பதினெட்டாம் பெருக்கின்போது காவிரியைப் பார்க்க வேண்டும். கண் இரண்டும் போதாது. அதுவும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்து பார்த்தால் - “ஆறிரண்டும் காவேரி அதன் நடுவே சீரங்கம்” என்று வாய் தானாகவே முணு முணுக்கும்.
"கண் பாயும் இடமெல்லாம் அலை பாயும் வயல்கள்” என தி.ஜானகிராமனை மலங்கடித்த காவிரி அது.
“பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி”
என்று ஒரு துறவியான இளங்கோவையே மயக்கிய காவிரிப் பெண்ணவள். இன்றும் அந்தத் தாயின் கருணையால்தான் அள்ளி அள்ளி வயிறு புடைக்கச் சாப்பிடுகிறோம். தமிழ் பிறப்பதற்கு முன்பே பிறந்தவள் அவள். கடல் மட்டத்தைவிட 4186 அடி உயரமான குடகு மலையிலிருந்து புறப்பட்டு 800 கி.மீ பயணித்து பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது காவிரி. காவிரியின் வயதை 5 லட்சம் ஆண்டுகள் என்கிறார் ஆய்வாளர் சோம.ராமசாமி. கார்பன் 14c கால நிர்ணய முறையைப் பயன்படுத்தியும், செயற்கைக்கோள் நிழற்படங்கள் துணையோடும் இவர் செய்த ஆய்வின் முடிவே இது.

காலப்போக்கில் பல திசைகளில் பயணப்பட்ட காவிரி, இன்று பாயும் இந்த வழித்தடத்தைப் பிற்காலத்தில்தான் வந்தடைந்ததாகவும், காவிரி மட்டுமே பாய்ந்த காலம் ஒன்று இருந்ததாகவும், கொள்ளிடம் தனியாக கி.பி.1100-1250 க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி இருக்கலாம் என்கிறார் இவர். கொள்ளிடம் பற்றி எந்தக் குறிப்பும் சங்க இலக்கியத்திலோ சிலப்பதிகாரத்திலோ இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இப்படி கால நதி போல் ஓடிவந்த காவிரியை அதன் வெள்ள அழிவைத் தடுக்கவும், மிகுதியான நீரை பயன்படுத்தி பாசனப் பரப்பை அதிகமாக்கவும் கட்டப்பட்ட முதல் அணை கல்லணைதான். கட்டிய ஆண்டு கி.மு. 12 ஏறக்குறைய 2100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டும், இன்றும் பயன்பாட்டில் உள்ளதுதான் கல்லணையின் சிறப்பு.
அதனால்தான் அறிஞர் வா.செ.குழந்தைசாமி, “உரகில் உள்ள அணைகளில் இன்றும் உயிரோடு பயன்பாட்டில் உள்ள காலத்தால் மூத்த அணை கல்லணை" என்றார். இவர் நீரியல் அறிஞர். முக்கொம்பும் கல்லணையும் காவிரியின் பாதையில் முக்கியமான இடங்கள். திருச்சிக்கு மேற்கே 18 கி.மீ தொலைவில் முக்கொம்பு உள்ளது. இங்கிருந்துதான் காவிரி, கொள்ளிடம், காவிரிக்கால் என்று காவிரி மூன்றாகப் பிரிகிறது. இதனால்தான் இந்த இடம் ‘முக்கொம்பு’ ஆனது.
இப்படி காவிரி கொள்ளிடமாகப் பிரிந்து ஒரு மாலைபோல் திருவரங்கத்தைச் சுற்றி கல்லணையில் மீண்டும் இணைகின்றது. இந்த இணையும் இடத்தில் ஒரு அணை கட்ட கரிகாலன் எடுத்த முடிவையும், அதனால் விளையப்போகும் பாசனப் பயன்பளை அவர் தொலைநோக்கோடு உணர்ந்ததையும் உலக அறிஞர்கள் வியக்கிறார்கள். காவிரியிலிருந்து பிரியும் இடத்தில், கொள்ளிட ஆற்றுப்படுகை 6 அடி மேடாகவும் போகப்போக சரிந்து இணையும் இடத்தில் காவிரியைவிட 6 அடி தாழ்வாக அமைந்துள்ளது.

காவிரி நீர் பெருகி அதிகம்வரும் காலங்களில் பெரும் உடைப்புகள் ஏற்பட்டு பாதிப்பை உருவாக்குவதோடு தாழ்வானப் பகுதியில் பாய்ந்து வீணாகக் கடலில் கலப்பதுதான் அன்றைய காவிரி சந்தித்த பிரச்னை. இப்படித்தான் கொள்ளிடம் காலப்போக்கில் உருவாகி தேவிகோட்டையில் கடலோடு கலக்கிறது. திருவரங்கத்தின் கிழக்கே காவிரியின் வடகரையில்தான் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டது. அதில் பாயும் பெரும் வெள்ளமே கொள்ளிடத்தில் ஓடி வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கவே கரிகாலன் அணை கட்ட முடிவு செய்தான். உடைப்பை தடுத்து, குறிப்பிட்ட உயர்த்தில் சுவர் எழுப்பினான் (அணை). இதனால் வெள்ளம் பள்ளம் நோக்கிப் பாயும் வேகம் தடுக்கப்பட்டு நீர் காவிரியிலேயே பாய்ந்து வேளாண்மைக்குப் பயன்பட்டது. இப்போது ஏராளமான நீர் காவிரியில் வந்தால், கட்டப்பட்ட அணையின் மேல்மட்டத்தைத் தாண்டி வழிந்து கொள்ளிடத்தில் பாய்ந்து கடலில் கலந்தது. இதனால் டெல்டா பகுதிகள் வெள்ளக்காடாவது தடுக்கப்பட்டது. இப்படித்தான் காவிரியின் வெள்ளத்தையும் சமவெளிப் பாசனத்தையும் ஒழுங்குபடுத்தினான் சோழன் கரிகாலன்.
புவியியல் அமைப்பைப் புரிந்து, அணை கட்ட அவன் தேர்ந்தெடுத்த இடமும், வெள்ளப் பெருக்கைத் தடுத்து, தாங்கி நிற்கும் அந்த அணை (சுவர்) கட்ட அவன் மேற்கொண்ட தொழில் நுட்பமுமே தமிழர்களின் கட்டட அறிவின் சான்றாக உலகத்தால் இன்றுவரை கொண்டாடப்படுகிறது.
உலகில் ஜோர்டான் நாட்டின் ஜாவா அணை, எகிப்தில் கெய்ரோவுக்கு அருகில் உள்ள சட் அல்-கஃபாரா அணை, சிரியாவில் உள்ள க்வாதினா அணை ஆகிய பழைமையான அணைகளோடு ஒப்பிடத்தக்க இந்தியாவின் ஒரே அணை நம் கல்லணைதான். கரிகாலன் கட்டிய கல்லணை இன்றுள்ள நீர்த்தேக்க அணையாகக் கட்டப்படவில்லை. மாறாக நீர் வழியும் அணையான 'கலிங்குலா' (calingula) ஆகவே கட்டப்பட்டது. இதனால்தான் நம் இலக்கியங்கள் அதை அணை என்று சொல்லாமல் ‘கரை’ என்றே புகழ்ந்தன.
இன்றைய கொள்ளிடமான, அன்றைய வெள்ளம் ஊடறுத்துச் செல்லும் ஆற்றுப்பாதையின் குறுக்காக - பாறைகளாலும் கனமான களிமண் பூச்சுக்களாலும் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 1080 அடி நீளம், 40-60 அடி அகலம், 15-18 அடி உயரம் உள்ள வடிவமாக, பாம்புபோல் வளைந்து செல்கிறது கல்லணை. கரிகாலன் ‘காவிரி நாடன்’ என்று போற்றப்பட்டான். பெயர்டு ஸ்மித் என்ற பொறியாளர் 1600 ஆண்டு வெள்ளத்தை தாங்கும் அதன் ஆற்றலையும், கட்டுமானப் பொருள்களின் தேர்வையும் வியந்தார். தமிழர்கள் இதை ‘அணை’ என்று சொல்லவில்லை. கரை என்றே குறிப்பிட்டனர். அணை என்ற சொல் பிற்காலத்ததாக இருக்கலாம்.

தொல்காப்பியத்தில்கூட,
“வருவிசை புனலைக் ‘கற்சிறை’ போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்”
என்றே வருகிறது. ‘கற்சிறை’ என்ற சொல்லே ‘அணை’ என்ற இக்கால பொருளில் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். கரிகாலன் காவிரிக்கு கரை (அணை) கட்டியதற்கான குறிப்பு இலக்கியங்களில் மட்டுமல்லாமல், தெலுங்கு சோழனின் 7ம் நூற்றாண்டு ‘மாலேபட்’ செப்பேடுகளிலும், பராந்தக சோழனின் வேலஞ்சேரிச் செப்பேட்டிலும் காணப்படுகிறது.
உயர்த்தி கட்டப்பட்ட காவிரிக்கரையை பராமரிக்கும் வேலை அந்தப் பகுதி கிராம மக்களிடம் தரப்பட்டது. பராமரிப்புக்குத் தேவையான கட்டாய உழைப்பு, ‘குலை வெட்டி’ என்று அழைக்கப்பட்டது. இப்படி கூலி இல்லாமல் செய்யப்படும் வேலையை வெட்டி வேலை என்று சொல்ல இதுவே காரணமானது. இன்று நாம் கல்லணைக்குப் போனால் இரண்டு சிலைகளைப் பார்க்கலாம். ஒன்று கரிகாலன். மற்றது சர் ஆர்தர் காட்டன். இன்று காவிரியின் நீர் குடித்து வாழும் நாம், சர் தாமஸ் ஆர்தர் காட்டன் என்னும் அந்த பொறியியல் மேதையை அறிந்துகொள்ள வேண்டிய அளவு அறிந்துகொண்டோமா? கொண்டாட வேண்டிய அளவு ஏன் கொண்டாடவில்லை? யோசிப்போம்.
முல்லைப் பெரியாறு அணை கட்டி, ஒரு நதியை எதிர் திசையில் பாய வைத்த பொறியியல் அதிசயத்தை உருவாக்கிய ‘பென்னிகுக்’ இன்று தேனி, கம்பம், தேவாரம் போன்ற பகுதிகளில் மக்கள் தலைவனாகக் கொண்டாடப்படுகிறார். பெண்கள் பொங்கலின்போது போடும் கோலங்களில் பென்னிகுக் படம், குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மதம் கடந்து பென்னிகுக் பெயர். இதுதான் ஒரு பிரிட்டிஷ் காலத்து பொறியாளன் மக்கள்மயப்பட்டதன் சான்று. ஆனால் அதற்கு சிறிதும் குறையாத சாதனை ஆர்தர் காட்டனுடையது. காவிரி பாசன விரிவாக்கத்தின் வரலாறு தெரியும்போதுதான் ஆர்தர் காட்டன் பேசப்படுவார். இந்தத் தலைமுறை ஆர்தர் காட்டனைத் தெரிந்துகொள்வது நல்லது.

1803-ல் இங்கிலாந்தில் பிறந்தவர் காட்டன். அக்கால சென்னை மாநில பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளராக பணி செய்த ஒரு ராணுவ தளபதி அவர். பல அணைகளைக்கட்டி, பாசனக் கால்வாய்கள் அமைத்து, தன் வாழ்க்கை முழுவதும் இந்திய நீர்பாசனத்துக்கே அர்ப்பணித்த இவரை ‘இந்திய நீர்பாசனத்தின் தந்தை’ என்று அறிவுலகம் கொண்டாடுகிறது. கரிகால் சோழனால் கட்டப்பட்ட அந்தத் தடுப்பணையாம் ‘கலிங்குலா’ வை இன்று நாம் பார்க்கும் வடிவத்தில் கட்டி ‘கல்லணை’ என்று நாம் கொண்டாட காரணமானவர் அந்த நீரியியல் மேதை ஆர்தர் காட்டனே.
காலப்போக்கில், கரிகாலன் கட்டிய கல்லணை ஒரு பிரச்னையை சந்தித்தது. அதிக நீர் வரவால், மணல் மேடுகள் கல்லணைக்கு முன் குவிந்தன. காவிரி படுகை மேடாக மாறியது. கொள்ளிடம் பள்ளப் படுகையாக மாறிவிட, வரும் நீர் முழுதும் கொள்ளிடத்தில் பாய, காவிரிப் பாசனப்பகுதி வரண்டது. பழைய டெல்டா காய்ந்தது. இந்தப் பிரச்சனையிலிருந்து டெல்டாவை காப்பாற்ற யோசித்த பிரிட்டிஷ் அரசு, இந்தப் பணிக்காகவே காத்திருந்த ஆர்தர் காட்டனிடம் இந்த வேலையைத் தந்தது.
கரிகாலன் கட்டிய கல்லணையை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய அணைகட்ட பொறியாளர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் ஆர்தர் காட்டனுக்கு மட்டும், இந்தக் கரிகாலனின் கட்டுமானம் எப்படி 1800 ஆண்டுகளைத் தாக்குப்பிடித்து நிற்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் ஆட்டிப்படைத்தது. பொறியாளர்களால் ஒரு தமிழன் கரிகாலன் கட்டிய அந்த அணையை இடிக்க முடியவில்லை. அது தமிழ்போல் நின்று சிரித்தது. அதனால் கரிகாலனின் பழைய அணையையே அடிக்கல்லாக வைத்து புதிய அணையைக் கட்டலாம் என்ற முடிவை எடுத்தவர் ஆர்தர் காட்டன்தான்.

கல்லணையின் கிழக்குப் பகுதியில் அடி மதகுகளை (under sluices) அமைத்து காவிரியின் நீர் கொள்ளிடம் செல்லாமல் காவிரிக்கே திருப்பிவிட்டார் காட்டன். இதற்கு மதகு அமைக்கும் வேலையை காட்டன் செய்தபோதுதான் அந்த அதிசயத்தை கண்டுபிடித்தார். 19-ம் நூற்றாண்டுவரை, ஆண்டு முழுவதும் நீர் ஓடுகிற மணற்பாங்கான படுகையின் மேல் அணை கட்டும் தொழில் நுட்பம் புரியாத புதிராகவே இருந்தது. இதைக்கட்டிய நம்மவர்கள், இந்தத் தொழில்நுட்பத்தை, நாமறிந்தவரை எதிலும் பதிந்துவைத்ததாகத் தெரியவில்லை. கரிகாலனின் தொழில்நுட்ப புதிர் அவிழ்த்து, தமிழர்களின் பெருமையை உலகத்துக்குச் சொன்னவர் ஆர்தர் காட்டனே.
பெரிய பாறைகளும் - களிமண் பூச்சும்தான் அந்தத் தொழில்நுட்பம். காவிரியில் நீர்வரத்து குறைவாக வரும் கோடை காலத்தில், ஆற்றில் மிகப்பெரிய எடை கொண்ட பாறையைபோட அது நீரை அரித்து கீழே இறங்கும். அது முற்றிலும் மூழ்குவதற்கு முன்னால் அதன்மீது களிமண் சாந்து பூசப்படும். இப்படி வரிசையாக ஆற்றின் குறுக்கே பாறை பரவல். இதே முறையில் அடுத்த அடுக்கு அடுத்த கோடையில் முதலில் போட்ட அடுக்கின்மேல் போடப்படும். இதனால்தான் கல்லணை கட்ட 30 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. காட்டன்தான் இதைக் கண்டுணர்ந்து நமக்குச் சொன்னார். நீரின் போக்குக்கு ஏற்ப பாறைகள் போடப்பட்டதால்தான், அணை வளைந்து பாம்புபோல் அமைந்துள்ளது.
2100 ஆண்டுகளில் வந்த பெரும் வெள்ளப் பெருக்கை இந்தக் கட்டுமான முறையே தாங்கி நின்றது. இந்த நீர் தடுப்பு முறையால் அமைந்த கல்லணையை,பொறியியல் அதிசயமாக உணர்ந்ததாலேயே காட்டன் கல்லணையை Rock Dam என மொழி பெயர்க்காமல் ‘கிராண்ட் அணைக்கட்’ என்று சொன்னதாகத் தோன்றுகிறது. காட்டனின் வியப்பால் உருவான ‘கிராண்ட் அணைக்கட்’ என்பதே நிலைத்துவிட்டது.
காலத்தால் உருவான மணல் படுகை பிரச்னையைத் தீர்க்க 1830-ல் பத்து மணல் கட்டைகளை கல்லணையின் கிழக்கு கோடியில் காட்டன் அமைத்தார். கல்லணையில் நுட்பத்தைப் பயன்படுத்தியே கோதாவரி நதியில் ‘தௌளீஸ்வரம்’ அணையை 1874ல் காட்டன் கட்டினார். 1840-ல் கல்லணையின் மேல் இன்று நாம் காணும் பாலம் அமைக்கப்பட்டது. 32 அடி அகலத்தில் கல்லணையின் மொத்த நீளமான 1080 அடிக்கும் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்திற்கும் அடித்தளமாய் இருந்தது கரிகாலனின் அணைதான்.
கல்லணையை அடுத்து காவிரியும் வெண்ணாறும் பிரிந்து அதன்பின் பல ஆறுகள் கால்வாய்கள் மனித விரல்களைப்போல் டெல்டாவைத் தழுவுகின்றன. மீண்டும் பிரச்னை. கல்லணையில் அதிக நீர் தேங்குவதால் முக்கொம்பில் காவிரி நீர் தாழ்வான கொள்ளிடத்தில் பாய்ந்து கொள்ளிடப் படுகை ஆழமானதாக மாறியது. இப்போதும் ஆர்தர் காட்டனின் யோசனையின்படி முக்கொம்பில் ஒரு அணை 1836 கட்டப்பட்டது. இதை நீர் ஒழுக்கி அணையாக காட்டன் வடிவமைத்தார். காவிரிக்கு மேலே இருந்ததால் இது மேலணை என்று அழைக்கப்படுகிறது.
முக்கொம்பில் மேலணை கட்டப்பட்டதால் தென்னாற்காடு மாவட்டத்தில் வேளாண்மை பாதிக்கப்பட்டது. இதை சரி செய்ய கொள்ளிடத்தில் ஒரு அணையை காட்டன் உருவாக்கினார். அணைக்கரையில் உள்ள அந்த அணை கீழணை என்று அழைக்கப்படுகிறது. மேட்டூரில் ஓர் அணை கட்டினால் காவிரி நீரை முழுமையாக பயன்படுத்த முடியும் என்று சொன்னவரும் ஆர்தர் காட்டன்தான்.அணை கட்ட மைசூர் அரசு மறுத்துவிட்டது.
பிறகு ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அவரின் யோசனை ஏற்கப்பட்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. ஆனால் காட்டன் 1899-ல் தனது 96-ம் வயதில் காலமாகிவிட்டார். பிறகு 1925ல் தொடங்கிய மேட்டூர் அணை கட்டும் வேலை 1934-ல் நிறைவடைந்தது.

இப்படி தமிழ்நாட்டின் நீர் பாசனத்துக்கு பங்காற்றியதுபோல் ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி நதிகளிலும் இவர்தான் அணைகள் கட்டும் பணிக்கு தலைமை ஏற்றார். ஆந்திராவின் பாசன வளர்ச்சிக்கு ஆர்தர் காட்டனின் பணிகளை போற்றும் விதமாக கோதாவரி நதியின் கரையில் ராஜமுந்திரி அருகே ஒரு மியூசியத்தை ஆந்திர அரசு பராமரித்துவருகிறது. ஆந்திரா முழுதும் ஆர்தர் காட்டனுக்கு நூற்றுக்கணக்கான சிலைகள் இருப்பதாகவும் அறிகிறோம்.
ஆனால் தமிழ் நாட்டின் டெல்டா பாசனத்தின் எல்லா வளர்ச்சிக்கும் காரணமான ஆர்தர் காட்டனுக்கு ஒரே ஒரு சிலைதான் கல்லணையில் உள்ளது. எங்கோ பிறந்து தன் அளப்பரிய பொறியியல் அறிவால் தமிழ்நாட்டை வளப்படுத்திய ஆர்தர் காட்டனை தமிழர்கள் நெஞ்சில் ஏந்துவோம்.
(இன்னும் ஊறும்)