இந்தியாவில் சிவிங்கிப்புலி இனத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து இரண்டு கட்டமாக 20 சிவிங்கிப்புலிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது. அதில் ஒரு சிவிங்கிப்புலிக்கு மார்ச் 24 -ம் தேதி நான்கு குட்டிகள் பிறந்தன.

அக்குட்டிகளை வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நான்கு குட்டிகளும் மிகவும் பலவீனமாக உடல் எடை குறைந்த நிலையில் இருந்தன. அதில் ஒரு குட்டி பலவீனத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்து போனது. மற்ற மூன்று குட்டிகளுக்கும் உடல் நலம் பலவீனமாக இருந்தன. அவற்றை கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அதில் மேலும் இரண்டு குட்டிகள் இன்று இறந்துவிட்டன. எஞ்சியிருக்கும் ஒரு குட்டியும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. டாக்டர்கள் அதற்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதன் உடல் நிலை மோசம் அடைந்து வருவதாக குனோ தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 20 சிவிங்கிப்புலிகளில் 3 சிவிங்கிப்புலி இறந்துவிட்டது. தற்போது மூன்று குட்டியும் இறந்துள்ளது. இரண்டு மாதத்தில் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன. மார்ச் 27-ம் தேதி நமிபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்து போனது. ஏப்ரல் 13-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட உதய் என்ற சிவிங்கிப்புலி இறந்து போனது.

இம்மாதம் 9-ம் தேதி இரண்டு சிவிங்கிப்புலிகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சண்டையில் பெண் சிவிங்கிப்புலி படுகாயம் அடைந்து இறந்து போனது. இது குறித்து தென்னாப்பிரிக்க சிவிங்கிப்புலிகள் நல வல்லுனர் வின்சென்ட் கூறுகையில், ''மற்ற காட்டு விலங்குகளை ஒப்பிடுகையில் சிவிங்கிப்புலி குட்டிகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும். சிவிங்கிப்புலிகள் இயல்பாகவே அதிக குட்டிகள் போடுகிறது. பலவீனமாக சிவிங்கிப்புலி குட்டிகள் இறந்துவிடும். வலுவான குட்டிகள் மட்டுமே தாக்குப்பிடித்து வாழும்'' என்று தெரிவித்தார்.