சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

“நான் வளர்த்த மரங்களின் மதிப்பு 400 கோடி ரூபாய்!”

திம்மக்கா
பிரீமியம் ஸ்டோரி
News
திம்மக்கா

திம்மக்காவின் வளர்ப்பு மகன் உமேஷ், “இப்போ 109 வயது முடிந்து 110 வயது தொடங்கிவிட்டது. தனக்கான எல்லா வேலைகளையும் அவரேதான் பார்த்துக்கிறார். நான் 18 ஆண்டுகளா அவருடன் இருக்கேன்.

ரசு ஊழியர்கள் 58 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்று விடுகின்றனர். 40 வயதைத் தொட்டாலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என நோய்கள் வரிசை கட்டுகின்றன. வீட்டிலும் வீல் சேரிலும் முடங்கிப்போகும் வயதிலும், பம்பரமாய்ச் சுழன்று காடுகளை விதைத்து, சூழல் காக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார் கர்நாடகாவைச் சேர்ந்த திம்மக்கா. அவருக்கு வயது 110. முன்பு குழந்தைகள் இல்லாமல் தவித்து வந்த திம்மக்காவை, இன்று நாடே இயற்கை அன்னையாகப் போற்றிக்கொண்டிருக்கிறது.
“நான் வளர்த்த மரங்களின் மதிப்பு 400 கோடி ரூபாய்!”

கர்நாடக மாநிலத்தில், குனிக்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மக்கா. திருமணமாகி, நெடுங்காலம் குழந்தை பிறக்கவில்லை. அவரின் வேண்டுதல்களுக்கு பலனும் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில், தற்கொலை முயற்சியில் இறங்கிய திம்மக்கா, பின்பு கணவரின் உதவியுடன் அதிலிருந்து மீண்டு வந்து மரங்களை வளர்க்கத் தொடங்கினார். குனிக்கல், குதூர் சாலை ஓரமாக 400 ஆல மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அதற்கு முன்பு வறட்சியில் தவித்த அந்தப் பகுதி, திம்மக்காவால் இயற்கைப் போர்வைக்குள் மூழ்கியது. நாடு முழுவதும் மரங்களை நட ஆரம்பித்தார். மரங்களுக்காக திம்மக்காவின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. கர்நாடக மக்கள் அவரை, ‘சாலுமரத திம்மக்கா’ என்று பாசமாக அழைக்கத் தொடங்கினர். கர்நாடக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றார். கடந்த ஆண்டு, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திம்மக்காவுக்கு விருது வழங்கியதுடன், அவரிடம் ஆசியும் பெற்றார். தற்போது, கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகம், திம்மக்காவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மல்லேஷ்வரய்யா, திம்மக்காவின் வீட்டுக்கே சென்று டாக்டர் பட்டம் வழங்கியுள்ளார்.

திம்மக்கா
திம்மக்கா

திம்மக்காவிடம் பேசுவதற்காக, அவரது வளர்ப்பு மகன் உமேஷைத் தொடர்பு கொண்டேன். சிறிது நேரத்தில் திம்மக்கா இணைப்பில் வந்தார். 110 வயதிலும் திம்மக்காவின் குரல் தெளிவாகவே இருக்கிறது. ‘சாமியே’ என்று நமக்கு ஆசீர்வாதம் செய்துவிட்டுப் பேசத் தொடங்கினார்.

“எங்க வீட்ல என்னோட சேர்த்து மொத்தம் ஆறு பேரு. நான் மூணாவது ஆளு. எங்க அப்பா, அம்மா கூலி வேலை செஞ்சுதான் எங்களைக் கரையேத்தினாங்க. 20 வயசுல கல்யாணம் ஆச்சு. எங்களுக்கு மட்டும் பலனளிக்கற குழந்தைகளை வளர்க்கறதைவிட ஊருக்கே பலனளிக்கற மரம் நடலாம்னு முடிவு செஞ்சோம். ஆலமரம் நட ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல அந்த மரக்கன்னுங்களை ஆடு மாடுங்க சாப்பிட்டுருச்சு. அதனால, கொஞ்சம் பெரிய கன்றா வளர்த்து, நட ஆரம்பிச்சோம். சுத்தி வேலி போட்டுப் பராமரிச்சோம். அப்ப எங்க ஊர்ல பஞ்சம். 5 கி.மீ தூரம் வரை நடந்து போய்த்தான் தண்ணி எடுத்துட்டு வரணும். நானும் என் கணவரும் மண் பானை செஞ்சு, நடந்து போய் தண்ணி எடுத்துட்டு வந்து மரத்துக்கு ஊத்துவோம். ஒரு தடவ கீழ விழுந்து பானை உடைஞ்சு, எங்களுக்கும் அடிபட்டுச்சு. அப்புறம், வேற பானை செஞ்சு எடுத்துட்டுப் போனோம். இப்ப அந்த மரங்களைப் பார்க்கறப்ப, அவ்ளோ சந்தோஷமா இருக்கு.

ஆரம்பத்துல எங்களைத் திட்டுனவங்க எல்லாம், இப்ப அந்த மரங்களால பலனடைஞ்சுட்டிருக்காங்க. மரங்கள்தான் என் குழந்தைங்க. நான் பெருமையா சொல்வேன், என்னோட குழந்தைங்க நாட்டுக்கு வளத்தைக் கொடுப்பாங்க. என் கணவர் இறந்து 30 வருஷம் ஆச்சு. ஆனா, நான் மரம் வளர்க்கறதை விடல. இப்ப எட்டு வருஷமா பெங்களூருல இருக்கேன். எங்க ஊர்ல ஆஸ்பத்திரி வசதியெல்லாம் இல்ல. எனக்கு சுகர், பிரசர் எதுவும் இல்ல. ஆனாலும், ஆத்திர அவசரம்னா ஆஸ்பத்திரிக்குப் போக இங்க வாடகை வீட்ல தங்கியிருக்கேன். அப்ப அப்ப கிராமத்துல இருக்கற எங்க குடிலுக்குப் போவேன்” என்றவர் சற்று இடைவெளி விட்டார்.

“நான் வளர்த்த மரங்களின் மதிப்பு 400 கோடி ரூபாய்!”

திம்மக்காவின் வளர்ப்பு மகன் உமேஷ், “இப்போ 109 வயது முடிந்து 110 வயது தொடங்கிவிட்டது. தனக்கான எல்லா வேலைகளையும் அவரேதான் பார்த்துக்கிறார். நான் 18 ஆண்டுகளா அவருடன் இருக்கேன். இத்தனை நாளில், மரம் வளர்க்கும் ஆர்வம் மட்டும் அவருக்குக் குறையவே இல்லை. மாதம் சராசரியா 5,000 கி.மீ பயணிக்கிறார். கொரோனாவால இப்போ பயணம் செய்றதில்லை” என்று அவர் பேசி முடித்தவுடன் திம்மக்கா மீண்டும் தொடர்ந்தார்.

“நான் வளர்த்த மரங்களின் மதிப்பு 400 கோடி ரூபாய்!”

“நான் வளர்த்த மரங்களோட, தற்போதைய மதிப்பு ரூ.400 கோடின்னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கு அதெல்லாம் தெரியாது சாமியே. மரத்தை எண்ற பழக்கம் எனக்கு இல்ல. கவர்ன்மென்ட் கொடுக்கற பென்ஷன்லயும், விருப்பப்பட்டவங்க அன்புலயும் என் வாழ்க்கை ஓடிட்டிருக்கு. தமிழ்நாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அங்க இருந்து நிறைய பேர் என்னைய பார்க்க வராங்க. ஒருநாள், தமிழ்நாட்ல இருந்து 60 வயது மதிக்கத்தக்க தம்பதி என்னைய பார்க்க வந்தாங்க. ‘குழந்தைங்க இல்லைன்னு ரொம்ப கஷ்டப்பட்டோம். உங்களைப் பத்திக் கேள்விப்பட்டு மரம் வளர்க்கத் தொடங்கி யிருக்கோம்’னு சொல்லி ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போனாங்க. அப்ப ரொம்ப நெகிழ்ந்துட்டேன். இப்ப நிறைய இடங்களில் மரம் நட கூப்பிடறாங்க. ஆனா, அதையெல்லாம் எப்படிப் பராமரிப்பாங்கன்னு நினைக்கறப்பதான் கவலையா இருக்கும். காரணம், மரம் நடறது ரொம்ப ஈஸி. பராமரிக்கறது ரொம்ப கஷ்டம். கொஞ்சம், கொஞ்சமா காடுகளை நாம் தொலைச்சுட்டிருக்கோம். கிராமங்கள்ல ஓரளவு பரவாயில்லை. இயற்கை இன்னும் உயிரோட்டமா தான் இருக்கு. நகரங்கள்ல மரங்கள் எண்ணிக்கை குறைஞ்சுட்டே இருக்கு. போர் போட்டு தண்ணிய உறிஞ்சி நம்ம வீட்டுக்குள்ளயே கொண்டு வந்துட்டோம். அதனால, மரத்தோட அருமை யாருக்கும் தெரியறது இல்ல. மரம் இருந்தாதான் மழை பெய்யும். மழை பெய்யாட்டி நமக்குத் தண்ணி கிடைக்காது. தண்ணிய அளவா பயன்படுத்தணும்.

குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை மரம் நட்டு வளர்க்கறதைப் பழக்கமாக்கிக்கணும். நான் உயிர் பிழைச்சு, மறு ஜென்மம் எடுத்ததே மரம் வளர்க்கத்தான். இந்தியால இருக்கற எல்லா மரங்களும் என் குழந்தைங்க. அவங்களை நல்லா வளர்த்து, அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுக்கணும். எங்க கிராமத்துல ஆஸ்பத்திரி கட்டணும்னு ரொம்ப நாள் ஆசை. அதேமாதிரி, என் கடைசி மூச்சு வரை மரங்கள் வளர்க்கணும். இது ரெண்டும்தான் சாமியே என் ஆசை” என்று நம்மை ஆசீர்வதிக்கிறார் திம்மக்கா.

இன்னும் ஒரு நூறாண்டு வாழுங்கள் மரங்களின் தாயே!