ஆசியாவில் உள்ள மிகப்பழைமையான வளர்ப்பு யானைகள் முகாம்களில் ஒன்றாக முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாம் விளங்குகிறது. தாயைப் பிரிந்த குட்டி யானைகள் முதல், காட்டுயானைகளைக் விரட்டப் பயன்படுத்தப்படும் கும்கி யானைகள் வரை 28 வளர்ப்பு யானைகளை முதுமலையில் உள்ள முகாம்களில் வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பாகன்கள் மற்றும் காவடிகளாக (பாகன்களுக்கு உதவியாக இருந்து யானை பராமரிப்பில் ஈடுபடுபவர்கள்) முதுமலையைச் சேர்ந்த பழங்குடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வளர்ப்பு யானைகளை மேலும் சிறந்த முறையில் பராமரிக்கும் வகையில், பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு தாய்லாந்தில் உள்ள யானைகள் முகாமில் ஒருவார காலம் சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக வனத்துறை முடிவு செய்தது.
இதன் அடிப்படையில் முதுமலையைச் சேர்ந்த வளர்ப்பு யானை பராமரிப்பாளர்கள் 8 பேர் மற்றும் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த 6 பேர் என மொத்தம் 14 பேர், தாய்லாந்துக்கு அனுப்பி வைக்க வனத்துறை திட்டமிட்டிருந்தது. முதுமலையில் இருந்து கிளம்பிய யானை பராமரிப்பாளர்களை, வனத்துறையினர் வழியனுப்பி வைத்தனர். இன்று சென்னையில் இருந்து அவர்கள், தாய்லாந்துக்குச் செல்ல உள்ளனர்.