Published:Updated:

8,500 யானைகளை கொன்று தந்தங்களை சூறையாடிய சீனப்பெண்..! காட்டுக்குள் நடந்த கொடூரம் | சமவெளி-9

ஆப்பிரிக்க யானைகள்
News
ஆப்பிரிக்க யானைகள்

கடந்த 50 வருடங்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் காட்டு யானைகளின் உயிருள்ள தந்தங்கள், உயிரற்ற தந்தங்களாக உலக மக்களின் வீட்டில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் தந்தம் இறக்குமதிக்குத் தடைவிதித்து சட்டங்களைக் கடுமையாக்கினால் மட்டுமே இந்தத் தந்த வேட்டையைத் தடுக்க முடியும்.

Published:Updated:

8,500 யானைகளை கொன்று தந்தங்களை சூறையாடிய சீனப்பெண்..! காட்டுக்குள் நடந்த கொடூரம் | சமவெளி-9

கடந்த 50 வருடங்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் காட்டு யானைகளின் உயிருள்ள தந்தங்கள், உயிரற்ற தந்தங்களாக உலக மக்களின் வீட்டில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் தந்தம் இறக்குமதிக்குத் தடைவிதித்து சட்டங்களைக் கடுமையாக்கினால் மட்டுமே இந்தத் தந்த வேட்டையைத் தடுக்க முடியும்.

ஆப்பிரிக்க யானைகள்
News
ஆப்பிரிக்க யானைகள்

சென்ற அத்தியாயத்தில் கான மயிலையும் சிங்கத்தையும் பார்த்த நாம், தற்போது செரங்கெட்டி தேசிய பூங்காவின் வடக்குப் பகுதியில்  (NORTHERN SERENGETI) நுழைகிறோம். இங்கு வளர்ந்துள்ள உயரம் குறைவான புற்கள், சற்று இனிப்பானவை! லேக் விக்டோரியா மற்றும் லோபோ சமவெளிகள் ( LOBO VALLEY) வழியாக சற்றுப் பிரிந்து வருகின்றன இந்த விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி!

இந்தப் பகுதியில்தான் உலகப் புகழ்பெற்ற ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் குருமெட்டி (GRUMETI RIVER) மற்றும் மாரா (Mara River) ஆறுகள் ஓடுகின்றன.

ஆற்றைக் கடக்கும் மாடுகள்
ஆற்றைக் கடக்கும் மாடுகள்

இவற்றை இந்த விலங்குகள் தாண்டிச் செல்லும் நிகழ்வு, ஒரு அற்புதமான நிகழ்ச்சி. ஏறக்குறைய நமது ஜல்லிக்கட்டு போல... ஆனால் அங்கு மனிதர்கள் இல்லை. மாடுகளை வேட்டையாட ஆறுகளில் முதலைகள் (NILE CROCODILE) உண்டு. வருடக் கணக்கில் உணவுக்காகக் காத்திருக்கும் இவை இந்த மூன்று மாதங்களில் முடிந்த அளவு வேட்டையாடி,  ஒரு வருடத்திற்கான உணவை மூன்றே மாதங்களில் சாப்பிட்டு நிறைவடைகின்றன. ஆறுகளைத் தாண்டும்போது தண்ணீரில் மூழ்கியும், காயம் பட்டும், முதலையால் கொல்லப்பட்டும், ஏராளமான காட்டு மாடுகள், மான்கள், வரிக்குதிரைகள், இங்கு உயிரிழக்கின்றன. இயற்கையின் சோக நிகழ்வு இது. இருப்பினும் அதன் இன்னொரு பக்கத்தையும் நாம் பார்ப்போம்!

காட்டு மாடுகள் இங்கு உயிரிழந்து முதலைகளுக்கு, கழுகுகளுக்கு மட்டுமின்றி சிறு உயிரினங்களான கீரிகளுக்குக் (MONGOOSE)  கூட உணவு அளிக்கின்றன. இந்த ஆறுகளில் வாழும் மீன்களுக்கு 50 சதவீத உணவுத் தேவையை இந்த விலங்குகளின் சடலங்கள் பூர்த்தி செய்கின்றன.

மாடுகளின் உடல்களைச் சாப்பிட, மாரா ஆற்றின் ஓரத்தில் காத்திருக்கும் கீரிப்பிள்ளைகள்
மாடுகளின் உடல்களைச் சாப்பிட, மாரா ஆற்றின் ஓரத்தில் காத்திருக்கும் கீரிப்பிள்ளைகள்

இந்தச் சடலங்கள் மக்கிப் போவதற்கு இரண்டு முதல் 10 வாரங்கள் ஆகலாம். அதில் புழுக்கள் உருவாகி அதற்கும் உணவளிக்கின்றன. காட்டு மாடுகள், இறுதியாக இதன் எலும்புகள் மக்கிப் போவதற்கு ஏழு வருடங்கள் ஆகின்றன. அதிலிருந்து கிடைக்கும் பாஸ்பரஸ் (PHOSPHORUS) மற்றும் கால்சியமும் (CALCIUM) இந்த ஆறுகளில் நிறைந்து பாசிகள், பூச்சிகள், மீன்களுக்கு நுண்ணுயிர் சத்தை வழங்குகின்றன.

ஆற்றைக் கடந்து மேலே ஏறும் திறன் மற்றும் அதிர்ஷ்டம் உள்ள விலங்குகள், இங்கு இரண்டு மூன்று மாதங்கள் முகாமிட்டு மெல்ல நகர்கின்றன. ஆகஸ்ட் மாத இறுதியில் அடுத்த நாட்டுக்குள் அவை நுழையும் முன்பாக இங்குள்ள முக்கியமான ஒரு விலங்கைப் பார்த்துவிடுவோம்!

சிங்கம், சிறுத்தை உட்பட அனைத்து விலங்குகளும் ஒருசேர வாழும் பகுதி இது. இங்கு அதிகம் காணப்படுவது யானைகள் ஆப்பிரிக்க யானைகள் (AFRICAN ELEPHANTS). 10 அடி உயரம் கொண்டவை, இதன் எடை 6000 கிலோ. இதன் தும்பிக்கை நுகர்ந்து எதிரிகளைக் கண்டறியவும், மூச்சு விடவும், குழந்தையைப் பேணவும், தண்ணீர் உறிஞ்சவும், உணவுக்காகவும் பயன்படுகிறது.

ஆப்பிரிக்க யானைகள்
ஆப்பிரிக்க யானைகள்

ஆசிய யானைகளைப் போலன்றி ஆப்பிரிக்க பெண் யானைகளுக்கும்  தந்தம் உண்டு. தந்தம் என்பது அதன் பற்கள்தான். இவை பிறக்கும்போதே தந்ததுடன் பிறக்கும். நம் குழந்தைகளைப் போலவே ஒரு வருடத்தில் சிறிய தந்தம் விழுந்து பெரிய தந்தம் உருவாகி வளர்கின்றது.

ஆப்பிரிக்க யானை
ஆப்பிரிக்க யானை

இந்தத் தந்தங்கள் ஆயுள் முழுவதும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். யானைகள் பெரிய காதுகள் கொண்டவை. காதுகள் உடல் வெப்பத்தை வெளியேற்ற, தகவல் தொடர்புக்காக அடித்துக்கொண்டே இருக்கின்றன. இதன் காதுகள் நான்கு கிலோமீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்தத்தையும் உணரக்கூடியது. தகவல் தொடர்புக்காக 10 விதமான ஒலிகளை, இவை தனக்குள் எழுப்பிக் கொள்கின்றன.

கூட்டமாக வாழும் இவை, Matriarch என அழைக்கப்படும் தலைவியின் வழி நடத்தப்படுகிறது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை குட்டிகளை ஈனும், கர்ப்பகாலம் 22 மாதங்கள். உலகின் நீண்ட கர்ப்பகாலம் உடைய விலங்கு இதுதான். குட்டி ஆண் யானைகள் வளர்ந்தவுடன் 14 வருடங்களில் குழுவை விட்டு வெளியேறுகின்றன, ஆண்கள் குழு அமைத்து பேச்சிலர் பாயாக (Bachelor Boys) சுற்றித் திரிகின்றன.

ஆப்பிரிக்க யானைகள்
ஆப்பிரிக்க யானைகள்

அபார நினைவாற்றல் கொண்ட இந்த வனவிலங்கு தான்சானியாவில் சுமார் 60,000 எண்ணிக்கையில் உள்ளது. தண்ணீரில்லா வறட்சிக் காலங்களில் நீர் நிலைகளை கண்டறிந்து தோண்டி தாகம் தீர்த்துக் கொண்டு ( யானைகளுக்கு ஒரு நாளைக்கு 200 கிலோ உணவும் 100 லிட்டர் தண்ணீரும் தேவை), பிற விலங்குகளுக்கும் தண்ணீரை வழங்குகிறது யானைகள்.

தன் கழிவுகளின் மூலமாக விதை பரவல் செய்து காடுகளை உருவாக்குகின்றன யானைகள். தான் உருவாக்கிய காடு வழியே செல்லும் காட்டு மாடுகளை பார்த்துக்கொண்டே வழி அனுப்பி வைக்கின்றன யானைகள்.

யானைகளைப் பற்றி சொல்லும் போது தான்சானியா காடுகளில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திலும் யானைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நபரை அறிந்து நம் பயணத்தை தொடர்வோம்…??

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் திருமதி.யாங் | Yang Feng Glan
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் திருமதி.யாங் | Yang Feng Glan

1970 ஆண்டு, சீனாவைச் சேர்ந்த,  பெண்மணி யாங் (YANG) என்பவர், சீனாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தான்சானியா மொழி கற்று, பட்டம் பெற்று, சீனாவின் உதவியோடு நடைபெறும் தான்சானியா மற்றும் ஜாம்பியா (ZAMBIA) இடையிலான ரயில்வே திட்டப் பணியில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்ற,  தான்சானியாவுக்கு வருகிறார். அப்போது யாருக்கும் தெரியாது, இவர்தான் ஆப்பிரிக்க யானைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார் என்று..

மரத்தில் தனக்கான உணவை பறிக்கும் யானை
மரத்தில் தனக்கான உணவை பறிக்கும் யானை

1975 ஆம் ஆண்டு, அந்த ரயில்வே திட்டப் பணிகள் முடிவடைந்ததும், மீண்டும் சீனாவிற்குத் திரும்புகிறார். அங்கு 23 வருடங்கள் அரசு வேலை பார்த்துவிட்டு 1998-ல் மீண்டும் தொழில் தொடங்க தான்சானியா வருகிறார். தான்சானியாவில் உள்ள தருசலாம் (Dar-Es-Salaam) நகரில் சைனீஸ் ரெஸ்டாரன்ட் மற்றும் ஒரு முதலீட்டு நிறுவனமும் (Beijing Great Wall Investment) தொடங்குகிறார்.

2014-ம் ஆண்டு தான்சானியாவில் மிக முக்கியமான தொழில் அதிபராக உருவானார். தான்சானியாவில் உள்ள சீனா, ஆப்பிரிக்கா வர்த்தகக் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். (Secretary-General Of The Tanzania China-Africa Business Council)!

கொல்லப்பட்ட யானைகளின் தந்தம்
கொல்லப்பட்ட யானைகளின் தந்தம்

இவருக்கும் ஆப்பிரிக்க யானைக்கும்  என்ன தொடர்பு என யோசிக்கிறீர்களா? சொல்கிறேன் 2015-ம் ஆண்டு தான்சானியா புலனாய்வு அமைப்பு (Tanzania's National And Transnational Serious Crimes Investigation Unit) தான்சானியாவின் யானைத்தந்த கடத்தல்காரர்கள் யார்? என கண்டறிய முயன்றது. அவர்களால் சிறு, சிறு கடத்தல்காரர்களை மட்டுமே கைது செய்ய முடிந்தது. இதன் வேர் முடிச்சு எங்கிருந்து தொடங்குகிறது? எனக் கண்டுபிடிக்க இயலவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருட போராட்டத்திற்குப் பின்பு, அந்த வேர் முடிச்சு கண்டறியப்பட்டு, நமது சினிமா மாதிரி நீண்டதூரம் காரில் விரட்டிச் சென்று, கைது செய்தனர் கடத்தல்காரரை, இல்லை கடத்தல்காரியை!!!

அவர்தான் நான் சொன்ன திருமதி யாங். ஆனால் இதற்குள் நிலைமை கைமீறி விட்டது. ஏனெனில் 2000 ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தான்சானியா காடுகளில் 60% யானைகள் அழிந்து போயின. ஏறக்குறைய 8,500 யானைகள் கொல்லப்பட்டுவிட்டன.  கொல்லப்பட்ட யானைகளின் தந்தம் உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களின் வாயிலாக விற்கப்பட்டன, எல்லா நிறுவனங்களும் ஒரு சீன நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தன, அந்தத் தொடர்பை உருவாக்கி வழிநடத்தியவர் திருமதி.யாங், சீனாவில் வீட்டு அலங்காரப் பொருளுக்காக யானைகளும், மருந்துக்காக காண்டாமிருகங்களும், ஆப்பிரிக்காவில் வேட்டையாடப்பட்டன.

யாங் இதன் மூலம் 8.5 மில்லியன் யுஎஸ் டாலர் கடந்த பத்து வருடங்களில் சம்பாதித்து இருந்தார். 66 வயதான இவர்  தான்சானியா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தற்போது பதினைந்து வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில்  இருக்கிறார். இதனால் இவர் "தந்த ராணி" என பொருள்படும் "Ivory Queen" என்று தான்சானியாவில் அழைக்கப்படுகிறார்.

கட்டுரையாளர்: டாக்டர் மணிவண்ணன்
கட்டுரையாளர்: டாக்டர் மணிவண்ணன்

கடந்த 50 வருடங்களில் ஏறக்குறைய ஒரு லட்சம்  காட்டு யானைகளின் உயிருள்ள தந்தங்கள், உயிரற்ற தந்தங்களாக உலக மக்களின் வீட்டில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் தந்தம் இறக்குமதிக்குத் தடைவிதித்து சட்டங்களைக் கடுமையாக்கினால் மட்டுமே இந்தத் தந்த வேட்டையைத் தடுக்க முடியும். இதைச் சொல்லும்போது நம்ம ஊர் கதையும் உங்களுக்கு ஞாபகம் வரும் என நினைக்கிறேன்.

சரி… இப்ப நான் விசயத்துக்கு வருவோம். நமது காட்டு மாடுகள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் அடுத்த நாடு நோக்கி பயணம் செல்கிறது… எந்த நாடு? அவை அங்கு சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்பது குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்...