திருமலை திருப்பதி ஏழுமலையான் என்றதும் பெருமாள் தரிசனத்துக்கு அடுத்தபடியாக நாம் அனைவரின் நினைவிலும் வருவது புகழ்பெற்ற திருப்பதி தேவஸ்தானத்தின் பிரசாதமான லட்டுதான். இதன் நன்சுவையின் காரணமாகக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில் அதிக அளவில் லட்டுகளை வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த லட்டுகள் பிளாஸ்டிக் மற்றும் துணி பைகளில்தான் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகளை எடுத்துச் செல்ல இனி பனை ஓலைப்பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, ``விரைவில் பனை மற்றும் தென்னை ஓலைகளால் பின்னப்பட்ட பெட்டிகளில் மட்டுமே லட்டுகள் விற்கப்படும். இதற்காக 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் என மூன்று வகையான அளவுகளில் பனை ஓலைப் பெட்டிகள் கவுன்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கிராமப்புற மக்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாகவும், தற்காலத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பனை ஓலைப்பெட்டிகளின் பாரம்பர்ய பின்புலம் மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றி சற்று திரும்பிப் பார்ப்போம்.
பலகாரங்கள், தானியங்கள், அரிசி, சில்லு கருப்பட்டி போன்றவற்றை சேமித்து வைக்க பயன்பட்டவை பனை ஓலைப் பெட்டிகள். இவற்றின் அளவைப் பொறுத்து பெட்டகம், கடகம், கொட்டான்கள் என்ற பெயர்களும் இதற்குண்டு. கைத்திறக் கலைஞர்களால் அழகுற செய்யப்பட்ட இவை பனை ஓலைக்கே உரிய மணமும் தனித்த அழகையும் கொண்டவை.

பனை ஓலைப் பெட்டிகளில் வைத்து பயன்படுத்தும் பொருள்கள் நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் திருமண சீர்வரிசை பொருள்களை பனைஓலையால் செய்யப்பட்ட கைத்திறப் பொருள்களில் வழங்குவதை சமூக அந்தஸ்தாகவே எண்ணி வந்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் பனை ஓலையால் செய்யப்பட்ட கைத்திறப் பொருள்களை விரும்பி வாங்கிச் சென்று வந்துள்ளனர்.
பனைத் தொழிலை நம்பி 10 லட்சம் குடும்பங்கள்...
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மாறிவரும் நாகரிக மாற்றம், பிளாஸ்டிக் பொருள்களின் வருகையின் காரணமாக, பனை ஓலை கைவினைப்பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தற்போது பெரும் பின்னடவை சந்தித்து வருகின்றன. அதுமட்டுமன்றி பனை ஓலை கைத்திறத் தொழில்களை பாரம்பர்யமாகச் செய்து வரும் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. இது போன்ற நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பனையோலையில் லட்டுகள் வழங்கப்படும் அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் பனை ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

பனைத் தொழிலை நம்பி தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் குடும்பங்கள் உள்ளன. பனை ஓலை மக்கிப்போகும் என்பதால் சூழலுக்கு ஏற்றது. அத்துடன் உணவுப் பொருளின் சுவையும் மணமும் சிறப்பாக இருக்கும். உடல் நலத்துக்கும் ஏற்றது. பனை ஓலைகளில் கொழுக்கட்டை செய்யும் பழக்கம் தென்தமிழகத்தில் இன்று வரை உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முடிவைப் போல தமிழ்நாட்டு அரசும் நல்ல முடிவை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பூ, மாலைகள் வைக்கவும், பிரசாதங்கள் கொடுக்கவும் பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.