Published:Updated:

ஒரே நாளில் சென்னையின் மொத்த உணவையும் சாப்பிட்டுவிடும்!

வெட்டுக்கிளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
வெட்டுக்கிளிகள்

படை வெட்டுக்கிளிகள் ஒரு நாளுக்கு 150 முதல் 400 கிலோமீட்டர் வரை பயணிக்கக் கூடியவை.

“வெட்டுக்கிளிக் கூட்டம் கடந்துபோன காடும்

காளகேயர் கூட்டம் கடந்துபோன நாடும்

சுடுகாடாகிவிடும்...”

பாகுபலி திரைப்படத்தில் மகிழ்மதி பேரரசுக்குள் ஊடுருவிப் போர் வியூகங்களைத் திருடியவனைப் பிடித்து விசாரிக்கும் காட்சியில் பிடிபட்ட ஒற்றன் கூறும் வசனம்தான் இது. இப்படிக் கூட்டம் கூட்டமாகப் பெருந்திரளாக வந்து பயிர்கள்மீது படையெடுக்கும் வெட்டுக்கிளிகளைப் ‘படைவெட்டுக்கிளிகள்’ என்று அழைப்பார்கள். அமெரிக்க நாட்டுப்புற மக்களைப் படைவெட்டுக்கிளிகள் எந்த அளவுக்கு அச்சுறுத்தியது என்பதற்கு அவர்களுடைய மக்கள் வழகாற்றுப் பதிவுகளே சாட்சி. ஜெஃப்ரி லாக்வுட் என்ற பூச்சியியலாளர் எழுதிய ‘வெட்டுக்கிளிகள் (Locust: The Devastating Rise and Mysterious Disappearance)’ என்ற நூலில் அவற்றை மீள்பதிவு செய்துள்ளார். வெட்டுக்கிளிகள் படையெடுப்புக்கு உலக வரலாற்றில் இதுபோன்ற ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம்.

இந்தியாவிலும்கூட, ராஜஸ்தான் மாநிலப் பகுதியிலும் பாலைவனப் படைவெட்டுக்கிளிகள் ஒரு சில ஆண்டுகளில் இதுபோன்ற படையெடுப்பைச் சிறிய அளவில் நிகழ்த்தும். ஆனால், கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான படையெடுப்பை இந்தியா இப்போது சந்தித்துள்ளது. அதேபோல், கென்யாவும் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வெட்டுக்கிளிப் படையெடுப்பைச் சந்தித்துள்ளது.

விமானம் மூலமாகவும் வாகனங்கள் மூலமாகவும் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து, கட்டுக்குள் கொண்டு வருவதே விவசாயிகளுக்கு இருந்த ஒரேயொரு தீர்வாகச் சொல்லப்படுகிறது. பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் அரசுடன் ஒன்றிணைந்து இதைச் சரிசெய்யத் தேவையான மருந்துகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்வதாகக் கூறியுள்ளன. ஆனால், நிலைமை மேலும் மோசமடைந்துகொண்டுதான் இருக்கிறது.

படை வெட்டுக்கிளிகள் ஒரு நாளுக்கு 150 முதல் 400 கிலோமீட்டர் வரை பயணிக்கக் கூடியவை. நன்கு வளர்ந்த ஒவ்வொரு வெட்டுக்கிளியும் அதன் உடல் எடைக்கு நிகரான உணவைச் சாப்பிடும். அப்படிப்பட்ட கோடிக்கணக்கிலான வெட்டுக்கிளிகளுக்குத் தீனி போட ராஜஸ்தான் மாநிலம் மட்டுமே போதவில்லை. ஆகவே, ராஜஸ்தானைக் கடந்து உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் பயிர்களையும் வேட்டையாடத் தொடங்கிவிட்டன.

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

பல நேரங்களில் சினிமாக்களில் நடப்பது நிஜத்திலும் நடப்பதுண்டு. வெட்டுக்கிளிப் பிரச்னையும் அப்படியொன்றுதான். `காப்பான்’ படத்தில் வெட்டுக்கிளிகள் பயிர்களை அழிக்கும் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனார்கள். இது உண்மையில்லை. கற்பனை என்று சொன்னவர்கள் அதிகம். ஆனால், அதைவிட பிரமாண்டத் தாக்குதலை வெட்டுக்கிளிகள் நடத்திவருகின்றன. இந்நிலையில், `காப்பான்’ படத்தில் வெட்டுக்கிளித் தாக்குதலை வைக்கும் யோசனை எப்படி வந்தது என்பது குறித்து, இயக்குநர் கே.வி.ஆனந்திடம் பேசினோம்.

‘`ஒரு பாடலுக்காகச் சினிமாக்காரங்க போகாத இடமா போகணும்னு மடகாஸ்கர் போனேன். போயிட்டு ஒரு இடத்தைப் பார்த்துட்டுத் திரும்ப வந்துட்டு இருந்த நேரத்துல லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமா எங்க காரைக் கடந்து போச்சு. கண்ணாடியில எல்லாம் அடிச்சது. வண்டியை உடனே டிரைவர் ஓரமா நிறுத்திட்டாரு. ‘என்னய்யா இது’ன்னு கேட்டேன். ‘நம்மையெல்லாம் ஒண்ணும் பண்ணாது. போற வழியில பல ஆயிரம் ஏக்கர் பயிர்களை அழிச்சுட்டுப் போயிட்டே இருக்கும். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம்’னு சொன்னாரு. அந்தக் கூட்டம் கடந்துபோக அரைமணி நேரம் ஆச்சு. அந்தக் காட்சி அப்படியே என் மனசுல பதிஞ்சுபோச்சு. அதுக்குப் பிறகு, `காப்பான்’ பண்றப்போ, நான் மடகாஸ்கர்ல பார்த்த சீனைக் காட்சியா வைக்கலாம்னு முடிவு பண்ணுனேன். கிராபிக்ஸ் முடிஞ்ச பிறகு பார்த்தப்போ, என்னடா இவ்வளவு பூச்சிகள்னு தோணுச்சு. ஆனா, இப்ப நடந்துகிட்டு இருக்கும் வெட்டுக்கிளிகளோட தாக்குதலைப் பார்த்தா, `காப்பன்’ படத்துல இருக்கறதைவிட அதிகமா இருக்கு’’ என்றார்.

இந்த ஆண்டு, பிப்ரவரி மாதத் தொடக்கத்தின் போதே இந்தியா, ஈரான், பாகிஸ்தான் எல்லைகளில் இவை இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக எச்சரிக்கப்பட்டது. அப்போதே தற்காப்பு முயற்சிகளை மேற்கொண்டி ருந்தால், தற்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பேரிழப்புகளை ஓரளவுக்குக் குறைத்திருக்கலாம்.

மொத்தப் பயிர்களையும் அழித்தும்கூடப் பசியடங்காத பாலைவனப் படை வெட்டுக்கிளிகள், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் என்ற நகர்ப்பகுதியில் மக்கள் குடியிருப்புகளுக்குள் ஊடுருவிவிட்டன. இப்போது அங்கிருக்கும் மரங்கள்மீது அவற்றின் தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. அவ்வப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் விவசாய நிலங்களில் இவற்றின் படையெடுப்பு நிகழும். ஆனால், இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது மிகப்பெரிய படையெடுப்பு. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களில் அவை பரவியுள்ளன. இதுவரை சுமார் 1,23,500 ஏக்கர் பரப்பளவிலிருந்த விளைச்சலை அழித்துள்ளன. ஏற்கெனவே, கொரோனா வைரஸ் பாதிப்புகளிலிருந்து மீண்டுவரப் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இது பேரிடியாக இறங்கியுள்ளது.

இந்த வெட்டுக்கிளிப் படையில், 1 சதுர கி.மீட்டருக்குக் குறைந்தபட்சம் 40 லட்சம் முதல் அதிகபட்சமாக 4 கோடி வெட்டுக்கிளிகள் வரை இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agricultural Organisation) தெரிவித்துள்ளது. அவை ஒரு நாளுக்கு சுமார் 35,000 மக்கள் சாப்பிடும் உணவைச் சாப்பிட்டுத் தீர்க்கின்றன. 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள் இருக்கும் 8 கோடி வெட்டுக்கிளிகள் சென்னையில் வாழ்கின்ற மொத்த மக்கள் தொகைக்குத் தேவைப்படும் ஒருநாள் உணவுத் தேவையை ஒரே நாளில் தின்றுவிடும். இந்தக் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் மொத்தமாகச் சேர்ந்து நாளொன்றுக்குச் சுமார் 200 கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பயணிக்கின்றன. அந்த மொத்த நிலப்பரப்பிலும் அவை சாப்பிட்டுக்கொண்டே செல்கின்றன. இவை தற்போது ஏழு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பரவியிருக்கின்றன. இந்நிலையில் அவற்றின் விளைவு எப்படியிருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துபாருங்கள்.

பொதுவாக, இந்த வெட்டுக்கிளித் தாக்குதல் மார்ச் மாதமே முடிவடைந்துவிடும். ஆனால் இந்தமுறை, மே மாத இறுதியிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் எப்படி நடக்கிறது, இவற்றின் எண்ணிக்கை இவ்வளவு தீவிரமாக அதிகரிக்க என்ன காரணம் என்பன குறித்துப் பேசிய ஆராய்ச்சியாளர் சுல்தான் இஸ்மாயில், “வெட்டுக்கிளிகள் கூட்டமாகச் சேர்ந்து எங்கு உணவும் சூழலும் நன்றாக இருக்கிறதோ அங்கெல்லாம் பயணிக்கின்றன. அப்படிப்பட்ட நிலப் பகுதிகளுக்குச் சென்று இருந்து உணவுண்டு, இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டுவிட்டு அடுத்த இடத்திற்குச் சென்றுவிடுகின்றன. பாலைவனப் பகுதிகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இவற்றுக்கு உகந்த சூழல் நிலவும். ஆகவேதான், இவற்றின் பரவல் கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடங்கியுள்ளது.

இவற்றுடைய இனப்பெருக்கத்தில் இருக்கின்ற பிரச்னை என்னவென்றால், இவை ஈரப்பதம் நிறைந்த மண்ணில் தம் முட்டைகளை இடுகின்றன. இரண்டு வாரத்தில் நிம்ஃப் (Nymph)என்றழைக்கப்படும் வெட்டுக்கிளிக் குஞ்சுகள் வெளியேறுகின்றன. அவை மிகத் தீவிரமாகச் சாப்பிடத் தொடங்கும். தம் உடலிலிருக்கும் மெல்லிய தோலை உரித்துவிட்டு, வளரும் வரைக்கும் நிறைய பறக்கவேண்டும், அதற்கு நிறைய சக்தி வேண்டும். ஆகவே, அவை குறைந்த நேரத்தில் மிகத் தீவிரமாகச் சாப்பிடும். இவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்தான்” என்கிறார்.

மேலும், இந்த அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் பறவைகளின் எண்ணிக்கை குறைந்ததுதான் என்று பலரும் கூறுகின்றனர். “இந்தப் பிரச்னைக்குக் காரணம் பல்லுயிர்ச்சூழல் குறைந்தது என்பது உண்மைதான், ஆனால் பல்லுயிர்ச்சூழல் என்பது பறவைகள் மட்டுமே இல்லை. மண்ணுக்குள் இந்த வெட்டுக்கிளிகள் போன்ற பல பூச்சிகள் இடும் முட்டைகளைச் சாப்பிட்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கக்கூடிய பல்வகை உயிரினங்கள் வாழ்கின்றன. நிலத்திற்கு இட்ட பூச்சிக்கொல்லிகளும் உரங்களும் அந்த உயிரின வளத்தை அழித்தது இதற்கொரு முக்கியக் காரணம்” என்று கூறினார்.

தமிழகத்தின் நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்த வெட்டுக்கிளிகள் வந்துவிட்டதாகச் செய்திகள் பரவிக் கொண்டி ருக்கின்றன. ஆனால், இந்தக் காலகட்டத்தில் ஈரப்பதம் மிக்க மண்ணில் வெட்டுக்கிளிகள் முட்டையிடுவதாலும் இனப்பெருக்கக் காலம் என்பதாலும் அவை நம் கண்ணில் அதிகம் படுகின்றன. ஆனால், வட மாநிலங்களில் நடக்கும் வெட்டுக்கிளிப் பிரச்னையால் இதையும் அதேபோல் கருதிப் பல தவறான செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்திலுள்ள வெட்டுக்கிளிகளால் அதைப் போன்ற பாதிப்புகள் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.

நவீன விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறினாலும் மனிதர்களை அவ்வப்போது மண்டியிட வைப்பதில்தான் இயற்கைக்கு எவ்வளவு ஆசை!

பாகிஸ்தானில் ஒரு கிலோ வெட்டுக்கிளிகளைப் பிடித்துக் கொடுத்தால் அந்நாட்டு மதிப்பில் இருபது ரூபாய் கொடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. பகலில் மட்டுமே வெட்டுக்கிளிகள் செயல்படுகின்றன. இரவில் மரங்களில் ஓய்வெடுக்கும். அந்த நேரங்களில் அவற்றைப் பிடித்துக் கொடுக்கும் பாகிஸ்தானியர்கள், சராசரியாகத் தலா 20,000 பாகிஸ்தானிய ரூபாய் வரை சம்பாதித்துள்ளார்கள். அது மட்டுமன்றி, பாகிஸ்தான் மக்கள் உணவு விடுதிகளில் வெட்டுக்கிளிகளைப் பிடித்துச் சமைத்துச் சாப்பிடத் தொடங்கிவிட்டார்கள். வெட்டுக்கிளிகளில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் ஆப்பிரிக்க நாடுகளிலும், சீனா போன்ற ஆசிய நாடுகளிலும் அவற்றை உணவாகக் கொள்கின்றனர். இந்நிலையில், அளவுக்கு அதிகமாகப் பிரச்னைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்தப் படை வெட்டுக்கிளிகளை பாகிஸ்தானில் மட்டுமன்றி, ராஜஸ்தானின் சில பகுதிகளிலும்கூட பிடித்து வெட்டுக்கிளி பிரியாணி சமைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.