நெல்லை மாநகரத்தை பிளாஸ்டிக் குப்பை இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. அதனால் மாநகரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கும் திட்டம் ஏற்கெனவே அறிமுகப்படுதி செயல்படுத்தி வருகிறது. அதற்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், நெல்லை மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் இன்னும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட மட்காத குப்பைகள் கொட்டப்படுவது முழுமையாக நிற்கவில்லை தற்போது கோடை மழை பெய்வதால் மழைநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடப்பதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கிக் கிடப்பதுடன், சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதனால், நெல்லை மாநகராட்சி சார்பாக பிளாஸ்டிக் பாட்டில்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்கான சிறப்புத் திட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், ``நெல்லை மாநகரம் முழுவதும் 15 இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இது நல்ல தொடக்கமாக அமையும்” எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில் பங்கேற்ற நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, ``நெல்லை மாநகரத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநகரமாக மாற்ற சோதனை முறையில் ஓர் இடத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கினோம். அதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை 20,000 பாட்டில்களை வாங்கியுள்ளோம். அதனால் அந்தத் திட்டத்தை 15 இடங்களுக்கு விரிவுபடுத்தி இருக்கிறோம். அதன் மூலம் 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க முடியும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். மக்களின் ஒத்துழைப்புடன், பிளாஸ்டிக் இல்லாத நெல்லை மாநகராட்சி என்ற இலக்கை விரைவில் எட்டுவோம்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.