கேரள மாநிலத்தில் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வந்த கர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் என்பவரின் பதிவின் மூலம் இந்த விவகாரம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் #RIPHUMANITY போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் மக்கள் தங்களின் வேதனைகளைப் பதிவு செய்து வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கேரளாவில் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க எம்.பியும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி, இதைக் கொலை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ``இது போன்ற சம்பவங்களுக்கு மலப்புரம் மிகவும் பிரபலம். இந்தியாவில் வன்முறை நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. உதாரணமாக சாலைகளில் விஷங்கள் தூவுவார்கள். 300 - 400 பறவைகள், நாய்கள் இதன் மூலம் ஒரே நேரத்தில் கொல்லப்படும் சம்பவங்கள் நடக்கும்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் அந்தப் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானே. ஏன் இந்த விவகாரத்தில் இன்னும் மெளனத்தைக் கடைப்பிடிக்கிறார். கேரள அரசாங்கமும் மலப்புரம் பகுதியில் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. அவர்கள் அச்சப்படுகிறார்கள். நாட்டில் 20,000-க்கும் குறைவான யானைகள்தான் இருக்கின்றன. கேரளாவில் மட்டும் 3 நாள்களுக்கு ஒரு யானை கொல்லப்படுகிறது” என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், மாநில வனத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கேரள வனத்துறை அமைச்சர் கே. ராஜு, ``கர்ப்பிணி யானையைக் கொன்றதற்கு காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு விஷயத்தை தெளிப்படுத்த விரும்புகிறேன். இந்தச் சம்பவம் நடைபெற்றது, மலப்புரத்தில் அல்ல பாலக்காட்டில். மேனகா காந்தியின் கருத்து குறித்து, இந்த நேரத்தில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், ``கர்ப்பிணி யானையின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கேரள வனத்துறை இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

இந்த நிலையில் கேரளாவில் தலைமை வனவிலங்குகள் நல காவலர் சுரேந்தர குமார் என்.டி.டிவி-க்கு அளித்த பேட்டியில், ``யானைகளைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுதல் என்ற பிரிவில்தான் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். யாரென்று தெரியாத நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மிக விரைவில் அவர் யார் என்று அவரின் கைது செய்தியின் மூலம் உங்களுக்குத் தெரிய வரும்” என்றார். மேலும், விசாரணைக்காக உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.