Published:Updated:

கானமயில் ஏன் காணாமல் போனது? காட்டுக்குள் சிங்கத்தின் வாழ்க்கை இதுதான்! | சமவெளி - 8

கானமயில்
News
கானமயில் ( டாக்டர் மணிவண்ணன் )

ஔவை பாடிய `கான மயிலாட கண்டிருந்த வான்கோழி' என்ற பாடல் வரிகளில் இடம்பெற்ற, தமிழ் மண்ணில் வாழ்ந்த பறவை `கானமயில்'. எனது இறுதி ஆசை என்னவென்று கேட்டால், இந்தக் கானமயிலை நமது தமிழ் மண்ணில் மீண்டும் காண வேண்டும் என்றே சொல்வேன்! காலம் இதற்கு விடையளிக்கும்!

Published:Updated:

கானமயில் ஏன் காணாமல் போனது? காட்டுக்குள் சிங்கத்தின் வாழ்க்கை இதுதான்! | சமவெளி - 8

ஔவை பாடிய `கான மயிலாட கண்டிருந்த வான்கோழி' என்ற பாடல் வரிகளில் இடம்பெற்ற, தமிழ் மண்ணில் வாழ்ந்த பறவை `கானமயில்'. எனது இறுதி ஆசை என்னவென்று கேட்டால், இந்தக் கானமயிலை நமது தமிழ் மண்ணில் மீண்டும் காண வேண்டும் என்றே சொல்வேன்! காலம் இதற்கு விடையளிக்கும்!

கானமயில்
News
கானமயில் ( டாக்டர் மணிவண்ணன் )

சென்ற பகுதியில் சிவிங்கிப்புலிகளைப் பற்றி அறிந்துகொண்டு செரங்கெட்டி தேசிய பூங்காவுக்குள் நுழைவோம் எனக் கூறியிருந்தேன், அதன்படி இப்போது நாம் காண இருப்பது செரங்கெட்டி தேசிய பூங்கா.

இதன் மேற்குப் பகுதி, நீண்டு வளர்ந்த புற்களையும் சற்று மரங்களையும் கொண்ட பசுமையான பகுதி. இங்குதான் புகழ்பெற்ற ஏரியான லேக் விக்டோரியா (LAKE VICTORIA) உள்ளது. தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் (LONG RAIN) இங்கு மழைக்காலம், செரங்கெட்டி தேசிய பூங்காவின் நீண்ட மழைப்பொழிவு காலம் இது. 

செரங்கெட்டி தேசிய பூங்கா போகும் வழியில்
செரங்கெட்டி தேசிய பூங்கா போகும் வழியில்

அதனால் எங்கும் பசுமை போர்த்தியது போல் இந்தப் பகுதி காணப்படுகிறது. வளர்ந்த புற்களை வரிக்குதிரைகள் சாப்பிட, குட்டையான புற்களை காட்டு மாடுகள் சாப்பிட, 3 மாதங்கள் இந்தப் பகுதியில் முகாம் இடுகின்றன ஊர்வலத்தில் வரும் விலங்குகள். இங்குள்ள புற்களை உண்டு, குட்டிகளை பாலூட்டி வளர்க்கின்றன.

இந்தப் பகுதியில் உள்ள வேட்டை விலங்குகள் சிங்கம், சிறுத்தை,  நரி, காட்டு நாய்கள் காத்திருக்கின்றன இவர்களின் வருகைக்காக! மூன்று மாதங்கள்  இவைகளுக்குக் கொண்டாட்டம்தான்!

காட்டு மாடுகள்
காட்டு மாடுகள்

இந்தக் கொண்டாட்டத்திற்காக வேட்டை விலங்குகளும் இனப்பெருக்கம் செய்து தன் குட்டிகளையும் தயார் செய்து வைத்துக் கொள்கின்றன.

இங்குள்ள வேட்டை விலங்குகளுக்கு தன் உடலால் உணவளித்து இங்குள்ளத் தாவரங்களுக்குத் தன் கழிவுகளால் உரமேற்றி, இந்த விலங்குகளின் ஊர்வலம், மூன்று மாதங்களில் மழை முடிந்து, புற்கள் முடிந்ததும்  மெல்ல நகர்கின்றன.  இப்போது அவை செல்லும் இடம் செரங்கெட்டி வடக்குப்பகுதி.

ஆப்பிரிக்கா சிங்கம் (AFRICAN LIONS)

நாம் செரங்கெட்டி தேசிய பூங்காவின் வடக்கு பகுதிக்குள் நுழைவதற்கு முன்பு இங்குள்ள காட்டு ராஜாவான சிங்கத்தைப் பார்த்துவிடுவோம்!

சிங்கங்கள் பெரும்பாலும் கூட்டமாக வாழும். சிங்ககூட்டத்திற்கு LION PRIDE என்று பெயர். உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து, கூட்டம் பெரிதாகிக் கொண்டே போகும்.

கூட்டமாக சிங்கங்கள்
கூட்டமாக சிங்கங்கள்

நான் எனது அனுபவத்தில் ஒரு கூட்டத்தில் 37 சிங்கங்களைப் பார்த்திருக்கின்றேன். பெரும்பாலும் ஒரு கூட்டத்தில் வளர்ந்த ஆண் சிங்கம் மூன்று இருக்கும். கூட்டம் ஆங்காங்கே சிதறிக் கிடந்தாலும் வேட்டையின் போது அவை ஒன்று கூடுகின்றன. கூட்டம் ஒன்றிணைய சிங்கங்கள் ஒலி எழுப்புகின்றன, இந்த ஒலி எட்டு கிலோமீட்டர் வரை கேட்கும். சமுதாய விலங்கான சிங்க கூட்டத்தில் ஆண்கள், குட்டிகளைப் பராமரிப்பது மட்டுமின்றி, கம்பீரமான கர்ஜனை செய்து எதிரியை விரட்டி, சிறுநீர் மூலம் தன் எல்லையை தீர்மானிக்கிறது. ஒரு கூட்டத்திற்கான இதன் எல்லை நூறு முதல் 250 சதுர கிலோமீட்டர் வரை இருக்கும்.பெண் சிங்கங்கள் வேட்டையாடி மொத்த குழுவுக்கும் உணவளிக்கும், பெரிய இரையாக (எருமைகள், ஒட்டகச் சிவிங்கிகள் மாதிரி) இருந்தால் மட்டும் ஆண்கள் களத்தில் குதிக்கும்!.

குழுக்களாக வேட்டையாடும் அழகே தனி!

ஓர் அரைவட்ட வடிவத்தில் சற்று பலவீனமான சிங்கங்கள் நடுவில் நின்று இரையை மறிக்க திறமையான சிங்கங்கள் இரையைக் கொல்லும். பெரும்பாலும் இரவில் வேட்டையாடும். சிறு யானை முதல் ஒட்டகச்சிவிங்கி, காட்டு மாடுகள், முயல்கள் கூட இவற்றில் இருந்து தப்ப முடியாது. வேட்டை முடிந்து முதல் உணவு ஆண்களுக்கு, அடுத்து பெண்களுக்கு, இறுதியில் குட்டிகளுக்கு, பிறகு ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூக்கம்.

சிங்கங்களுக்கு உணவாகும் காட்டு மாடுகள்
சிங்கங்களுக்கு உணவாகும் காட்டு மாடுகள்
டாக்டர் மணிவண்ணன்

ஒரு முறை செரங்கெட்டி தேசியப் பூங்காவில் இரண்டு தாய், நடுத்தர மற்றும் சிறு குட்டிகள் கொண்ட சிங்க கூட்டம் வேட்டையாடுதலை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. வேட்டை முடிந்ததும் தாய் நேர்த்தியாக காட்டு மாட்டின் வயிற்றைக் கிழித்து அதில் உள்ள குடல் பகுதிகளை வெளி கொண்டு வந்து கழிவுகளை வெளியேற்றி அழகாக சுத்தம் செய்து குட்டிகளுக்கு கொடுத்துக் கொண்டிருப்பதை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றும் அந்த காட்சிகள் என் மனதில் வந்து போகிறது.

மிருகக்காட்சி சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சிங்கங்கள் ஒவ்வொரு வருடமும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. ஏனெனில் அவற்றின் குட்டிகளைப் புட்டிப்பால் கொடுத்து, பாலூட்டி வளர்க்க மனிதன் இருப்பதால், (பாலூட்டும் காலத்தில் உருவாகும் ஹார்மோன்ஸ் இனப்பெருக்கத்தைத் தாமதம் செய்கிறது. செயற்கை பாலூட்டுதல் மூலமாக இது தடைபடுவதால் ஒவ்வொரு வருடமும் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன).

கலவையில் சிங்கங்கள்
கலவையில் சிங்கங்கள்
டாக்டர் மணிவண்ணன்

ஆனால் காடுகளில் வசிக்கும் சிங்கங்கள், குட்டிகளுக்குப் பால் ஊட்டுவதால் அதன் உடம்பில் உற்பத்தியாகும் பால் சுரக்கும் ஹார்மோன், அதன் கருமுட்டை உருவாவதைத் தள்ளி வைக்கிறது. எனவே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் இவை இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. இனப்பெருக்க காலத்தில் ஒவ்வொரு இருபது முதல் முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை,  இவை கலவையில் ஈடுபடுகின்றன. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 முறை, 4 முதல் ஏழு நாட்கள் வரை இது நீடிக்கும். ஏனெனில் 4 முதல் 7 நாட்கள் வரை தான் பெண்களின் கருமுட்டை உயிருடன் இருக்கும்.

இதன் கர்ப்பகாலம் 110 நாட்கள். இரண்டு அல்லது மூன்று குட்டிகளை ஈன்றெடுக்கும். இந்தக் குட்டிகளை அந்தக் குழுவில் உள்ள பிற தாய் சிங்கங்களும் அன்பாக கவனித்துக் கொள்ளும். காட்டின் பிரதான விலங்கான சிங்கக் குட்டிகள் 60 முதல் 70 சதவீதம் உயிர் பிழைப்பது இல்லை.

விளையாட்டில் சிங்கங்கள்
விளையாட்டில் சிங்கங்கள்

வளர்ந்த ஆண் சிங்கங்கள், இரண்டு மூன்று வருடங்களில் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும். அவை மூன்று வருடங்கள் அந்தப் பகுதியில் ஆட்சி செய்யும், அடுத்த ராஜா வரும் வரை.

மொத்த ஆப்பிரிக்கா கண்டத்தில் 24,000 சிங்கங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 12000 சிங்கங்கள் தான்சானியாவில் மட்டுமே உள்ளன. அதற்குக் காரணம் இங்கு இருக்கும் அபரிதமான உணவு. அவற்றிற்கு இந்த உணவை அளிப்பது காட்டு மாடுகள். இந்தப் பகுதியில் வாழும் ஒரு பறவை இனத்தையும் பார்த்துவிடுவோம்!

கானமயில் (KORI BUSTARD)   

அற்புதமான பறவையினங்களில் இதுவும் ஒன்று. இவற்றில் நான்கு இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா, இந்திய தீபகற்ப பகுதிகளில் இவை வாழ்கின்றன. பறக்கும் பறவைகளில் இதுவே பெரியது (நெருப்புக் கோழிக்கு பறக்கத் தெரியாது). இதன் எடை 8 முதல் 15 கிலோ இருக்கும். அவசர காலங்களைத் தவிர இவை பறப்பதில்லை,நடந்தே இரைதேடும்,  இரைதேடும் தேடும் தூரம் 80 கிலோ மீட்டர் வரை இருக்கும். காடுகளை விட்டு இவை வெளியே வர விரும்பாது, ஏனெனில் மனிதனால் அதிகம் வேட்டையாடப்படும் பறவைகளில் இதுவும் ஒன்று.

கானமயில்
கானமயில்
டாக்டர் மணிவண்ணன்

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் (BOTSWANA) தேசிய பறவை இது. ஆப்பிரிக்கக் காடுகளில் நான் பயணம் செய்யும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 முதல் 20 பறவைகளை நான் பார்த்திருக்கிறேன். அப்படியே இந்தியாவுக்கு வருவோம்!. இந்தியாவில் இதன் பெயர் (GREAT INDIAN BUSTARD)1969 -ம் ஆண்டு முதல் இதுவரை 90% பறவைகள் அழிக்கப்பட்டுவிட்டன. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த இவை தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன.

இந்தப் பறவைகளைப் பற்றி இரண்டு விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும்!

1. சுதந்திர இந்தியாவின் தேசிய பறவையாக இதுதான் அறிவிக்கப்பட இருந்தது, ஆனால் BUSTARD என்று பெயர் தவறாக உச்சரிக்கப்படும் என்ற காரணத்தால் அந்த அங்கீகாரத்தை இவை இழந்தன.

கானமயில்
கானமயில்
டாக்டர் மணிவண்ணன்

2. ஔவை பாடிய "கான மயிலாட கண்டிருந்த வான்கோழி" என்ற பாடல் வரிகளில்இடம்பெற்ற தமிழ் மண்ணில் வாழ்ந்த கானமயில் இது. இதன் இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை ஆடும் அற்புத நடனத்தை கண்டு மயங்கி தனது பாடல்களில் இதன் பெயரை பதிவு செய்திருக்கிறார் ஔவையார்.

இந்தியாவில் இதன் அழிவுக்கு காரணம் என்ன?

அதிக உடல் எடை கொண்டவை இவை. 15 கிலோ... தரையிலே பெரும்பாலும் இருப்பதால் வேட்டையாடுவதும் எளிது. எனவே உணவு மற்றும் பெருமைக்காக அதிகம் வேட்டையாடப்பட்டு, நமது ஔவை பாடிய இந்த இனம் நமது தமிழ்நாட்டில் ஒன்றுகூட இல்லாமல்  அழிக்கப்பட்டது.

காலனிய ஆதிக்கத்தின் அன்றைய சிப்பாய்களின் பொழுதுபோக்கு இதனை வேட்டையாடுவதுதான். காடுகளில் ஜீப்புகளில் சென்றுகொண்டே அதை விரட்டி, கழுத்தில் சுருக்குக் கயிறு போட்டு வேட்டையாடுவார்கள்.

இது தரையிலே முட்டையிடும் தன்மையுடையது. அதுவே அதற்கு எமன் ஆகிப்போனது. அப்போதைய மக்கள் அதன் முட்டைகள் அல்லது குஞ்சுகள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அவற்றுக்கு அருகில் தீ வைக்க, தாய் பாசத்தால் ஓடிவரும் இந்தப் பறவையை மறைந்திருந்து கொன்று அழித்தனர்.

நமது இந்திய அரசு தற்போது (2020 ஆம் ஆண்டு) ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் (JAISALMER) பகுதியில் இவற்றின் முட்டைகளை சேகரித்து செயற்கையாக, குஞ்சு பொரிக்க வைத்து வெற்றி கண்டிருக்கின்றனர்.

கட்டுரையாளர்:  டாக்டர் மணிவண்ணன்
கட்டுரையாளர்: டாக்டர் மணிவண்ணன்

நமது தமிழக அரசும் தமிழ்நாட்டில் 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பரந்த புல்வெளியை அடையாளம் கண்டு, இதை மீட்டுருவாக்கம் [REINTRODUCE] செய்ய வேண்டும்.

எனது இறுதி ஆசை என்னவென்று கேட்டால், ஔவை பாடிய இந்தக் கானமயில் நமது தமிழ் மண்ணில் மீண்டும் காண வேண்டும் என்றே சொல்வேன்! காலம் இதற்கு விடையளிக்கும்!

ஆப்பிரிக்க காடுகளில் ஒரு இயற்கை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது!! மனிதன் இல்லாமல் நடைபெறும் இந்த இயற்கை ஜல்லிக்கட்டு என்ன? எப்படி நடைபெறுகிறது? என்பதை அடுத்த வாரம் காண்போம்.