``அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை எடுப்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறியுள்ளது. தமிழக அரசு, இதை ஒழுங்கு படுத்தும் சட்டத்தை விரைவில் இயற்ற வேண்டும்" என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுக்களில் ``வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பவர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை 2014-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டது. இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. அதனால், அந்த அரசாணைய ரத்து செய்ய வேண்டும்" என்று தங்கள் மனுக்களில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தன் உத்தரவில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு அரசிடம் விவரம் கேட்டுள்ளதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதியின் உத்தரவில், ``வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்தவும் வரைமுறைப்படுத்தவும் சென்னை பெருநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 1987-88-களில், சென்னை பெருநகரப்பகுதி நீர் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வணிக நோக்கில் நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்கு படுத்தவும், வரைமுறைப்படுத்தவும் பிற மாவட்டங்களில் சட்டமோ விதிகளோ ஏதுமில்லை.
அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுப்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி உள்ளது. நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்கு படுத்த வேண்டும்.
2003-ல் நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை சட்டத்தை இயற்றியது. சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அச்சட்டத்தை ரத்து செய்வதாக 2013 செபடம்பர் 14-ல் அறிவித்தது. அதற்குப் பதிலாக நிலத்தடி நீரை மேம்படுத்த ஒருங்கிணைந்த சட்டத்தை இயற்ற முடிவு செய்தது. ஆனால், புதிய சட்டம் கொண்டு வரவில்லை. அதற்குப் பதிலாக 2014-ல் அரசாணை வெளியிட்டது.

தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்துவது குறித்து சட்டம் இயற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். இதை சுட்டிக்காட்டி கடந்த மார்ச் 22-ல் தண்ணீர் தினத்தில் பேசிய முதலமைச்சர், நீர் இல்லையேல் உயிரில்லை.
வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், வரைமுறைப்படுத்தவும் மாநில அளவில் சட்டத்தை உருவாக்க 2019-ல் 2 குழுக்கள் அமைக்கப்பட்டன.
சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் 13.01.2020-ல் தங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தன. ஆனால், இதுவரை நிலத்தடி நீரை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை.
சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் அளவுக்கு அதிகமான அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் குறைந்து உப்பு நீர் கலந்து தமிழகம் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. குடிநீர் பற்றாக்குறையால் 2050-ல் இந்தியா மிகவும் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம் முன்னோர்கள் அதிக நீர்நிலைகளை உருவாக்கினார்கள். நீர் நிலைகளை தெய்வீகமானதாகக் கருதி வழிபட்டனர். ஆனால், அவற்றை பாதுகாக்காமல் நாம் மாசுபடுத்திவிட்டோம்.

நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்தவும் வரைமுறைப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், வரைமுறைப் படுத்தவும் மாநில அளவில் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் வரைவு மசோதா தயார் செய்து சட்டமாக மாநில அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் வரைவு மசோதா தயார் செய்து சட்டமாக்க மாநில அரசுக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? இந்தப் புதிய சட்டம் இயற்றுவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும்.
இந்தச் சட்டம் இயற்றப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலை மாநில அரசு பின்பற்ற வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.