ஒரு பத்தடி உயரத் தொட்டி இருந்தது. அதில் எட்டடிக்குத் தண்ணீர் நிரப்பி மீன் வளர்த்து வந்தனர். அந்த வகை மீன்கள் வளிமண்டல காற்றை நேரடியாகச் சுவாசிப்பவை. அதனால் அவை நீரின் மேல் பரப்புக்கு அடிக்கடி வந்து காற்றை சுவாசித்துவிட்டுப் போகும். ஒரு நாளில் சுவாசிக்க மட்டும் மீன்கள் அந்தத் தொட்டியில் மேலும் கீழும் என மொத்தத்தில் பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது என்பதை ஓர் ஆராய்ச்சியாளர் கணித்தார்.
அதனால் ஒரு தொட்டியில் ஓர் அடி ஆழத்துக்கு மட்டும் நீரை எடுத்துக்கொண்டார். எட்டடி ஆழத் தொட்டியில் பத்து மீன் குஞ்சுகளும், ஓர் அடி ஆழத் தொட்டியில் பத்து மீன் குஞ்சுகளும் வளர்க்கக் கட்டளையிட்டார். மாணவர்கள் இரு தொட்டிகளில் உள்ள மீன் குஞ்சுகளுக்கும் ஒரே அளவான உணவுகள் வழங்கி வளர்த்து வந்தனர். இவ்வாறாக மீன்களும் வளர்ந்து வந்தன. சில வாரங்களிலேயே ஓர் உண்மை வெளிப்பட்டது.

ஓர் அடி ஆழத் தண்ணீர் தொட்டியில் வளர்ந்த மீன்கள் குண்டாகவும்; எட்டடி ஆழத் தண்ணீரில் வளர்ந்த மீன்கள் உடல் மெலிந்தும் காணப்பட்டன. மேலும், குறைவான தண்ணீரில் மீன் வளர்ப்பதால்... அதிக எடை உள்ள மீன்கள் கிடைக்கின்றன.
மீனை வளர்க்க ஏழு மடங்கு குறைவான தண்ணீரே தேவைப் படுகிறது.
மீன் வளர்க்கச் சிறிய தொட்டியே தேவைப்படுகிறது.
மீன் தொட்டிகளைப் பராமரிக்கும் செலவும் கணிசமாகக் குறைகிறது.
இப்படிப் பல வகையில் லாபம் கிடைக்கிறது எனக் கண்டறிந்தார். ஒரு கல்லில் இரு மாங்காய் என்பார்கள். இங்கு மீன் வளர்ப்பில் ஒரு சிறுமாற்றம் செய்ததால் எவ்வளவு லாபம் கிடைக்கிறது பாருங்கள்.
அவர் இந்தக் கண்டுபிடிப்பை ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டார். இந்த வகையில் மீன் வளர்த்தால் அதிகம் லாபம் கிடைப்பதால் மியான்மார், தாய்லாந்து, வியட்நாம் போன்ற கிழக்காசிய நாடுகளிலும்; சௌதி அரேபியா, ஏமன் போன்ற மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
எடை இழப்பை சரிசெய்ய...
மேலும், பெண் மீன்கள் முட்டையை உற்பத்தி செய்த பின்னர் அதை முதிர்வுடையச் செய்யும்போது தன் உடல் எடையைப் பெரிதும் இழக்கிறது. உடல் மெலிந்து நலிந்த பின்னர், இவை ஒரு வழியாக முட்டையிடுகிறது. அடுத்து முட்டையிலிருந்து குஞ்சுகள் வருகின்றன. வெளிவந்த குஞ்சுகளைத் தாய் பாதுகாப்பாகத் தன் வாயிலேயே வைத்துக்கொள்கிறது. குஞ்சுகள் தாயின் வாயில் பாதுகாப்பாக அதிவேகமாக வளர்கிறது. ஆனால், தாய் சரியாகச் சாப்பிடுவதில்லை. அதனால் அதன் உடல் எடை மேலும் படிப் படியாகக் குறைந்து நலிவடைகிறது.
ஒரு தொட்டியில் 50 சதவிகிதம் பெண்மீன் இருந்தால், இனப்பெருக்க காரணத்தால் எடை பெரிய அளவில் குறைகிறது எனப் புரிந்துகொள்ளலாம். மீன் உற்பத்தியின் கண்ணோட்டத்தில் பார்த்தால் இது மிகப் பெரிய அளவில் இழப்பை உண்டு பண்ணுகிறது.

``இத்தகைய இழப்பை எப்படிச் சமாளிப்பது?" என இந்த ஆராய்ச்சியாளர் சிந்திக்கத் தொடங்கினார். முதல் கட்டமாக மீன்களின் உடலிலிருந்து உற்பத்தியான முட்டைகள் அடங்கிய பையைத் திறம்பட வெட்டி எடுத்தார். இதனால் தாய் மீனுக்குச் சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டது. அதுவும் ஓரிரு நாள்களில் அந்தக் காயம் ஆறிவிட்டது. வெளியே எடுக்கப்பட்ட அந்த முட்டைகளை ஆய்வகத்தில் வைத்து வளர்க்க வழிமுறையைக் கண்டறிந்தனர். ஆச்சர்யப்படும் வகையில் மீன் முட்டைகள் படிப்படியாக வளர்ந்து முதிர்வடைந்தன. அதே நேரத்தில் முட்டை அகற்றப்பட்ட பெண் மீனின் உடல் எடையும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. இங்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் கிடைத்தன.
ஆய்வகத்தில் வளர்ந்த முட்டையிலிருந்து ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் உற்பத்தியாகின. அதனால் மீன் உற்பத்தி தொழிலாளர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர். காரணம் இந்தக் கண்டுபிடிப்பால் மீன் குஞ்சுகளையும் விற்கலாம். இந்தக் கண்டுபிடிப்பு மீன் வளர்ப்பு தொழில் அதிக லாபத்துடன் வேகமாக வளர காரணமானதாக அமைந்தது.
ஒரு விந்தை என்னவென்றால் மீன்கள் சிலகாலம் ஆண்களாகவும் சில காலம் பெண்களாகவும் வாழும் இயல்புடையவை. இயல்பாகவே ஆண் மீன்கள் உடலளவில் சிறியன. மாறாகப் பெண் மீன்களின் உடல் பருமனானது. இந்தச் சூழலில் ஹார்மோன் வேதிப்பொருள்கள் கொண்டு ஆண் மீன்களைப் பெண் மீனாக மாற்றுவது எளிது என உணர்ந்தார். இப்படி வேதிப்பொருள்களைக் கொண்டு ஆண் மீன்களை எல்லாம் பெண்ணாக மாற்றினார். இதனால் அதிக எடையுள்ள மீன்களை உற்பத்தி செய்ய முடிந்தது. விளைவு மீன் வளர்ப்பு மேலும் அதிக லாபமான தொழிலாக மாறியது.

தாயிடமிருந்து வெட்டி எடுத்து கருமுட்டையை ஆய்வகத்தில் வளர்க்க முடிகிறதே. அதே மாதிரி விந்தணுவை ஆய்வு செய்ய அவர் மனம் தீர்மானித்தது போலும். உணவுக்காகச் சந்தையில் விற்பனைக்குத் தயாராக உள்ள ஆண் மீன்களை வாங்கினார். அதில் உள்ள விந்தணுவைச் சோதனை செய்தனர்.
ஆச்சர்யத்தில் உறைந்தே போய்விட்டனர். இறந்து பல மணி நேரத்துக்குப் பின்னும் ஆண் மீன்களின் உடலில் விந்தணு உயிருடன் இருந்தது. இது ஒரு மகத்தான கண்டுபிடிப்பு.
இப்போது மீன் முட்டைகளும் விந்தணுக்களும் அவரின் ஆய்வகத்திலிருந்தன. இவை இரண்டையும் வைத்து நிறைய ஆராய்ச்சிகள் செய்ய முடிந்தது. இப்படிக் குறைந்த பணச் செலவில், இவர் பல ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளார்.
தவமணி ஜகஜோதிவேல் பாண்டியன்...
இந்த ஆராய்ச்சியாளரின் பெயர் தவமணி ஜகஜோதிவேல் பாண்டியன். இவர் 1939-ம் ஆண்டு மதுரையில் சல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற பாலமேடு கிராமத்தில் பிறந்தார். இவரைச் சுருக்கமாகப் பேராசிரியர் T.J. பாண்டியன் என்றே அழைப்பார்கள்.

இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டம் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரே நேரத்தில் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மானியர்கள் விமான பயணச் சீட்டுடன் அழைத்தனர். அமெரிக்கர்கள் அழைப்பு மட்டும் கொடுத்தனர். இவர் தன்னை அதிகம் விரும்பும் ஜெர்மனிக்குச் சென்று ஆராய்ச்சி பணி செய்தார். ஆக, ஜெர்மனியில் உள்ள கெயில் பல்கலைக்கழகத்தில் (Kiel University) ஓர் ஆராய்ச்சிப் பட்டமும் (PhD) சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றார். பின்னர், பழநி செந்திலாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பெங்களூர் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், 1971-ல் இருந்து 2009 வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மேலே பார்த்த அனைத்து கண்டுபிடிப்புக்களும் இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியதே.
மரங்களின் இலைகளில் கோல்சிசின் என்ற வேதிப்பொருள் உற்பத்தியாகிறது. வயதாகிப் பழுத்து கீழே விழும் இலைகளில் இந்தப் பொருள் அதிகம் இருக்கும்.
கீழே விழும் இந்த இலைகளில் இருக்கும் இந்த வேதிப்பொருள் மரத்தின் அருகே பிற செடி கொடிகளை வளரவிடாது. இந்தப் பொருள் புற்று நோய் மற்றும் ஒரு வகை மூட்டுவலிக்கு (gout) மருந்தாகப் பயன்படுகிறது. இந்தப் பொருளைப் பயன்படுத்தி ஒரு செல்லில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடியும். இதனால் மீன்களின் எடை அதிகரிக்கும். இந்த முறையைப் பயன்படுத்திப் பல மீன்களின் உடல் எடையை உயர்த்தியுள்ளார். மேலும், வண்ணங்களில் இவ்வாறு குரோமோசோம்களின் எண்ணிக்கையை மாற்றி பல உடல் அமைப்பு மற்றும் வண்ண மீன்களை உருவாக்கினார். இவ்வகை வித்தியாசமான மீன்களுக்குச் சந்தையில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. இது தவிர இவர் இருநூறுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட மீன்கள் உற்பத்தி மற்றும் பிராயிலர் மீன்கள் உருவாக்கம் என நவீன மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீன்களில் பல ஆராய்ச்சிகளை வழிநடத்தினார்.

புகழ் பெற்ற FASc, FNASc, FNAAS, FTWAS என்ற நான்கு அகாடமியில் பெருமைமிகு உறுப்பினரானார். நம் நாட்டில் இந்தகைய உயர்வுகளைப் பெற்றவர்கள் மிகக்குறைவு. மேலும், இந்தியப் பேராசிரியர் (National Professor) என்ற பட்டமும் பெற்றார்.
இவரின் சிறந்த ஆராய்ச்சிப் பணியைப் பாராட்டி
1978-ல் கூக்கர் விருது (Hooker Award).
1984-ல் இந்திய நோபல் பரிசான சாந்தி சோருப் பட்நாக்கர் விருது (Shanti Swarup Bhatnagar Prize).
1985-ல் ECI விருது.
1991-ல் உலக மீன் நாகா (WorldFish Naga Award) விருது.
1994-ல் K.N.பால் நினைவு தங்கப் பதக்கம் (K. N. Bahl Memorial Gold Medal).
1997-ல் தமிழ்நாடு சிறந்த ஆராய்ச்சியாளர் விருது.
ஆகிய விருதுகளை வென்றுள்ளார். தற்போது மதுரையில் வாழ்ந்து வரும், இவருக்கு வயது 84. நிறைய புத்தகங்கள் எழுதுவது, அறிவியல் சொற்பொழிவாற்றுவது, அறிவியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவது எனத் துடிப்புடன் பணியாற்றி வருகிறார். பணி ஓய்வுக்குப் பின்னர் இருபதுக்கும் மேற்பட்ட அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார்... எழுதிக் கொண்டிருக்கிறார். பாலமேடு காளையாக சீறிப்பாய்ந்து பல அறிவியல் பணிகளைச் செய்து வருகிறார்.