Published:Updated:

பசுமையாக இருப்பதெல்லாம் காடல்ல; பல்லுயிர்களை அழிக்கும் பசுமைப் பாலைவனங்கள்..!

பசுமைப் பாலைவனம்

காடுகள் என்பது வெறும் செடிகொடிகளும் மரங்களும் மட்டுமல்ல. அது இந்தப் பூவுலகை இயக்கும் பல்லுயிரினப் பெருக்கத்தை தனக்குள்ளே கொண்டு, இந்த உலகில் உயிர் வாழத் தேவையான பல்வேறு சூழலியல் சேவைகளை ஆற்றும் சூழல் மண்டலம்.

Published:Updated:

பசுமையாக இருப்பதெல்லாம் காடல்ல; பல்லுயிர்களை அழிக்கும் பசுமைப் பாலைவனங்கள்..!

காடுகள் என்பது வெறும் செடிகொடிகளும் மரங்களும் மட்டுமல்ல. அது இந்தப் பூவுலகை இயக்கும் பல்லுயிரினப் பெருக்கத்தை தனக்குள்ளே கொண்டு, இந்த உலகில் உயிர் வாழத் தேவையான பல்வேறு சூழலியல் சேவைகளை ஆற்றும் சூழல் மண்டலம்.

பசுமைப் பாலைவனம்

அனைத்து உயிரினங்களும் மதிப்பு வாய்ந்ததென்றால், உலகத்தில் எத்தனையோ கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன, அவை எல்லாவற்றையும் பாதுகாக்கத்தான் வேண்டுமா? நமக்கு, அதாவது மனிதர்களுக்கு பயனாக இருக்கிற உயிரினங்களை மட்டும் பாதுகாத்தால் போதாதா என்று நீங்கள் எண்ணலாம். இவ்வுலகில் மொத்த உயிர்க்கோளத்தில் வெறும் 0.01 சதவிகிதம் மட்டுமே மனித உயிரினங்கள். மற்றவை அனைத்தும் வன உயிரினங்களே. வன உயிரினங்கள் அனைத்தும் ஒன்றின் மேல் மற்றொன்று பரஸ்பர தாக்கம் ஏற்படுத்தி சார்ந்து வாழும். அதாவது, இவ்வுலகின் அனைத்து உயிரினங்களுக்கும் நீயில்லாமல் நானில்லை என்பதுதான் பொது விதி. அவ்வாறு இவ்வுலகில் இயங்கும் உணவுச் சங்கிலி கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு மனிதர்களும் விதிவிலக்கல்ல.

இந்தப் பந்தத்தில் ஓர் உயிரினம் பாதிக்கப்பட்டாலும், அது ஒரு சங்கிலி தொடர் போல மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும். இவ்வுலகில் இயங்கும் சுழல் மண்டலங்களின் சூழலியல் சமநிலை பாதிக்கப்படும். இவ்வுலகின் அனைத்து உயிரினங்களும், மனிதர்களையும் சேர்த்து பாதிக்கப் படுவார்கள். எங்கேயோ காட்டுக்குள் இருக்கும் ஓர் உயிரினம் எப்படி நம்மை பாதிக்கும்? எப்படி எனக்கு பயனுள்ள வாழ்வை அது வாழ்ந்துகொண்டிருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள்! இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அந்திய ஆக்கிரமிப்பு தாவரங்கள்
அந்திய ஆக்கிரமிப்பு தாவரங்கள்

தற்போதைக்கு, இயற்கையில் எந்த ஓர் உயிரினமும் பயன் இல்லாத உயிரினம் இல்லை; ஒவ்வோர் இனமும் பயனுள்ளவையே என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நமது தொடரின் வில்லனாகிய மனிதன் மட்டுமே பிற உயிரினங்களுக்கு பயனில்லாத வாழ்க்கை வாழ்வதோடு மட்டுமல்லாமல் அவற்றுக்கு தீங்கு ஏற்படுத்தவும் செய்கிறான்.

ஆகவே, நான் ஏற்கெனவே கூறியதுபோல, இயற்கையில் ஒவ்வோர் உயிரினத்துக்கும் ஒரு சூழலியல் பங்கு உள்ளது. அத்தகைய உயிரினங்கள் அனைத்தும் தங்களுடைய பங்கை ஆற்றினால் மட்டுமே இந்த உலகம் சமநிலை தவறாமல் பாதுகாக்கப்படும். மனிதர்கள் மட்டுமன்றி அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற இடமாய் இவ்வுலகம் விளங்கும். இவ்வாறு இயற்கை வகுத்துள்ள விதிகளை மனிதர்களின் அறிவற்ற கற்பனைகளால், சில உயிரினங்கள் மட்டுமே தழைத்து வளர்ந்து, நம் நாட்டில் இயற்கையாகச் செழித்து விளங்கும் வனங்களின் பல்லுயிரின பெருக்க வளத்தை சூறையாடி வருகின்றன.

அந்தக் கற்பனைகளின் விளைவு மனிதர்களால் காடுகளுக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட பூர்வீகமற்ற ஆக்கிரமிப்பு இனங்கள் (Invasive alien species). இவை நம் இயற்கைக் காடுகளின் பல்லுயிரியத்துக்கு எமனாக விளங்குகிறது. சோலைகள் போன்ற மிகவும் மதிப்பு வாய்ந்த சூழல் மண்டலங்களைக் கொண்ட இந்தியக் காடுகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய ஆக்கிரமிப்பு தாவர இனங்களில் பெரும்பான்மையானவை யூக்கலிப்டஸ் (Eucalyptus ), வாட்டில் (Wattle), லண்டானா காமரா (Lantana camara), பைன் (Pine), சைப்ரஸ் (Cyprus), சீமைக் கருவேல் (Prosopis juliflora), பார்த்தீனியம் (Parthenium), யூபடோரியம் (Eupatorium), முயூக்குனா (Mucuna bracteata) போன்றவை ஆகும்.

இவற்றில் பெரும்பான்மையானவை ஆங்கிலேயர்களாலும் அதன் பின்னர் உருவான அரசாங்கங்களாலும் தொழில் வளர்ச்சிக்காகவும், விறகுக்காகவும், அலங்காரத்துக்காகவும் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும். இவற்றில் சில தாவரயினங்கள் கவனக் குறைவால் இந்நாட்டில் ஊடுருவியவை ஆகும். இந்த ஆக்கிரமிப்பு தாவர இனங்கள், அவை ஊடுருவிய இடங்களில் தங்களைச் சுற்றி வளரும் உள்ளூர் வகை தாவரங்களை வளர விடாது. அதன் விளைவு, நமது நாட்டின் இயற்கைக் காடுகள் வந்தாரை வாழ வைத்துவிட்டு அவை அழிந்து போக ஆரம்பித்தன.

அந்திய ஆக்கிரமிப்பு தாவரங்கள்
அந்திய ஆக்கிரமிப்பு தாவரங்கள்

உதாரணமாக, முயூக்குனா என்னும் ஆக்கிரமிப்பு தாவர இனம் ரப்பர் தோட்டங்களில் மூடு பயிராக (Cover crop) வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.  முயூக்குனா மூடு பயிர், களைச் செடிகள் வளர்வதைத் தடுப்பதற்காகவும், மண் அரிப்பை தடுப்பதற்காகவும், மண்ணுக்குத் தேவையான நைட்ரஜன் சத்தை நிலைநாட்டி மண்வளத்தைப் பராமரித்து, ரப்பர் பயிரின் மகசூலை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாவரயினத்தால் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் தீங்குகள் குறித்து அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

இத்தாவரயினம் தீவிரமாக வளரும் தன்மையுடையது என்பதாலும், கொடியாக படர்ந்து உயர்ந்த மரங்களை முழுவதும் சுற்றும் அளவுக்கு வளர்ச்சித் தன்மை கொண்டதாலும், வனங்களின் அருகே வளரும் சூழலில், காடுகள் முழுவதும் பரவ ஆரம்பித்துவிடும். பாதிக்கப்பட்ட காடுகளைச் சுற்றி போர்வை போர்த்தியது போன்று முழுவதும் பரந்து விரிந்து, சூரிய ஒளி ஊடுருவ முடியாமல், அக்காடு முழுவதும் முயூக்குனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பாக மாறிவிடும். சரியாக கூற வேண்டுமென்றால், பசுமைப் பாலைவனமாக மாறிவிடும்.

இது இவ்வாறு இருக்க, குறுகிய கால கண்ணோட்டத்துடன் அலங்கார செடிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட லண்டானா காமரா போன்ற ஆக்கிரமிப்பு தாவரங்கள் பாய் போன்று படர்ந்து, மற்ற தாவரங்கள் அதன் சூழலில் வளர விடாமல் வனங்களை அழித்துவிடும். இதன் சங்கிலித் தொடர் போன்ற விளைவாக, அந்தச் சூழலின் உள்ளூர் தாவரங்கள் மடிந்துவிடுவதால், தாவரவுண்ணிகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி, அதன் தொடர்ச்சியாக மாமிசவுண்ணிகளும் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் வாய்ப்பாய் அமைந்துவிடுகிறது.

அது மட்டுமன்றி இத்தாவர இனத்தின் பழங்களை உண்ணும் விலங்குகள் மற்றும் பறவைகளின் மலக்கழிவுகள் மூலம் வேகமாகப் பரவுவதோடு மட்டுமல்லாமல், தாவர இனப்பெருக்கம் மூலமாகவும் பரவுவதால் குறைந்த காலத்திலேயே மிகவும் வேகமாக வனங்களில் பரவும் தன்மை கொண்டது. மொத்தத்தில், இது போன்ற களைச்செடிகள், புது இடங்களை ஆக்கிரமிக்கும். அங்கு வாழும் உள்ளூர் இனங்களை அழிக்கும். அது வளர்ந்து மென்மேலும் பரவிக்கொண்டேயிருக்கும், ரிப்பீட்டு… என்பது போன்ற கதைதான்.

பசுமைப் பாலைவனம்
பசுமைப் பாலைவனம்

இது போன்ற களைச் செடிகளால் பாதிக்கப்பட்ட வனங்களிலிருந்து, இவற்றை நீக்குவது பெரும் சவாலாக வனத்தின் பாதுகாவலர்களுக்கு விளங்கி வருகிறது. இவ்வாறு வனங்களை பாதிக்கும் ஆக்கிரமிப்பு இனங்கள், வாழ்விடம் அழிப்புக்கு அடுத்தபடியாக பல்லுயிரினப் பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இரண்டாம் பெரிய காரணியாக விளங்கி வருகிறது. இவை பல்லுயிரினப் பெருக்கம் தழைத்து உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அவை மீள உருவாக்கம் செய்வதிலிருந்தும் தடுக்கிறது. ஆகவே, அந்தக் களைச்செடிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மேலோட்டமாக சூழலியல் நோக்கமில்லாமல் பார்க்கும்போது செழிப்பாக பசுமையாகக் காணப்பட்டாலும்கூட, நிதர்சனத்தில் அவை பசுமைப் பாலைவனங்களே.

களைச் செடிகள் மட்டுமல்லாமல் நம் நாடு கொடிய வறுமையில் உழன்று கொண்டிருந்தபோது, உடனடியாக வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்காகவும், தொழில்துறை வளர்ச்சிக்காகவும் காடுகளை அழித்து வளர்க்கப்பட்ட தேயிலை, காபி, ரப்பர் போன்ற தோட்டப்பயிர்கள் விலை மதிப்பற்ற பல்லுயிரினப் பெருக்கம் நிறைந்த வளமிக்க காடுகளுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. இவற்றால் உடனடியாகப் பொருளாதார பலன்கள் கிடைக்கப் பெற்றாலும், இன்று மட்டுமல்லாமல் வருங்கால சந்ததியினருக்கும், ஏன், இந்தப் பூவுலகம் உள்ள வரை மிகுந்த பலன் அளிக்கக்கூடிய பல்லுயிரினப் பெருக்கம் பாதிக்கப்படுவதால் இவையும் பசுமைப் பாலைவனங்களே.

காடுகள்
காடுகள்
Pixabay

இறுதியாக, காடுகள் என்பது வெறும் செடிகொடிகளும் மரங்களும் மட்டுமல்ல. அது இந்தப் பூவுலகை இயக்கும் பல்லுயிரினப் பெருக்கத்தை தனக்குள்ளே கொண்டு, இந்த உலகில் உயிர் வாழத் தேவையான பல்வேறு சூழலியல் சேவைகளை ஆற்றும் சூழல் மண்டலம். ஆகவே, பசுமையான அடர்ந்த காடுகளை மட்டுமன்றி, இவ்வுலகில் நிலவும் பல்வேறு சூழல் மண்டலங்களையும் அதன் இயற்கை குணத்தோடும் பல்லுயிரினப் பெருக்கத்தோடும் பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு அளிப்பது மிகவும் அவசியமாகிறது.

செடிகொடிகள், தாவரங்கள் நிறைந்த பசுமையான பகுதி எல்லா சூழ்நிலைகளிலும் காடுகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதே சமயத்தில், முட்செடிகள் நிறைந்த வறண்ட பாலைவனம்கூட காடுகள் வழங்கும் சுற்றுச்சுழல் சேவைகளை இவ்வுலகுக்கு ஆற்ற முடியும். ஆகவே, மின்னுவதெல்லாம் பொன்னல்ல! பசுமையாக இருப்பது எல்லாம் வனமும் அல்ல!

அவ்வாறு நம் கற்பனைகளிலிருந்து விலகி நின்று விலை மதிப்பற்ற சுற்றுச்சுழல் சேவையாற்றும் பாலைவனங்கள் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.