கட்டி மீன் பிடித்துச் சாப்பிட்டு வாழும்..
இந்த அணைகளில் தேங்கும் நீரானது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, கோடைகாலத்திலும் நீர்க்கசிவு ஏற்படச் செய்து, அங்குள்ள ஆறுகளை வற்றாத ஜீவநதிகளாக மாற்றி வைத்திருந்தது , அங்கு நம் புலிகளைப் போல் காட்டின் அரசனாக ஓநாய் இருந்தது. இந்த ஓநாய், மான்களை எருதுகளை வேட்டையாடி, அவற்றைக் கட்டுக்குள் வைத்திருந்தது. மேலும் அவ்வப்போது ஊருக்குள் வந்து மனிதர்கள் வளர்க்கும் விலங்குகளையும் வேட்டையாடியது. மனிதர்கள் அரசிடம் புகார் தெரிவிக்க, அரசு இங்குள்ள அனைத்து ஓநாய்களையும் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது. 1920-ல் இங்கு உள்ள அனைத்து ஓநாய்களும் கொல்லப்பட்டன.

ஓநாய்கள் இல்லாமல் காட்டு மாடுகள், மான்களின் எண்ணிக்கை அதிகமாகியது, இதனால் புதிய மரங்கள் முளைக்கும் போதே அனைத்தையும் தின்று தீர்த்தன தாவர உண்ணிகள். புதிய மரங்கள் இல்லாமல் காடுகள் அழியத் தொடங்கின, மரங்கள் இல்லாமல் மழையும் பெய்யவில்லை, ஆறுகள் வறண்டன, தண்ணீரின்றி நீர் நாய்கள் இறந்து போயின, சில வேற்று இடங்களை நோக்கிச் சென்றன. ஆறுகள் வறண்டவுடன் செழிப்பு மிக்க அந்தப் பகுதியும் வறண்டு போனது.
காரணத்தைத் தேடியது அமெரிக்கா, அப்போதுதான் தெரிந்தது எண்ணிக்கையில் அடங்காத அளவில் தாவர உண்ணிகள் பெருகி விட்டன என்பதை , முடிவில் 1995 -ம் ஆண்டு மீண்டும் ஓநாய்கள் அங்கு அறிமுகம் செய்யப்பட்டன.

ஓநாய்கள் தாவர உண்ணிகளை வேட்டையாட மீண்டும் கட்டுக்குள் வந்தன. அவற்றின் எண்ணிக்கை, பத்து ஆண்டுகளில் புதிய மரங்கள் உருவாக, காடுகள் பல்கிப் பெருக மீண்டும் ஆறுகளில் தண்ணீர், அணைகட்ட நீர் நாய்கள் மீண்டும் வந்தன, வற்றாத ஜீவ நதியாய் மாறிப்போனது அங்கு உள்ள ஆறுகள்.
இது போல நமது நாட்டில் உள்ள காடுகளில் அரசன் புலிகள், இதை உணர்ந்த இந்திய அரசு 1973 ஆம் ஆண்டு ப்ராஜெக்ட் டைகர் [PROJECT TIGER ] என்ற திட்டத்தைக் கொண்டு வந்து. காடுகளைக் காப்பாற்ற ஆரம்பித்தது.
புலிகளால் மனிதனுக்கு என்ன நன்மை?
புலிகளால் மனிதனுக்கு என்ன நன்மை? என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் நமது தமிழ்நாட்டின் உதாரணத்தையே உங்களுக்குத் தருகிறேன்.
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி 1970 -ம் ஆண்டு வறண்டுபோன நதியாக மாறிப்போனது, தாமிரபரணி உற்பத்தியாகும் காடுகளின் பேரழிவால் வற்றிப் போனது தாமிரபரணி. காரணத்தை உணர்ந்து கொண்ட அரசு, தாமிரபரணி காடுகளைக் காக்க 1988 -ம் ஆண்டு தாமிரபரணி நதி உருவாகும் காட்டுப்பகுதியை களக்காடு புலிகள் காப்பகமாக அறிவித்தது.

காட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. காடுகளை நம்பியுள்ள மக்களுக்கு 1995 -ம் ஆண்டு வாழ்வாதார சூழல் மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்பட்டது.
காடுகளின் முக்கியத்துவம் குறித்து அங்கு வாழும் மக்களுக்கு உணர்த்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டது. 2010 -ம் ஆண்டு, ஏறக்குறைய 22 ஆண்டுகள் கழித்து, தாமிரபரணி காடுகள் வளம் மிக்கதாகமாறின .
1992 -ல் 500 மி.மீ மழையளவு சேர்வலாறு அணைப்பகுதியில் பதிவானது, 2010 -ல் 1300 மிமீ ஆக மழைப்பொழிவு மாறியது. 15000 மில்லியன் கன அடியாக இருந்த காரையாறு அணையின் நீர்வரத்து 2008 -ல் 30 ஆயிரம் கன அடியாக மாறியது, மீண்டும் தாமிரபரணி உயிர்பெற்றது. அனைத்திற்கும் காரணம் புலிகள்தான், ஒரு புலி வாழ 100 சதுர கிலோமீட்டர் கொண்ட காடு தேவை, அந்த நூறு கிலோ மீட்டர் காடுகளில் உள்ள தாவர உண்ணிகளை கட்டுப்படுத்தும் திறன் புலிகளுக்கு அதிகம் உண்டு, ஏனெனில் அவைகள் தான் புலிகளின் உணவு. தாவர உண்ணிகளுக்குத் தேவையான செடிகள், மரங்கள் உருவாக ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் பயணம் செய்து விதை பரவலை ஏற்படுத்தி, காட்டை உருவாக்கும் யானைகளும் தேவை. புலிகள் காப்பகத்தின் மூலம் இவை அனைத்தும் நிறைவேறுவதால் ஆறுகள் வற்றாத ஜீவநதிகளாக மாறுகின்றன.

நமது தமிழ்நாட்டில் 5 புலிகள் காப்பகம் உள்ளன. அதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து உருவாகிறது பவானி ஆறு [ BHAVANI RIVER] முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து உருவாகிறது மாயார் ஆறு [MAYAR RIVER] இந்த இரண்டு ஆறுகளும் காவிரிக்குத் தண்ணீர் கொண்டு செல்கின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீர் அமராவதி அணையை நிரப்புகிறது, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக தண்ணீர்தான் தாமிரபரணியை வற்றாத ஜீவநதியாக மாற்றுகிறது.
வைகைக்குத் ஏன் தண்ணீர் இல்லை?
இயற்கையில் வைகை மேகமலையில் உருவாகி, அழகன்குளத்தில் கடலில் கலக்கிறது. ஆனால் செயற்கையின் படைப்பாக மாமனிதர் கர்னல் பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை மூலமும் வைகைக்கு நீர் கிடைக்கிறது.
இயற்கையான நீர் வளத்தை பெற, வைகை நதி உற்பத்தியாகும் மேகமலை 2021 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் சரணாலயம் முறையாக பராமரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் தாமிரபரணி போல் வைகை ஆற்றிலும் நீர் வரும், வைகையும் வற்றாத ஜீவ நதியாக மாறும்.

பசுமை பாலைவனம்...
மக்களுக்குச் சுற்றுலா செல்லும் முக்கியமான இடங்கள், காடுகளும் மலை சார்ந்த இடங்கள்தான். வால்பாறை போன்ற தேயிலைத் தோட்ட பகுதிகளுக்கு நம் மக்கள் செல்லும்போது "ஆஹா சூப்பர்" என செல்பி எடுத்துக் கொள்வார்கள். ஆனால் என்னுடைய பார்வையில் அது ஒரு" பசுமை பாலைவனம்" அந்தப் பாலைவனங்கள் காடுகளை அழித்து உருவாக்கப்பட்டவை.
எங்கு காலனிய ஆதிக்கம் சென்றதோ அங்கெல்லாம் காடுகள் அழிக்கப்பட்டு, வணிக தோட்டங்களாக மாற்றப்பட்டன. உலகின் அழகிய தேசமாக நான் சிறுவயதில் கருதிய நியூசிலாந்து தேசத்திற்கு ஒருமுறை சென்றேன். பசுமை தேசம் எனக் கனவுடன் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள முழு காடுகளையும் அழித்து வளர்த்த புல்வெளியில் ஆடு, மாடுகள் மேய்ந்தன. என்னுடன் வந்த நண்பர் 'செத்தா இந்த மாதிரி அழகான தேசத்தில் சாகணும்' என்றார். நான் அவ்வாறு பார்க்கவில்லை. அது இயற்கையை அழித்து உருவாக்கப்பட்ட செயற்கை புல்வெளிகள் கொண்ட பசுமை பாலைவனம் என்பேன்.
ஆங்கிலேயர்கள் சென்ற தேசமெல்லாம் காடுகளை அழித்து, உயிரினங்களைக் கொன்று அழித்தனர். அதையும் மீறி ஆப்பிரிக்காவில் எப்படி காடுகள் தப்பின? அங்கு இவ்வளவு உயிரினங்கள் எப்படி தப்பிப் பிழைத்தன? என்ற கேள்விக்கான பதிலை இந்த தொடரில் பார்ப்போம்.
இந்தத் தொடர் , ஒவ்வொரு வீடுகளிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்க்கும் விலங்குகள் பற்றி கூறும், முக்கியமாக ஆப்பிரிக்க விலங்குகள் பற்றிய டிவி சேனலின் தமிழ் எழுத்து வடிவம்.
இனி ஒவ்வொரு வாரமும் ஆப்பிரிக்க காடுகளுக்கு அங்கு உள்ள உயிரினங்களை காண உங்களை அழைத்துக்கொண்டு பயணிக்கிறேன். இடையில் இந்தியக்காடுகளையும் தெரிந்து கொள்வோம்! காட்டை நேசிக்கும், சுவாசிக்கும் உங்களை ஒரு முடிவற்ற ஊர்வலம் காண முடிவில்லா சமவெளி நோக்கி அடுத்த பகுதியில் அழைத்துச் செல்கிறேன்…
- டாக்டர் மணிவண்ணன்.
இவரைப் பற்றி ...
டாக்டர் மணிவண்ணன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ``ஸ்ரீ பார்வதி மருத்துவமனை மற்றும் சர்க்கரை நோய் பராமரிப்பு மையத்தை” நிறுவி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை செய்து வருபவர். கடந்த 5 ஆண்டுகளில் 148 இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். “நோய்களின் தாய்” என்ற இவர் எழுதிய புத்தகம், பல சர்க்கரை நோயாளிகளுக்கு விழிப்புணர்வு வழிகாட்டியாக இருக்கிறது. முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த இரண்டு வருடங்களாகப் பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திவருகிறார். புகைப்படம் எடுப்பதிலும், இயற்கையின் மீதான ஆர்வமும் கொண்ட இவர் நமக்காக எழுதும் சூழலியல் கட்டுரைத் தொடர் இது. நிச்சமாக இயற்கையையும் வனங்களையும் பற்றிய புரிதலை அனைவருக்குள்ளும் ஏற்படுத்தும்.