அறிவிப்புகள்
கார்ட்டூன்
சமூகம்
Published:Updated:

யானையும் சிறுத்தையும் உலவும் இடத்தில் குடியிருப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலை
பிரீமியம் ஸ்டோரி
News
மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அத்துமீறும் அரசு

‘மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் யானைகளின் வலசைப் பாதையை ஆக்கிரமித்து விதிகளை மீறிக் கட்டடம் கட்டுகிறார்கள்; வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் உண்டாக்குகிறார்கள்’ என்று ஆன்மிக நிறுவனங்கள்மீதும், கல்வி நிறுவனங்கள் மீதும் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், இப்போது அரசாங்கமே அந்த அத்துமீறலை நிகழ்த்த ஆரம்பித்திருக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள் கோவை மக்கள்.

கோவை மாவட்டம், ஆலந்துறையை அடுத்து காளி மங்கலத்தில் தமிழக அரசின் குடிசைமாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல, பூலுவப்பட்டிக்கு அடுத்துள்ள தென்கரையிலும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதற்காகப் பூமி பூஜை போடப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு இடங்களுமே மலை அடிவாரப் பகுதிகள்... யானைகளின் வலசைப் பாதை.

 பூபதி, நடராஜன், கலையரசு, இராசாமணி
பூபதி, நடராஜன், கலையரசு, இராசாமணி

முதலில் காளி மங்கலத்துக்குச் சென்றோம். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான கூத்தாடி மலை அருகில் இருக்கிறது காளி மங்கலம். மலை அடிவாரத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் கிராமத்தின் குடியிருப்புகள் இருக்கின்றன. காளி மங்கலத்தைச் சேர்ந்த பூபதி, “இப்போது அரசாங்கம் கட்டிக்கிட்டு இருக்கிற அடுக்குமாடி குடியிருப்புக்குப் பக்கத்திலேயேதான் ‘இண்டஸ் இன்ஜினீயரிங் கல்லூரி’ இருந்தது. யானைகளின் வலசைப் பாதையில் அனுமதி இல்லாமல் கட்டியிருப்பதாகச் சொல்லி 2014-ம் வருஷம் அந்தக் கல்லூரியை மூடி சீல் வெச்சாங்க. இப்போது அந்த இடத்துக்குப் பக்கத்தில் அரசாங்கமே கட்டடம் கட்டுகிறது. பூமி பூஜை போடுவதற்கு அமைச்சர் வேலுமணி வந்தபோது, ஊர் மக்கள் சேர்ந்து ‘இது யானைகளின் வலசைப் பாதை, இங்கே கட்டடம் கட்டாதீர்கள்’ என்று சொன்னோம். ‘உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன்’ என்று அவரும் சொன்னார். ஆனால், கட்டட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். இதைத் தடுக்க குடிசைமாற்று வாரியம், வனத்துறை, கலெக்டர் அலுவலகம் என்று அனைத்து இடங்களிலும் மனு கொடுத்துவிட்டோம். யாருமே கண்டுகொள்ள வில்லை. எங்கள் ஊருக்கும் மலைக்கும் இடையில் சிறிய ஓடை இருக்கிறது. இப்போது, அந்த ஓடையையொட்டித்தான் அரசாங்கம் கட்டடம் கட்டுகிறது. இதனால், யானைகளுக்கு வேறு வழியே இல்லை, ஊருக்குள்தான் வரும்” என்கிறார் வேதனையுடன்.

தென்கரை கிராமத்துக்குச் சென்றோம். அந்தப் பகுதியைச் சேர்ந்த நடராஜன், “இது யானைகளும் சிறுத்தைகளும் அதிகம் நடமாடுற பகுதி. இங்கே கொண்டுவந்து வீட்டைக் கட்டினால், வன விலங்குகள் பாதிக்கப்படும் என்பது ஒரு பக்கம்... இங்கே குடி அமர்த்தப்படும் மக்களின் நிலைமையை யோசிக்க வேண்டாமா? இங்கு காலம்காலமாக வசித்துவரும் நாங்களே பொழுது சாய்ந்ததும் பயந்து பயந்துதான் வெள்ளாமைக் காட்டுக்குள் போவோம். வெளியேயிருந்து மக்களை இங்கே கொண்டுவந்து குடி வைத்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்” என்றார் பரிதவிப்புடன்.

இந்த கட்டுமானங்களுக்கு எதிராகச் சட்டரீதியாகப் போராடி வருகிறது வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கம். அதன் வழக்கறிஞர் குழுவில் ஒருவரான கலையரசுவிடம் பேசினோம். “குடிசைமாற்று வாரியம் கட்டடம் கட்டும் தென்கரை மற்றும் காளி மங்கலம் ஆகிய இரண்டு இடங்களுமே மலையிடப் பாதுகாப்புக் குழுமத்தின் (HACA) கீழ் வருகின்றன. இங்கே கட்டடம் கட்டுவதற்கு வனத்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி வாங்க வேண்டும். இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியே வனத்துறையிடம் தகவல் கேட்டிருந்தோம். அதில், ‘தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பாக தென்கரை, ஆலந்துறை ஆகிய கிராமங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான தடையின்மைச் சான்றுக்கான பரிந்துரை ஏதும் வனத்துறையினரால் நகர் மற்றும் ஊரமைப்பு ஆணையருக்கு அனுப்பப்படவில்லை’ என்று கடந்த 28.5.2019 அன்று கோவை மாவட்ட வன அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரி பதில் அளித்துள்ளார். எனவே, அரசாங்கமே முறையான அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டுவது தெரியவந்துள்ளது.

ஆகவே, குடிசைமாற்று வாரியம் சார்பில் இங்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு எதிராக நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிடப் பட்டுள்ளது. அரசாங்கம் இந்த விபரீதமான முயற்சியைக் கைவிடும்வரை நாங்கள் கடுமையாகப் போராடுவோம்” என்றார் தீர்க்கமாக.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணியிடம் பேசினோம். நாம் சொல்வதைக் கேட்டுக்கொண்ட அவர், “இது தொடர்பாகக் குடிசைமாற்று வாரிய அதிகாரிகளிடம் பேசுகிறேன். விதி மீறல்கள் இல்லாமல் கட்டடம் கட்டுவதற்கான தக்க நடவடிக்கை எடுக்கிறேன்” என்று உறுதியளித்தார்.

மலையின் அடிமடியில் கைவைத்துவிட வேண்டாம் சார்!