மெட்ரோ பணிக்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள சதுப்பு நிலங்களில் மின் கோபுரத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதுப்புநிலங்கள், இயற்கையாகத் தண்ணீரை சேமித்து வைக்கும் அமைப்பு. மழைநீரைச் சேகரிக்கும் இடமாகவும், நீர்வாழ் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்விடமாகவும் இருக்கிறது. ஆனால், வளர்ச்சித் திட்டங்கள் சதுப்பு நிலங்களின் வளமையான சூழலை சீரழிக்கிறது. குப்பைக்கிடங்கு, தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் என்று, சென்னையின் சதுப்புநிலங்களை வளர்ச்சி எனும் பெயரில் சூறையாடப்படுகிறது.

தற்போது அங்குள்ள மின்கோபுரங்களை மெட்ரோ பணிக்காக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவும் சதுப்புநிலத்தை பாதிக்கக்கூடியது என்று விவரிக்கிறார் அறப்போர் இயக்கத்தை சேர்ந்த டேவிட் மனோகர்.
அவர், ``சென்னை மெட்ரோ பணிக்காக மின்கோபுரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கே மின் கோபுரங்கள் இல்லாத வகையில் அகற்றினால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அவற்றை அகற்றினால் சதுப்பு நிலங்களுக்குள்ளேயே மின் கோபுரங்கள் கிடக்கும். இதுதான் சதுப்பு நிலங்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.
ஏற்கெனவே பெரும்பாக்கம் சதுப்பு நிலங்களின் நில அளவை அழித்து அரசு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளை எழுப்பி வருகிறது. இந்நிலையில் மின்கோபுரங்களை அகற்றுவதாகக் கூறி மொத்த சதுப்புநிலத்தையும் தி.மு.க அரசு அழிக்க நினைக்கிறது.

மெட்ரோவை மாற்று வழித்தடத்திலோ, பூமிக்கு அடியிலோ இயக்கலாம். ஆனால், அதற்கு அரசு முன் வர வேண்டும். சதுப்பு நிலங்களை பாதுகாப்பதாகக் கூறி கருத்தரங்குகள் நடத்திக்கொண்டு இருக்கும் அரசு, சதுப்பு நிலங்களை வளர்ச்சித் திட்டம் என்ற பேரில் ஆக்கிரமித்து வருகிறது. பள்ளிக்கரணை சதுப்புநிலம் நன்னீர் தேக்கி வைப்பதற்கானது. ஆனால், குப்பைக்கிடங்கு, தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் முழுவதும் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளன. சதுப்புநிலங்களில் தொடர் ஆக்கிரமிப்பால் கடல் போல் தண்ணீர் இருந்த இடங்களெல்லாம் வீணாகிவிட்டது. சதுப்புநில ஆக்கிரமிப்புகளால் சென்னை வெள்ளத்துக்கான அபாயம் நெருங்கியுள்ளது" என்றார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன், ``சதுப்பு நிலங்கள் நீரியல் மேலாண்மைக்கு இன்றியமையாதது. பல இடங்கள் சதுப்புநிலங்களாக அங்கீகரிக்கப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் பத்து, பதினைந்து சதுப்புநிலங்கள் மட்டுமே அரசால் அங்கீகரிக்கப்பட்டவை. சதுப்புநிலங்கள் என்பன ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. அதனால் அதை பாதுகாப்பது இன்றியமையாதது. அதற்கென சதுப்புநில மேலாண்மை வரையறைகள் மற்றும் திட்டங்கள் உள்ளன. இதற்கென தனி குழு அமைக்கப்பட்டு அக்குழுக்களின் மூலமாகவே சதுப்புநிலங்களின் தன்மையை ஆராய்ந்து எந்தத் திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த முடியும்" என்றார்.

சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காகப் பூமிக்கு அடியில் மெட்ரோ வழித்தடம் அமைக்கலாம் என்ற மாற்றை சிந்திக்கும் போது அதற்கான நிதியும் உழைப்பு சக்தியும் மாநில அரசிடம் இருக்கிறதா என்பதையும் சிந்திக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அரசால் முத்திரையிடப்பட்ட எளிய மக்கள் மறுகுடியமர்த்தப்பட்ட இடம், பெரும்பாக்கம். சென்னைக்குள் இருந்த மக்களை அரசு, நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அகற்றி தற்போது சதுப்புநிலம் இருக்கும் இடத்தில் மக்களை மறுகுடியமர்த்தியுள்ளது. இது போன்ற அரசின் நடவடிக்கையை பார்க்கும்போது எது வளர்ச்சி? யாருக்கான வளர்ச்சி என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.