
சுற்றுலா
ஆலப்புழாப் படகு இல்லங்களில் பயணம் செய்து புளகாங்கிதம் அடைந்திருக்கும் நமக்கு, அதற்கு அருகிலேயே இருக்கும் மாவட்டமான கொல்லத்திலிருக்கும் சொர்க்கபுரி `மன்றோ துருத்து’ தீவு குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. பச்சைப்பசேலென்ற தென்னை மரங்களும், கண்ணுக்குக் குளிர்ச்சிதரும் ஆறும் ஏரியும் சூழ அமைந்திருக்கிறது அது. `துருத்து’ என்றால் `தீவு’ என்று அர்த்தம்.

அஸ்டமுடி ஏரியும், கல்லடா ஆறும் சூழ அமைந்திருக்கிறது மன்றோ துருத்து. வில்லிமங்கலம், நெம்மேனி தெற்கு, நெம்மேனி வடக்கு, கண்ட்ராங்காணி, பட்டந்துருத்து, பேழுந்துருத்து, கிடப்புறம், பெருங்காலம் என எட்டுத் தீவுகளின் கூட்டம் இது. எட்டுத் தீவுகளைத் தன்னகத்தே அடக்கியுள்ளதால் தீவைச் சுற்றியுள்ள ஏரிக்கு `அஷ்டமுடி காயல்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். காருத்ர பாலம் தொடங்கி பேழுந்துருத்து பாலம்வரை சுமார் 13.2 கிலோமீட்டர் சுற்றளவைக்கொண்டது மன்றோ துருத்து.
இது, கேரள மாநிலத்தின் கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கும் ஒரு ரயில் நிலையம் உண்டு. ஆனால், குறிப்பிட்ட சில ரயில்கள் மட்டுமே நின்று செல்லும். ரயில் நிலையம்வரை பேருந்து வசதியும் உள்ளது. காரில் சென்றால், காருத்ர பாலம் தாண்டி மன்றோ தீவுக்குள் நுழைந்தாலே தண்ணீர்ப் பிரதேசமும், தண்ணீருக்குள் அமைந்திருக்கும் கண்டல் காடுகள் (மாங்குரோ காடுகள்) என ரம்மியமான காட்சியை ரசிக்க முடியும். ஓடம், வண்டியில் ஏறிப் பயணிப்பதை அடிக்கடி பார்த்திருப்போம், வண்டிகள் ஓடத்தில் ஏறிப் பயணிப்பதை இங்கு எப்போதும் காணலாம். பெரும்மண் தீவிலிருந்து பேழுந்துருத்துத் தீவுக்குத் தனியார் படகுப் போக்குவரத்து இருக்கிறது. இரண்டு படகுகளை ஒன்றாக இணைத்து இரும்பு ஷீட் மூலம் பிளாட் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தப் படகுகளின் கூட்டணியை, `ஜங்கார்’ என அழைக்கிறார்கள். மனிதர்களையும், பைக், ஆட்டோ, கார்கள் போன்றவற்றையும் அந்தப் படகில் ஏற்றி, மறுபுறம் கொண்டு விட்டுவிடுவார்கள். தினமும் காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணிவரை ஜங்கார் சர்வீஸ் இருக்கிறது. ஒரு நபர் இந்தப் படகில் பயணம் செய்ய 3 ரூபாய் வசூலிக்கிறார்கள். பைக்குக்கு 10 ரூபாய், ஆட்டோவுக்கு 23 ரூபாய், காருக்கு அதன் எடையைப் பொறுத்து 35 ரூபாய் முதல் 45 ரூபாய்வரை வசூலிக்கிறார்கள். இதுபோல கண்ணங்காட்டுப் பாலத்திலிருந்து படிஞாற கல்லடா (மேற்குக் கல்லடை) பகுதிக்கு ஜங்கார் சர்வீஸ் இருக்கிறது.
மன்றோ துருத்தில் சில தீவுகளுக்கு இடையே பாலங்கள் அமைத்து இணைப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். சில தீவுகளுக்குப் படகில் மட்டுமே செல்ல முடியும். மழை வெள்ளத்தில் அடித்துவரும் மரங்கள் மோதுவதால், பாலங்கள் உடைந்துபோவது வாடிக்கை. சாலையில் செல்ல அதிக நேரம் ஆகும் என்பதால், மக்கள் பயணத்துக்காகப் பெரும்பாலும் படகுகளையே பயன்படுத்துகிறார்கள். அவசரத்துக்கு வெளியே சென்றுவர நமது ஊர்களில் டூவீலர் வைத்திருப்பதுபோல, இங்கு வீட்டுக்கு ஒரு வள்ளம் வைத்திருப்பது ஆச்சர்யமான காட்சி. ஆண்களும் பெண்களும் வள்ளம் ஓட்டுவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வாத்து மேய்ப்பவர்கள் தொடங்கி, பேப்பர் போடுபவர்கள், மீன் விற்பவர்கள் என அனைவரின் பயணமும் படகிலேயே கழிகிறது. வள்ளங்களும் படகுகளும் பயணப்படுவதற்கு ஏற்றவாறு தீவில் எங்கு நோக்கினாலும் நீர் வழித்தடங்கள் உள்ளன. நம்மூர்ச் சாலைகளில் வாகனங்கள் செல்வதுபோல மன்றோ துருத்துத் தீவில் தொடர்ச்சியாகப் படகுப் போக்குவரத்து நடந்துகொண்டே இருக்கிறது.

மோட்டார் பொருத்தி இயக்கும் `போட்’டுகளில் பயணம் செய்யும் அனுபவத்தைவிட, பெரிய மூங்கில் கம்புகளைக்கொண்டு செலுத்தப்படும் வள்ளங்களில் பயணிப்பது மனதில் குதூகலத்தை அதிகரிக்கும். சிறிய கால்வாய்களின் ஊடே பயணிக்கும் மூங்கில் துடுப்பு வள்ளங்களில் செல்லும் அலாதி அனுபவம் மன்றோ துருத்துத் தீவில் கிடைக்கிறது. வண்டல் மண் வாசத்தை நுகர்ந்தபடியே வள்ளத்தில் பயணம் செய்ய ஒரு மணி நேரத்துக்கு 350 ரூபாய் முதல் 700 ரூபாய்வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். அஸ்டமுடி காயலின் நடுவே வள்ளத்தில் இருந்தபடி காலையில் சூரிய உதயத்தையும், மாலையில் சூரிய அஸ்தமனத்தையும் கண்டு இயற்கையில் நம்மைத் தொலைக்கும் அனுபவம் இங்கு கிடைக்கும். மனதுக்கு மட்டுமல்ல, நாவுக்கும் சுவையாக அமைகிறது இங்கு கிடைக்கும் ஃப்ரெஷ் மீன் சாப்பாடு. காயல் மற்றும் குளங்களிலிருந்து மீன்களை, துடிக்கத் துடிக்கப் பிடித்து, கறியாக்கிப் பரிமாறும் வீட்டு ஓட்டல்களின் சுவை நாவில் ஒட்டிக்கொள்ளும். அவித்த மீன், பொரித்த மீன் என வயிறு முட்டச் சாப்பிட்டாலும், பர்ஸைப் பதம் பார்க்காத அளவுக்குத்தான் விலை இருக்கிறது. இந்தத் தீவில் வீடுகளை ஒட்டியே குளங்கள் அமைத்து அதில் கரிமீன், செம்மீன் வளர்த்து, கறி சமைத்து விற்பதால்தான் இவ்வளவு குறைந்த விலைக்கு அவர்களால் மீன்களைக் கொடுக்க முடிகிறது. விருந்தினர்கள் வந்தால் நாம் டீ, ஜூஸ் போட்டுக் கொடுப்பதுபோல, இவர்கள் குளத்தில் வலைவீசி மீன்பிடித்து, கறி சமைத்து விருந்தோம்புகிறார்கள். குளங்களில் செம்மீன், கரி மீன் வளர்ப்பது முக்கியத் தொழிலாகவும் விளங்குகிறது. செம்மீன் 110 நாள்களில் வளர்ந்து விற்பனைக்குத் தயாராகிறது. கரிமீன் வளர ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. செம்மீன் கிலோ 450 ரூபாய் முதல் 550 ரூபாய்வரையும், கரிமீன் கிலோ 550 ரூபாய் முதல் 650 ரூபாய்வரையும் விற்பனையாகின்றன.

பார்க்கும் இடங்களிலெல்லாம் கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கும் இந்தத் தீவுக்கு `மன்றோ துருத்து’ எனப் பெயர் வந்ததற்குப் பின்னால் ஒரு வரலாற்றுக் கதை உண்டு. முந்தைய காலத்தில் நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே இந்தப் பகுதியில் இருந்தது. தென்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆலப்புழாத் துறைமுகத்துக்குச் செல்வதற்காகக் கல்லடை ஆற்று வழியாக அஸ்டமுடி காயலுக்கு வந்து சென்றனர். `இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் குயில் பாட்டும், கிளிகளின் கிறீச்சிடும் சத்தமும் கேட்டுக் காலைப்பொழுது விடியும்’ என்பார்கள். ஆனால் மன்றோ துருத்தில், `கயிறு திரிக்கும் ராட்டினச் சத்தம் கேட்டுத்தான் பொழுது விடியும்’ என்கிறார்கள். அதிகாலை 2 மணிக்கே கயிறு திரிக்கும் வேலை தொடங்கிவிடுகிறது. அந்நாளில் இங்கே தென்னைமரத்தில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு பலவகைத் தொழில்கள் நடந்தன. கல்லடை ஆற்றின் குறுக்கே தென்மலை அணை கட்டப்பட்ட பிறகு நன்னீர் வருகை குறைந்தது. மேலும், அஸ்டமுடி காயலில் அரபிக்கடல் நீர் புகுந்துவிட்டது. இதனால் மீன்வளம் குறைந்ததுடன், தென்னை மரங்களும் அழிந்துவருகின்றன. சுனாமிக்குப் பிறகு தண்ணீர் மட்டம் உயர்ந்துவருகிறது.
மன்றோ துருத்தின் சுமார் 50 சதவிகித நிலப்பரப்பு கல்லடை ஆறு தானமாக வழங்கிய பகுதி. `முன்பு ஆறு அடித்துவந்த சேற்றால் உருவான பகுதி’ என்கிறார்கள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்குள் இந்தத் தீவுகள் இருந்த சமயத்தில் ஆங்கிலவழிக் கல்விக்காக மக்களிடம் வரி வசூலிக்கப்பட்டது. திருவிதாங்கூர் ராணியாக இருந்த சேதுலட்சுமிபாய், வரி வசூலிப்பதற்கான அதிகாரத்தை `மன்றோ சாகிப்’ என்ற ஆங்கிலேய கர்னலுக்கு வழங்கியிருந்தார். மன்றோ சாகிப் இந்தத் தீவுகளைச் சேர்ந்த மக்களிடம் வரி வசூலித்து, கோட்டயத்தில் சி.எம்.எஸ் என்ற கல்லூரியைக் கட்டினார். கர்னல் மன்றோ கரம் பிரித்த (வரி வசூலித்த) பகுதி என்பதால், இந்தத் தீவுகளுக்கு, `மன்றோ துருத்து’ எனப் பெயர் வைத்தனர். மன்றோ சாகிப் கட்டிய பழைமையான சர்ச் ஒன்றும் இந்தத் தீவில் இருக்கிறது.

இங்குள்ள பெருங்காலம் தீவில் வேடஞ்சாடி மலை உள்ளது. அந்த மலைக்கென்றும் தனிக்கதை உண்டு. மிகவும் ஆழமான பகுதியாக இருந்ததால், `பெருங்காலம்’ எனப் பெயர் வந்ததாகக் கூறுவார்கள். மலை வேடர் இன மக்கள் வசித்துவந்த இந்தப் பகுதியில், சில முனிவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு வேடனின் மனைவிக்கும் முனிவர் ஒருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதாகவும், ஒருமுறை முனிவருடன் வேடனின் மனைவி சேர்ந்திருந்தபோது, எதிர்பாராமல் அங்கு வேடன் வந்திருக்கிறான். மனைவியுடன் முனிவர் இருப்பதைக் கண்ட வேடன், முனிவரைப் பார்த்து, `பெருங்காலா’ என்று அழைத்தபடியே மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டான். அதனால் இந்தத் தீவு `பெருங்காலம்’ என்றும், வேடன் குதித்து இறந்த மலை `வேடஞ்சாடி மலை’ எனவும் அழைக்கப்படுகின்றன.

ஒருகாலத்தில் இங்கே தென்னை விவசாயம் அதிகப்படியாக நடந்தது. இதனால் கயிறு தயாரிக்கும் தொழில் சிறப்புற்று விளங்கியது. இப்போது தென்னை மரங்கள் வளர்வதற்கு ஏதுவான சூழல் இல்லாததால், அவை அழிந்துகொண்டிருக்கின்றன. தென்னை மரங்கள் மட்டுமல்ல... இங்குள்ள தீவுகளே அழிந்துகொண்டிருக்கின்றன என்பதுதான் கவலையளிக்கும் செய்தி. `புவி வெப்பமாவதால் உலகில் மூழ்கும் முதல் தீவு மன்றோ துருத்து’ எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. இது, இயற்கை ஆர்வலர்களின் மனதில் ஈட்டி பாய்ச்சும் செய்தி. சுனாமிக்குப் பிறகுதான் இந்தத் தீவின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். தீவுகளைச் சுற்றி நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. ஓரளவு உயரத்திலிருக்கும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், இங்குள்ள மக்களுக்கு பீதி ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தீவைக் காப்பாற்ற அரசியலைப் புறந்தள்ளிவிட்டு சர்வ கட்சியினரும் கைகோத்திருக்கிறார்கள். கேரள முதல்வர் தனி கவனம் எடுத்து இந்தத் தீவை ஆய்வுசெய்ய உத்தரவிட்டார். விஞ்ஞானிகளின் ஆய்வில், `தீவிலிருந்த குளங்களை மண்போட்டு நிரப்பி வீடுகள் கட்டியதாலும், சாலை அமைத்ததாலும் தண்ணீர் மட்டம் உயருகிறது; தீவுக்கு அடியில் இரண்டு மீட்டர் ஆழத்தில் சேறும், அதற்குக் கீழ் மணலும் அமைந்திருக்கிறது; தீவைச் சுற்றியிருக்கும் நீர்நிலைகளில் மணல் எடுக்கப்பட்டதால் பாரம் தாங்காமல் வீடுகள் புதைந்துகொண்டே வருவ’தாகக் கூறப்படுகிறது. `நேஷனல் சென்டர் ஃபார் எர்த் சயின்ஸ் ஸ்டடீஸ்’ சார்பில் மன்றோ துருத்துத் தீவில் 12 கற்கள் பதிக்கப்பட்டு, தொடர்ந்து ஆராய்ச்சி நடந்துவருகிறது.

கல்லடை ஆற்றில் ஒவ்வொருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதும், ஆறு அடித்துவரும் சேற்றால் இந்தத் தீவுகளில் புதிய நிலப்பரப்பு ஏற்படும். இப்போது கல்லடை ஆற்றின் குறுக்கே அணை அமைக்கப்பட்டதால், நீர்வரத்து குறைந்தது. பூமிக்கு அடியில் உள்ள வண்டல் மண் மட்கிப்போவதால், தீவுகள் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. கரைப் பகுதி மூழ்குவது, புவி வெப்பமடைவதால் நீர்மட்டம் உயருவது, வண்டல் மண்மீது கட்டிய கட்டடங்கள் புதைந்துபோவது என ஒரே நேரத்தில் மூன்று பிரச்னைகளை இந்தத் தீவு சந்தித்துவருகிறது.

தரைமட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்களின் அஸ்திவாரங்கள் மூன்று ஆண்டுகளில் மண்ணில் புதைந்து, விரைவிலேயே தரைமட்டம் வந்துவிடுகிறது. தீவு மூழ்கிக்கொண்டிருப்பதால், இங்குள்ள மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் மற்றொரு அதிர்ச்சித் தகவல். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது மன்றோ துருத்தில் 10,200 பேர் வசித்திருக்கிறார்கள். இப்போது 9,800 பேர்தான் வசிக்கிறார்கள். புவி வெப்பமடைவதால் மூழ்கும் முதல் தீவான மன்றோ துருத்தை ஆய்வுசெய்து, வருங்காலங்களில் ஒட்டுமொத்த உலகுக்கும் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுபிடிக்கும் நோக்கில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
``கல்லடா ஆற்றில் அடித்துவரப்பட்ட சேறுகள் சேர்ந்து உருவானதுதான் மன்றோ துருத்துத் தீவுகள். சேறுகளால் ஏற்படுத்தப்பட்டதால் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் முறையாக அமைக்கப்படாததால், பூமியில் அமிழ்ந்து போகின்றன. அஸ்டமுடி காயலில் சுனாமிக்குப் பிறகு அலைகள் ஏற்பட்டுள்ளன. அதனால்தான் தீவில் தண்ணீர் ஏறுகிறது. வழக்கமாக தண்ணீர் மட்டம் உயர்ந்த சிறிது நேரத்தில் மெள்ள வடிந்து சென்றுவிடும். ஆனால், பல பாகங்களில் மீன் வளர்க்கும் குளங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் தண்ணீர் அங்கேயே தடுத்து நிறுத்தப்படுகிறது. இந்தத் தீவில் கடந்த ஆறேழு வருடங்களாகத் தண்ணீர் உயர்ந்துவருகிறது. சுத்தத் தண்ணீர் கிடைக்காததால், தென்னை மரங்களுக்குத் தேவையான நியூட்ரியன்ட்ஸ் கிடைக்கவில்லை. கண்டல் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

மன்றோ துருத்து ரயில் நிலையம் வேகமாக மூழ்கிக்கொண்டிருக்கிறது. ரயில் நிலையத்துக் கட்டடங்கள் ரயில் தண்டவாளத்தின் மட்டத்துக்குக் கீழே வந்துவிட்டன. இந்தத் தீவில் 12 இடங்களில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஜி.பி.எஸ் அமைத்தோம். அதிலுள்ள தகவல்களைச் சேகரித்துவருகிறோம். கடந்த 80 ஆண்டுகளில் கேரளத்தில் 12 செ.மீ அளவுக்குக் கடல்மட்டம் உயர்ந்திருக்கிறது’’ என்கிறார், மன்றோ துருத்து குறித்து ஆராய்ச்சி செய்யும் திருவனந்தபுரம் நேஷனல் சென்டர் ஃபார் எர்த் ஸ்டடீஸ் விஞ்ஞானி ராமச்சந்திரன்.
அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் இருக்கும் என்பது மன்றோ துருத்துக்கும் பொருந்துகிறதோ!