19-ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் வெளிமான்கள் அதிகமாக இருந்தன. அதன் பின்னர், அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைய ஆரம்பித்தது. தமிழகத்தில் கோடியக்கரை, சத்தியமங்கலம், நாகப்பட்டினம் மற்றும் வல்லநாடு ஆகிய 4 இடங்களில் மட்டுமே வெளிமான்கள் உள்ளன.

அழிந்து வரும் இனமாக இருப்பதால் வெளிமான்கள், தமிழ்நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ், பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டது. மேலும், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பின், அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் (சிவப்பு புத்தகம்) இடம் பெற்றுள்ளது. இதனால் வெளிமான்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வல்லநாடு வெளிமான் சரணாலயம். வெளிமான் இனத்தைக் காப்பதற்காகத் தமிழகத்தின் தென்கோடியில், வெளிமான்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சரணாலயம் இது. மேலும் இது, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே வனவிலங்கு சரணாலயம் ஆகும்.

இந்தக் காப்பகம் தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிருந்து 18 கி.மீ தொலைவில் வல்லநாடு என்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. 1,641.21 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், 1987-ம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இங்கு, வெளிமான்களைத் தவிர புள்ளி மான்கள், மிளா, குள்ளநரி, காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, முயல்கள், கீரி, பாம்பினங்கள், தேள் வகைகள் காணப்படுகின்றன. மேலும், மயில், குயில், கழுகு, பருந்து, மரகத புறா, நாரை, மரங்கொத்தி போன்ற பல பறவையினங்களும் வாழ்ந்து வருகின்றன.
இந்தியாவின் பல இடங்களில் வெளிமான்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், வல்லநாடு சரணாலயத் தில் இவற்றின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
வல்லநாடு சரணாலயத்தில், வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையே வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்தது.

வல்லநாடு சரணாலய பகுதியில், ஒரு காலத்தில் மான்களைப் பார்ப்பதே அரிது என்ற நிலை இருந்தது. 2010 தொடக்கத்தில் 26 வெளிமான்களே இருந்த நிலையில் இப்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை, மாலை வேளைகளில் வெளிமான்கள், கூட்டம் கூட்டமாக சமவெளிப் பகுதிகளில் மேய்வதைப் பேருந்துகளில் செல்லும்போது பார்க்க முடிகிறது.
அந்த அளவு வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இயற்கை ஆர்வலர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
வல்லநாடு வெளிமான் சரணாலய வனப்பகுதிக்குள் நுழைய தடைவித்தித்து, வேட்டையாடுதல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையும் அதிகரித்தது. சுற்றுவட்டார கிராம மக்களுக்கு மான்களைப் பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வனத்துறை சார்பாக நடைபெற்றது.

மான்களுக்குத் தேவையான குடிநீர் வசதிக்கு தண்ணீர் தொட்டிகள் மற்றும் புல் வெளிகளை உருவாக்கிய வனத்துறை, சரணாலயம் முழுவதையும் கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வந்தது.
சரணாலயத்துக்கு அருகேயுள்ள சமவெளிப் பகுதிகளுக்கு, வெளிமான்கள் சுதந்திரமாகச் சென்று மேய்ந்துவிட்டு திரும்புகின்றன. 13 கி.மீ தொலைவுள்ள பேட்மா நகரம் வரை செல்கின்றன.
வல்லநாடு வெளிமான் சரணாலயத்தை மாணவர்கள் அவ்வப்போது வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். மலையேறும் பயிற்சிக்காக 6 கி.மீ தொலைவுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு வந்து மலையேறும் பயிற்சி மேற்கொள்கின்றனர். சரணாலயத்துக்குள் மாணவர்கள், பொதுமக்களைக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதித்து மான்களைப் பார்வையிட வசதி செய்யும் வகையில், சூழல் சுற்றுலா மையமாக மாற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருந்தது.

இந்நிலையில் வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மான்களைக் கண்டு ரசிக்க, சூழல் சுற்றுலா தொடங்க வனத்துறை முடிவு செய்துள்ளதாக வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார். நுழைவுப் பகுதியிலிருந்து மலையின் இருபுறமும் சுமார் 4 கி.மீ வரை மக்கள் சென்று மான்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்துக்குள் பொதுமக்கள் மான்களைக் கண்டு ரசிக்க வசதியாக சூழல் சுற்றலா தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது நெல்லை, தூத்துக்குடி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வல்லநாடு வெளிமான் சரணாலயம் சூழல் சுற்றுலாவுக்கு நடைமுறைக்கு வந்தால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. வெளிமான்கள் மிகவும் சென்சிட்டிவ் ஆன விலங்கு. சிறு அசைவுகூட அதைத் தொந்தரவு செய்யும் என்பதால் அதைத் தொந்தரவு செய்யாமல் மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.