தமிழக வனம் மற்றும் பசுமைப் பரப்பை 33 சதவிகிதமாக உயர்த்துவதற்காக `பசுமை தமிழகம் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தவும், பசுமைப் போர்வையை விரிவுபடுத்துவதும்தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்பை ஊக்குவித்து வரும் இத்திட்டத்தில் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் பசுமை தமிழகம் இயக்கத்தின் இணையதள முகவரி www.greentnmission.com -ல் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து, தங்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.
வனப்பகுதிகள் மட்டுமன்றி, வெளியில் உள்ள அரசு, தனியார் காலி நிலங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணிகள் இத்திட்டத்தின் மூலம் நடந்து வருகின்றன. இந்தப் பணியில் வனத்துறையும், பிற அரசு துறைகளும், தன்னார்வ அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.
பொது மக்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் இணைந்து, தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை செயல்படுத்தலாம். அதற்காக வனத்துறையின் பண்ணைகளில் இருந்து, தரமான மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

வனத்துறை இணையதளத்தில் பசுமை தமிழகம் திட்டத்துக்கான இணைய பக்கத்தில், 'SEED CALCULATER' என்ற பகுதி இணைக்கப் பட்டுள்ளது. இந்தப் பகுதியில், 101 வகை மரங்கள் குறித்த முழுமையான விவரங்கள் உள்ளன. ஒவ்வொரு மரக்கன்று குறித்தும் அடிப்படை தகவல்கள், எந்தச் சூழலில் மரங்கள் எப்படி வளரும், அதற்கான காலம், தண்ணீர் தேவை போன்ற விபரங்களை வனத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை எளிதாகத் தேர்வு செய்து தேவைக்கேற்ப வாங்கலாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.