நாம் கடந்த அத்தியாயத்தில் பார்த்தது போல ஓர் இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்துதான் அந்த இடத்தில் தாவர வகையும் செறிவும் இருக்கும். இது நம் அனைவருக்கும் பொதுவாக தெரிந்ததே. தாவரங்களும், தட்பவெட்ப நிலையும் ஒன்றின் மேல் மற்றொன்று பரஸ்பர தாக்கம் ஏற்படுத்தும் தன்மை உடையது. தட்பவெட்பநிலை சீராக, தாவரங்களுக்கு ஏதுவாக இருந்தால், தாவரங்கள் செழித்து வளரும். தாவரங்கள் செழித்து வளர்ந்து அடர்ந்த சோலைகள் உருவானால், தட்பவெட்ப நிலை சீராகவும் பல உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவாகவும் அமையும்.

இவ்வாறு ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலை, மழையின் அளவு, மண்வகை போன்ற உயிரற்ற கூறுகளும், தாவரங்கள், பிற உயிரினங்கள் போன்ற உயிருள்ள கூறுகளும் சேர்ந்து ஒரு சூழல் மண்டலத்தை உருவாக்குகின்றன. இதுவே, உலகின் பொது விதி. ஆனால், இந்தப் பொது விதிக்கு சில விலக்குகளும் உண்டு. உலகின் சில பகுதிகளில் மட்டும் மிகவும் அரிதாக ஒரே தட்பவெப்ப நிலையைக் கொண்டிருந்தாலும் இரு வேறு வகையான தாவர வகைப்பாட்டை காணமுடியும். அவற்றில் ஒன்றுதான், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் சோலைகள்.
`சோலை’ என்ற பதம் அடர்ந்த பசுமை மாறாக்காடுகளை குறிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் இருந்து சோலைக்காடுகளைப் பார்க்கலாம். இதில் தனித்துவம் என்னவென்றால் சோலைகள் என்பது காடுகளை மட்டும் குறிப்பதல்ல. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் பரந்துவிரிந்த புல்வெளிகளினூடே ஆங்காங்கே அடர்ந்த பசுமை மாறா காடுகளைக் கொண்டு இருக்கும் நிலப்பரப்பையே சோலைகள் என்கிறோம்.

பொதுவாக, ஒரு நிலப்பரப்பில் நிலவும் தட்ப வெப்பத்துக்கு ஏற்ப அங்கு தாவரங்கள் வளரும். அந்த நிலப்பரப்பு பரந்து விரியும் போது கொஞ்சம் கொஞ்சமாகத் தட்பவெப்ப நிலை மாறும்போது, தாவரங்களின் வகைகளும் மாறும். ஆனால், பொதுவாக அந்த மாற்றம் படிப்படியாக இருக்கும். உதாரணமாக அதிக மழை இல்லாத வறண்ட பகுதிகளில் உயரம் குறைந்த முட்கள் நிறைந்த மரங்கள் காணப்படும். நல்ல மழையளவு உள்ள சூழல் மண்டலங்களில் அடர்ந்த காடுகள் காணப்படும். இவ்விரண்டு சூழல் மண்டலங்களுக்கும் நடுவே இந்த மாற்றம் படிப்படியாகவே இருக்கும்.
அதாவது, இந்தச் சூழல் மண்டலங்களின் ஓரங்களில் இந்த இரண்டு சூழல் மண்டலங்களிலும் காணப்படும் தாவரங்களையும் விலங்கினங்களையும் காணலாம். ஆனால், சோலைகள் அப்படியல்ல. சோலைகளில் காணப்படும் புல்வெளிகளுக்கும் அடர்ந்த காடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை கழுகு பார்வையாகப் பார்த்தால் எளிதாக ஒரு புகைப்படத்தில் சுட்டிக் காட்டிவிடலாம்.
இயற்கையே அந்த இரண்டுக்கும் உள்ள எல்லையை வகுத்து வரைந்து வைத்தது போன்று எளிதில் பிரித்து பார்த்து விடலாம். எங்கெங்கு காணினும் புற்களை மட்டுமே கொண்டுள்ள சோலை புல்வெளிகளின் நடுவே திடீரென்று சோலை காடுகளை காணலாம். அதாவது, அடர்ந்த காடுகளை காணலாம். பொதுவாக அடர்ந்த காடுகள் நல்ல நீர் வடிகால் வசதி கொண்ட மலைகளின் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் மலைகளின் உயரங்களில் புல்வெளிகளையும் காணலாம். இந்த சோலைக்காடுகள் உலகின் பழைமையான காடுகளில் ஒன்று. இதில் காணப்படும் பசுமைமாறா காடுகள் உயரம் குறைந்தவை ஆகும். சுமார் 25-ல் இருந்து 30 அடி உயரம் மட்டுமே கொண்டவை. இவற்றைத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது குடை போன்று உருண்டையான மேல்பகுதியைக் கொண்ட மரங்களுடன் பல்வேறு வண்ணங்களுடன் காணப்படும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் சோலைக் காடுகளில் இமயமலைகளில் காணப்படும் சிலவகை தாவரங்கள் கூட காணப்படுவது இன்றுவரை அறிவியலாளர்களுக்கு ஆச்சர்யமூட்டும் விஷயமே. மலைகளின் உச்சியில் பலரின் கண்களுக்குப் படாமலேயே அமைதியாய் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புற்களுக்கும் ஒருகாலத்தில் ஆபத்து வந்தது.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்கு வந்த பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக நமது இயற்கை வளங்களான காடுகள் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் போனது. காடுகளை பொருளாதாரம் ஈட்டும் மாபெரும் தொழிற்சாலைகளாக பார்த்தார்கள் அவர்கள். தேக்கு போன்ற விலைமதிப்பற்ற மூலப்பொருள்கள் அவர்களின் கப்பல் கட்டுமானத்துக்குத் தேவைப்பட்டதால், அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளை மிகவும் மதிப்புமிக்கவையாகப் பார்த்தார்கள்.
அவர்களின் காடுகள் குறித்த கற்பனைகளில் புல்வெளிகளுக்கு அப்போது அவர்கள் இடம் அளித்திருக்கவில்லை. சுற்றுச்சூழல் சேவைகளையோ பல்லுயிரினப் பெருக்கத்தின் முக்கியத்துவத்தையோ அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. அவ்வாறான மனநிலையில் ஆட்சியாளர்கள் இருந்தபோது, அவர்கள் கண்ணில் பட்டது இந்த சோலைகள். கண்ணைக்கவரும் சோலை புல்வெளிகளை அவர்கள் எதுக்கும் உதவாதவையாக கருதி தரிசு நிலமாகப் பார்த்தார்கள்.

இன்றும் ஊர்ப்புறங்களில் புற்கள் நிறைந்து காணப்படும் பகுதியை எதற்கும் உதவாத தரிசு நிலங்களாகப் பார்க்கும் மனப்பான்மை பெரும்பான்மையாக நிலவி வருகிறது. இந்த மனப்பான்மையால் சோலைக்காடுகள் பெரிதும் ஆபத்துக்கு உள்ளாகும் நிலைமை வந்தது. சோலைப் புல்வெளிகளை அழித்து எளிதில் வருமானம் ஈட்டக்கூடிய யூகலிப்டஸ் போன்ற மரங்களை நட்டார்கள். ஆனால், எளிதில் மரங்களை வளர விடாத சோலைப் புல்வெளிகள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டின. ஆம், சோலைக்காடுகள் அதன் அருகிலேயே இருந்தும்கூட புல்வெளிகளுக்கான நிலத்தில் அந்த மரங்களை பார்க்க முடியாது. இரண்டும் மிகச் சரியாகப் பிரிக்கப்பட்டது போல் இயற்கையால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சோலைப் புல்வெளிகள் தங்களுக்கான நிலப்பரப்பில் எந்த மரத்தையும் வளரவிடாது. இவ்வாறு சோலைகள் தழைத்து நிற்பதன் இரகசியம்? நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்தது போல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பல்வேறு இயற்கை காரணிகள் சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் ஒன்று சேர்ந்து ஓயாமல் இடைவிடாமல் உழைத்து உருவாக்கிய உட்சபச்ச சுற்றுச்சூழல் மண்டலத்தில் ஒன்று நமது சோலைகள் ஆகும். அவ்வாறு இயற்கை அரும்பாடுபட்டு உருவாக்கிய சூழல் மண்டலத்தை மனிதர்கள் குறைந்த காலத்தில் அழிப்பதற்காக அவை காட்டிய எதிர்ப்பையும் மீறி அவற்றைத் தோற்கடிப்பதற்காக மிகவும் தீவிரமாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
உடனடியாகப் பொருளாதாரம் ஈட்டும் பயிர்களான யூகலிப்டஸ், தேயிலை, காபி போன்ற பயிர்கள் சோலைக்காடுகளுக்கான இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலேயர்கள் அலங்காரத்துக்காக இந்த நிலத்துக்கு ஒவ்வாத பல தாவரங்களை அறிமுகப்படுத்தினர். எத்தனையோ மரங்களை தன்னுடைய நிலப்பரப்புக்குள் வளரவிடாமல் வெற்றிகொண்ட சோலைக்காடுகள், புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட களைச்செடிகளிடம் தோற்றுப்போயின.

சோலைப் புல்வெளிகளில் களைச்செடிகள் பெரிதாக வளர்ந்து அந்தப் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்து சோலைகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. முடிவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பல பகுதிகளில் சோலைகளுக்கான நிலப்பரப்புகள் கணிசமாகக் குறைந்து போயின. பிற்காலத்தில் மனிதர்கள் தாங்கள் செய்த தவற்றை உணர்ந்தார்கள். சோலைகளின் சுற்றுச்சூழல் முக்கியத் துவத்தை உணர்ந்த நேரத்தில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போன்ற கதைதான். மனிதர்களால் இந்த சோலைகளை உருவாக்கவே முடியாது. இயற்கை உருவாக்கிய காடுகளை எந்த சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பது மட்டுமே நம்மால் இயலும்.

சோலைப் புல்வெளிகளின் முக்கியத்துவம்...
சரி. இந்த சோலை புல்வெளிகளின் முக்கியத்துவம்தான் என்ன? ஏன் இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்? சோலை புல்வெளிகள் அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளை விடவும் அதிகமான நீர் பிடிப்புத் தன்மை கொண்டவை. தென்னிந்தியாவில் ஓடும் நதிகள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சோலை புல்வெளிகளில் ஊற்றாகத் தோன்றியவைதான். அதனால்தான் சோலைப் புல்வெளிகளை `மேல்நிலை தண்ணீர் தொட்டிகள்’ என்று அழைக்கிறோம். தண்ணீர் இல்லாமல் எந்த சுற்றுச்சூழல் மண்டலமும் இயங்க முடியாது. அந்தத் தண்ணீரின் ஆதாரத்தை உருவாக்கி அதைப் பிற சுற்றுச்சூழல் மண்டலங்களுக்கும் பயனுள்ள வகையில் செயற்படுவதால் சோலை சுற்றுச்சூழல் மண்டலத்தை அனைத்து சுற்றுச்சூழல் மண்டலத்துக்கும் முதன்மையானதாகக் கருதுகிறோம்.
மேலும், இந்தக் புல்வெளிகள் கரிமத் தன்மயமாக்கத்தில் (Carbon sequestration) மிகவும் திறமை வாய்ந்தது. பொதுவாக, மரங்கள் நிறைந்த காடுகள் கரிமத்தை தனது உடல் பாகங்களில் அதாவது, மண்ணுக்கு மேல் சேகரித்து வைத்துக்கொள்ளும். ஆனால், இந்தப் புல்வெளிகளால் மண்ணுக்குக் கீழே கரிமத்தை சேகரித்து வைத்துக்கொள்ள இயலும். அதுவே மிகவும் சிறந்த கரிமத் தன்மயமாக்க முறையாகும். தற்போது நிலவும் காலநிலை மாற்ற காலகட்டத்தில், சோலைப் புல்வெளிகள் மிகப்பெரிய நன்மையை மனிதர்களுக்கு செய்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் சோலைகளின் பல்லுயிரினப் பெருக்கமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை உணவாக உட்கொள்ளும் விலங்கினங்களும் சோலைகளை நம்பி வாழ்கின்றன.

நமது மாநில விலங்கான நீலகிரி வரையாடு உட்பட பல விலங்கினங்கள் சோலைகளைத் தங்களுடைய வாழ்விடமாகக் கொண்டுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சோலை சுற்றுச்சூழல் மண்டலங்களை எதிர்கால சந்ததியினரைப் பற்றி எந்த முன் யோசனையும் இல்லாமல் கொலை செய்த பொறுப்பு மனிதர்களையே சாரும். தற்போது பெரும்பான்மையான சோலைகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவிக்கப்பட்டு உச்சபட்ச பாதுகாப்பை பெறுகின்றன. இருப்பினும் மனிதர்களின் கடந்த கால தவறுகளால் பல இடங்களில் சோலை புல்வெளிகளுக்கான நிலப்பரப்பு சுருங்கிவிட்டது. சோலைகளுக்கு நாம் இழைத்த அநீதியை சரி செய்ய நாம் பல தலைமுறைகளாக உழைத்தாலும் சோலைப் புல்வெளிகளை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம். காடுகளை பொறுத்தவரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், மனிதர்கள் எடுக்கும் ஒரு தவறான முடிவு பல தலைமுறைகள் ஆனாலும் சரி செய்ய இயலாது என்பதற்கு சோலைகளை நல்ல உதாரணம்.
சோலைகள் போன்ற விலைமதிப்பற்ற சூழல் மண்டலங்களை அழித்து மனிதர்களின் தவறான கற்பனைகளால் உருவான பசுமை பாலைவனங்கள் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.