
விசாகப்பட்டினத்தில் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்த தொழிற்சாலை தமிழகத்தில் இல்லை.
அதிகாலை 2:30. திடீரென்று மூச்சுவிட முடியாமல், வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வருவதுபோல் குடலுக்குள் குடைச்சல் எடுக்க, மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். ஏன் சம்பந்தமில்லாமல் இப்படி அனைவருக்கும் இப்படியான அவஸ்தை என்பது யாருக்கும் புரியவில்லை. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கி விழத் தொடங்கினார்கள். சுவாசிக்கும் காற்றில்தான் ஏதோ சரியில்லை என்பது அவர்களுக்குப் புரியத் தொடங்கியது. காரணம், அருகிலிருக்கும் எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற ரசாயனத் தொழிற்சாலைதான் என்று பின்னர்தான் அவர்களுக்குத் தெரிந்தது.
ஸ்டைரீன் வாயுவைப் பயன்படுத்தி, விரிவுபடுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கிறது எல்.ஜி பாலிமர்ஸ். ஊரடங்கு காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட ரசாயன ஆலையில் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அங்கு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்டைரீன் மோனோமர், 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவாகவே பராமரிக்கப்படவேண்டும். பராமரிப்பு நடவடிக்கைகள் முறையாக நடைபெறாத காரணத்தால், ஸ்டைரீன் வாயு 17 டிகிரிக்கும் கீழ் குறைய, அது வைக்கப்பட்டிருந்த டேங்கில் காற்றழுத்தம் அதிகமாகி வால்வ் உடைந்து டேங்கிலிருந்த ஸ்டைரீன் வாயு கசியத் தொடங்கியுள்ளது.

டேங்க், மிகவும் பழையது என்பதாலும் அது முறையாகப் பராமரிக்கப்படாததாலும் அந்த அழுத்தத்தை அதனால் தாங்க முடியவில்லை என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக 3 டன் ஸ்டைரீன் வாயு அதிலிருந்து வெளியாகி அருகிலிருக்கும் கிராம மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
2018-ம் ஆண்டு எல்.ஜி நிறுவனம் வெளியிட்ட குறிப்பாணையின்படி, அந்தக் கட்டமைப்பு 231 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்குள்ள ஸ்டைரீன் வாயு வைக்கப்பட்டுள்ள டேங்குகளைக் கண்காணிப்பதற்கான வசதிகள் இல்லாததும் இந்தக் கசிவு குறித்து முழுமையாகத் தெரியாததற்கு முக்கியக் காரணம் என்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம். இந்தக் கசிவினால் சுமார் 6 கிலோமீட்டர் விட்டத்திற்குள் அமைந்துள்ள கிராமங்கள் மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

‘ஸ்டைரீன் வாயு அதன் உண்மையான நிலையில் கண் எரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பிரச்னைகளை மட்டுமே ஏற்படுத்தும். ஸ்டைரீன் வாயு மற்ற சில வாயுக்களோடு கலக்கும்போது அது கார்பன்மோனாக்ஸைடு, பென்டேன் போன்ற நச்சு வாயுக்களை உருவாக்கும்’ என்கிறார் வேதிம ஆராய்ச்சியாளரான ஆ.பார்த்திபன். நாளொன்றுக்கு 415 டன் உற்பத்தித் திறன்கொண்ட இந்த நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு, உற்பத்தித் திறனை மேலும் 250 டன்னாக உயர்த்த அனுமதி கேட்டிருந்தது. இந்த அனுமதியும் சமீபத்தில் கிடைத்துள்ள நிலையில்தான் இந்த வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. போபால் விஷ வாயு விபத்துக்குப் பிறகு, இதுபோன்ற ஆபத்தான ரசாயனத் தொழிற்சாலைகள் குறித்து மிகக் கடுமையான சட்டங்கள் வகுக்கப்பட்டன. அந்தச் சட்டப்படி, ஸ்டைரீன் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் சட்டங்களின்படி, ரசாயனத் தொழிற்சாலைகளில் வேதிமங்களையும் நச்சு வாயுக்களையும் அவற்றுக்குரிய குறிப்பிட்ட வெப்பநிலையில், தரத்தில் வைத்திருக்க வேண்டும். அதன்மூலம் மக்களுடைய உடல்நலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாதபடி பராமரிப்பதோடு் சூழலியல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால், இவை எதையும் எல்.ஜி நிறுவனம் முறையாகச் செய்யவில்லை. ஸ்டைரீன் வாயுவைக் கையாளுகின்ற அவர்களுடைய யூனிட், ஐ.எஸ்.ஓ-வினால் அங்கீகரிக்கப்பட்டது தான். அப்படியெனில், அனைத்துக்குமே அங்கு உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று பொருள். பிரச்னை என்னவென்றால், அவர்கள் வாயுக்கசிவின்போது அதைப் பின்பற்றவில்லை. விஷ வாயுக் கசிவு ஏற்பட்ட பிறகும்கூட அவர்கள் மக்களுக்கு உரிய எச்சரிக்கையைக் கொடுக்கவில்லை. போதுமான பணியாளர்கள் அங்கு இல்லாமல்போனதும் இதற்கொரு காரணம் என்று இந்திய பிளாஸ்டிக் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.
விபத்துக்குக் காரணமான ஆலையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வசித்து வரும் அருணிடம் விபத்து ஏற்பட்டதற்கு அடுத்த நாள் மாலை பேசியபோது, “கிராம மக்களை ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் அனுமதிப்ப தில்லை. 48 மணி நேரத்துக்கு மக்களை அங்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்கள். அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை அந்தப் பகுதிக்கு வெளியே உள்ள கல்யாண மண்டபங்கள், அரசுக் கட்டடங்கள் போன்றவற்றில் முகாம் அமைத்துத் தங்க வைத்துள்ளார்கள். நாங்கள் வசிக்கும் பகுதிகளில், இன்னமும்கூட காற்றில் அந்த நெடி இருக்கிறது. ஆனால், நேற்று இருந்த அளவுக்கு இல்லை. இதுவரை 11 பேர் இறந்துள்ளதாகச் சொல்கிறார்கள். 285 பேர் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டி ருக்கிறார்கள்” என்று கூறினார்.
ஸ்டைரீன் வாயுக் கசிவு ஏற்படும்போது அதை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது, மிக முக்கியமாகக் காற்றில் கலந்துள்ள அந்த வாயுவை எப்படி மட்டுப்படுத்துவது என்பது குறித்து வேதிம ஆராய்ச்சியாளரான ஆ.பார்த்திபன் சொன்னவை.
“ஸ்டைரீன் வாயு வளிமண்டலத்தில் பரவும்போது, அதில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை உறிஞ்சிவிடும். அதனால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுகிறது. அதுமட்டுமன்றி, இது புற்றுநோயை உருவாக்கக்கூடிய கார்சினோஜெனிக் தன்மையுடையது. நீண்டகாலத்திற்கு அதை சுவாசிக்கும்போது புற்றுநோய் ஏற்படும்.

ஸ்டைரீன் வாயு, பென்சீனில் மட்டும்தான் கரையும். நீரில் கரையாது. ஆகவே, அதிக அழுத்தத்துடன் நீரைப் பீய்ச்சியடிக்கும்போது அது சிறிது சிறிதாக மட்டுப்படும். இந்த வாயு மிகவும் வீரியத்துடன் வினைபுரியக்கூடியது. அதனால், இது மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். அது மற்ற சில வாயுக்களோடு வினைபுரிந்தால், நச்சுத்தன்மை மிகுந்த வாயுக்களை உருவாக்கும். அதை சுவாசிப்பவர்களின் உயிருக்கேகூட ஆபத்து வரலாம். அதனால், இது காற்றில் கலக்கும்போது உடனடியாக அதை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.”
விசாகப்பட்டினத்தில் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்த தொழிற்சாலை தமிழகத்தில் இல்லை. இருப்பினும் ஆபத்தான ரசாயனத் தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல் ஆலைகள், பாலிமர் உற்பத்தி நிறுவனங்கள் என்று பலவும் மணலி, கடலூர், தூத்துக்குடி, பெருந்துறை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் அதிகமாகச் செயல்படுகின்றன. இதுகுறித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன், “கொரோனா காலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, இரட்டைப் பேரிடர்களை ஒரே நேரத்தில் சந்திப்பதைப்போன்ற சவால் நிறைந்தது. இதைத் தமிழகம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழகத்திலுள்ள அனைத்துத் தொழிற்சாலை களிலும் பாதுகாப்புக் கட்டமைப் புகளை உறுதி செய்வதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.
அந்தப் பணிகள் முடிவடையும் வரை உற்பத்தியைத் தொடங்க அரசு அனுமதியளிக்கக் கூடாது. ஆலைகளிலுள்ள வெப்பநிலை, ரசாயனக் கலவை அளவு போன்றவற்றை அளவிடும் அளவீட்டுக் கருவிகள் மறு அளவுத் திருத்தம் செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து ரசாயனத் தொழிற்சாலைகளும் அனுமதிவாங்கப்பட்ட வேதியியல் கலவைகளைத்தான் உற்பத்தி செய்கின்றனவா, பயன்படுத்துகின்றனவா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரசாயனத் தொழிற்சாலைகளைச் சுற்றி வாழ்கின்ற மக்களுக்குத் தொடர் பேரிடர்ப் பயிற்சிகளை நடத்த வேண்டும். அந்தந்த நிறுவனங்கள் குறித்த மெட்டீரியல் டேட்டா ஷீட் அடிக்கடி புதுப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் வைக்கப்பட வேண்டும்” என்றார்.

கொரோனா ஊரடங்கு, நாட்டு மக்களை 45 நாள்களாக அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடக்கிப் போட்டுவிட்டது. பல்வேறு தொழிற்சாலைகள் இயக்கத்தில் இல்லாமலே இருந்திருக்கும். ஊரடங்கு முடிந்த பிறகும் தளர்வுக்காலத்திலும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு முறையான பரிசோதனைகளையும் பாதுகாப்பு முறைகளையும் மேற்கொள்ள வேண்டும். இன்னொரு போபால் கொடூரத்தையோ விசாகப்பட்டினம் விபத்தையோ அனுமதிக்க முடியாது.