
சிவிங்கிப்புலிகள் உலகில் அதிவேகமாக ஓடும் ஓர் உயிரினம். மணிக்கு 114 கிலோமீட்டர் வரை ஓடும். கண்களுக்குக் கீழ் ஒரு கோடு, வாய் வரை செல்லும் இதன் அழகே தனி. 1.2 மீட்டர் நீளமுள்ள இது நீண்ட வாலைக் கொண்டிருக்கும்
2022-ம் ஆண்டு செப்டம்பரில் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து 8 சிவிங்கிப்புலிகள், இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. இவற்றில் இரண்டு சிவிங்கிப்புலிகள் இறந்துவிட்டன. கடந்த மார்ச் 27 அன்று, ‘சாஷா’ என்ற சிவிங்கிப்புலி சிறுநீரகப் பிரச்னையால் இறந்தது. கடந்த ஏப்ரல் 24-ம் தேதி 6 வயதான ‘உதய்’ என்ற ஆண் சிவிங்கிப்புலி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை என்கின்றனர் வன அதிகாரிகள்.
இதுகுறித்துப் பேசிய தலைமை வனவிலங்கு வார்டன் ஜே.எஸ்.சவுகான், ‘‘நாங்கள் தினசரி சிவிங்கிப்புலிகளைச் சோதனை செய்கிறோம், நலமாக இருந்தன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை உதய் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளது. மற்ற சிவிங்கிப்புலிகள் நலமாக இருக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்துகொண்டுவரப்பட்ட சிவிங்கிப்புலிகள் பூங்காவில தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து, 6 சதுர கிலோமீட்டர் அடைப்பில் ஒரு வாரத்திற்கு முன்புதான் விடப்பட்டன. இந்நிலையில் சிவிங்கிப்புலிகள் இறந்திருப்பது வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காட்டுயிர் ஆர்வலரான டாக்டர் மணிவண்ணனிடம் பேசியபோது, ‘‘சிவிங்கிப்புலிகள் உலகில் அதிவேகமாக ஓடும் ஓர் உயிரினம். மணிக்கு 114 கிலோமீட்டர் வரை ஓடும். கண்களுக்குக் கீழ் ஒரு கோடு, வாய் வரை செல்லும் இதன் அழகே தனி. 1.2 மீட்டர் நீளமுள்ள இது நீண்ட வாலைக் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் தன் சகோதரர்களுடன் வாழும். பெண் சிவிங்கிப்புலிகள் பெரும்பாலும் குட்டியுடன் மட்டுமே வாழும். இதன் இனப்பெருக்க காலம் 3 மாதங்கள். 2 முதல் 8 குட்டிகள் வரை ஈனும். இரண்டு வருடங்கள் குட்டிகளைப் பாதுகாக்கும். சிவிங்கிப்புலிகள் 7 வருடங்கள் வரை உயிர் வாழும்.

வேட்டையாடும்போது, இரைக்கு 200 முதல் 300 மீட்டர் அருகில் சென்ற பிறகு ஓட ஆரம்பிக்கும். மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். இவை, மூன்றே விநாடிகளில் மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகமெடுக்கும். காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் மட்டுமே இவை வேட்டையாடும். பெரும்பாலும் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த காட்டு விலங்குகள் இரவில்தான் வேட்டையாடும். ஆனால், சிவிங்கிப்புலிகள் மட்டுமே பகலில் வேட்டையாடும். இவை மான்கள், காட்டு மாடுகளின் கன்றுக்குட்டிகள், வரிக்குதிரைகளின் குட்டிகளை வேட்டையாடி உண்ணும். வேட்டையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டவை சிவிங்கிப்புலிகள். வேட்டையாடுவதைத் தவிர்த்து ஓரிடத்தில் வைத்து உணவு கொடுத்து வந்ததால் அதன் வழக்கமான சூழல் மாறுபட்டதும் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம்.
விகடன் இணையதளத்தில் சிவிங்கிப்புலிகள் குறித்து எழுதியபோது, ‘சிவிங்கிப்புலிகள் மீட்டுருவாக்கம் செய்ய இந்தியாவிற்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்தியக் காடுகளில் இந்த ஆப்பிரிக்க சிவிங்கிப்புலிகள் எப்படி வாழ்கிறது என்பதைக் காலம் தீர்மானிக்கட்டும்’ என்று எழுதியிருந்தேன். சிவிங்கிப்புலிகளால் இந்தியக் காலநிலைக்கு ஒத்துவாழ இயலவில்லையோ என்ற சந்தேகம் கிளம்புகிறது” என்றார்.

சூழலியலாளர் கோவை சதாசிவத்திடம் பேசியபோது, ‘‘ஒரு நாட்டில் ஏற்கெனவே இருக்கும் விலங்குகளை அழித்துவிட்டு, மற்ற நாடுகளிலிருந்து விலங்குகளைக் கொண்டு வந்து சேர்ப்பது உயிரியல் விதிப்படி தவறானது. ஏனென்றால், விலங்கு என்பது காலங்காலமாக ஒரு தட்பவெட்பச் சூழலில் வாழ்விடம், உணவு என்று வாழ்வது. ஆனால், நம்முடைய சௌகர்யத்திற்காக அவற்றை இடம் மாற்றுவது தவறு. தட்பவெட்பம் மட்டுமன்றி உணவும் முக்கியக் காரணம். அவை வெகுதூரம் சென்று வேட்டையாடி வாழ்கின்ற இனத்தைச் சார்ந்தவை. இவற்றுக்கு நிறைய மான்கள் வேண்டும், பெரிய சமவெளி, புல்வெளி நிலங்கள் வேண்டும். ஆனால், நாம் விட்ட இடங்கள் அவற்றுக்குப் போதுமானதா என்பது கேள்விக்குறி. ஆக, அவற்றுக்கு நாம் கொண்டு வந்து விட்ட இடமும், சூழலும் அதற்குப் போதுமானதாக இல்லாத சூழலில் அவை வேறு விதமான நோய்களால் தாக்கப்பட்டு இறந்துவிடுகின்றன. இனிமேல் வெளிநாடுகளிலிருந்து விலங்குகளைக் கொண்டு வந்து இங்கே மீட்டுருவாக்கம் செய்வதைவிட இந்தியாவில் இருக்கும் உயிர்களைப் பாதுகாப்பதில் வனத்துறையும், அரசும், பொதுமக்களும் கவனம் செலுத்தவேண்டும்” என்றார்.