வளர்ந்து வரும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், சமையலறையில் அத்தியாவசியமான காய்கறிகள், பழங்கள், அடுப்பு போலவே மொபைல்போனும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பெரும்பாலானோர் யூடியூப் பார்த்துக் கொண்டே சமைப்பது என்பது அதிகரித்துவிட்டது. அதேபோல், மொபைல்போனில் பேசிக்கொண்டே சமையல் வேலைகளையும் செய்கின்றனர்.

இவ்வாறு சமையலறையிலும் மொபைல்போனின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், இத்தகைய போக்கு சரியானதா? காஸ் சிலிண்டர், ஃப்ரிட்ஜ், மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன் போன்ற மின் சாதனங்கள் உள்ள நிலையில், கதிர்வீச்சு அபாயமுள்ள மொபைல்போன் பயன்பாடு ஆபத்தை விளைவிக்குமா... இதற்கான தீர்வு என்ன... என்பது போன்ற பல்வேறு கேள்விகள், மனக்குழப்பங்கள் நமக்கு உண்டாகும். இது குறித்த தெளிவைப் பெற, அவசரகால மருத்துவர் சாய் சுந்தரிடம் பேசினோம்...
சமையலறையில் அதிக நேரம் மொபைல்போன் பயன்படுத்தினால், காஸ் சிலிண்டர் விபத்து நேரிட வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே... இது எந்தளவுக்கு உண்மை?

இது உண்மை என்று அடித்துச் சொல்லி விட முடியாது. ஏனெனில், இதுவரை அப்படி நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் சிலவற்றைப் படிக்கும்போது, சமையலறையில் அதிகமாக மொபைல்போன் பயன்படுத்தும் போது, காஸ் சிலிண்டர் விபத்துக்கான வாய்ப்புகளும், சாத்தியக் கூறுகளும் அதிகம் உள்ளதாகத் தெரிய வருகிறது.
தற்போது இருக்கும் போன்கள் 5ஜி தொழில்நுட்ப வகையைச் சேர்ந்தவை. ஆனால், அவற்றுக்கென பிரத்யேகமான, சரியான அலைக்கற்றை மற்றும் மின் கோபுரங்கள் (Tower) இன்னும் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 2ஜி, 3ஜி-க்கானவையே இருக்கின்றன. இதனால் வெளிப்படும் கதிர்வீச்சு மிகவும் வலிமையானது.
சமையலறையில் மொபைல்போன் பயன்படுத்தும்போது, அதிலிருந்து வெளிவரும் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமன்றி தற்போது, சைனா மாடல் மொபைல்போன் போன்ற தரமற்றவையும் சந்தைகளில் கிடைக்கின்றன. இத்தகைய தரமற்ற மொபைல்களில் இருந்து வெளியாகும் வெப்பம், அத்துடன் சமையலறையில் குறைந்தளவு காஸ் கசிவு இருந்தால், அப்போது தீப்பொறி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஃப்ரிட்ஜ் அல்லது ஏ.சி இருக்கும் இடத்திலேயே காஸ் சிலிண்டர் வைப்பது பாதுகாப்பானதில்லை என்று சொல்லப்படுகிறதே?
பொதுவாக ஃப்ரிட்ஜில் இருந்து வெளிவரும் ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் வாயு மிகவும் ஆபத்தானது. பழைய மாடல் ஃப்ரிட்ஜ் என்றால் இன்னும் ஆபத்தானது. நாம் இரவு முழுவதும் அதை ஆன் செய்து வைத்திருக்கும்போது, அதில் இருந்து அதிக அளவு வெப்பம் உற்பத்தியாகும்.
எனவே, என்னதான் நாம் ஏ.சி போட்டாலும் ஃப்ரிட்ஜ் இருக்கும் அறையானது கொஞ்சம் வெப்பமாகத்தான் இருக்கும். அதேபோல், காஸ் சிலிண்டர்களிலும் சில நேரம் மிகக் குறைந்தளவுக்கு காஸ் கசிவு இருக்கலாம். அதுபோன்ற நேரங்களில் வெப்பமும் காஸ் கசிவும் சேரும்போது, அறையில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும். ஆனால், ஒரே அறையில் வைப்பதால் விபத்துகள் எதுவும் நேர்ந்ததற்கான சான்றுகள் இல்லை. இருப்பினும், இந்த விஷயத்தில் நாம் சற்றுக் கவனமாக இருப்பதே நல்லது.
தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களால், வீடுகளில் விதவிதமான எலெக்ட்ரிக் பொருள்களை வாங்கி சமையலறை அருகே அடுக்கி வைத்துவிடுகிறோம். இதில் சிலவற்றை ஒரே சமயத்தில் பயன்படுத்தும் போதோ, சிலிண்டருக்கு அருகே வைக்கும்போதோ, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதா..?

மின் அடுப்பு போன்றவற்றை காஸ் சிலிண்டர் அருகே வைக்கும் போது வெப்பம் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எலெக்ட்ரிக் பொருள்களை வாங்கும்போதும், அவை தரமானவையா என்பதைக் கவனிப்பது அவசியம். அவை தரமாக இருந்தாலும், காஸ் லீக் ஆகும்பட்சத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காஸ் லீக் ஆகாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். காஸ் கசிவைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலானோர் காஸ் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் டியூபை பல ஆண்டுகளாக மாற்றுவதில்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, டியூப் பழையதானால் அதிலிருந்து மிகக் குறைந்தளவு காஸ் கசிவு இருக்கும். இதை மைக்ரோ லீக்ஸ் எனச் சொல்வார்கள். இந்தக் கசிவு, பிற எலெக்ட்ரிக் சாதனங்களில் இருந்து வெளிவரும் வெப்பத்தோடு சேரும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு 10 - 15 சிலிண்டர்களுக்கு ஒருமுறையேனும் ரப்பர் பைப்பை மாற்றுவது நல்லது. சமையலறையில் இருக்கும் சிலிண்டர், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருப்பது நல்லது. சமையலறை காற்றோட்டமாக இருக்க வேண்டியதும் அவசியம்" என்றார் மருத்துவர் சாய் சுந்தர்.