Published:Updated:

``சூழலுக்கு பாதுகாப்பு, வாழ்வாதாரத்துக்கு வருமானம்” ஐ.நா சபை நிதியுதவி பெறும் மகளிர் சுய உதவிக்குழு!

மகளிர் சுய உதவிக்குழு
News
மகளிர் சுய உதவிக்குழு

மகாராஷ்டிராவில் கடல் கரிப்பைத் தடுக்கும் மாங்குரோவ் செடிகளை பாதுகாக்கும் பாதுகாவலர்களாக 9 பெண்கள் மாறியிருக்கின்றனர்.

Published:Updated:

``சூழலுக்கு பாதுகாப்பு, வாழ்வாதாரத்துக்கு வருமானம்” ஐ.நா சபை நிதியுதவி பெறும் மகளிர் சுய உதவிக்குழு!

மகாராஷ்டிராவில் கடல் கரிப்பைத் தடுக்கும் மாங்குரோவ் செடிகளை பாதுகாக்கும் பாதுகாவலர்களாக 9 பெண்கள் மாறியிருக்கின்றனர்.

மகளிர் சுய உதவிக்குழு
News
மகளிர் சுய உதவிக்குழு

கடற்கரையில் எப்போதும் மண் அரிப்பு இருந்துகொண்டேதான் இருக்கும். இதைத் தடுக்க கற்கள், சிமென்ட் கற்கள் கடற்கரை யோரம் போடப்படுவதுண்டு. இது போன்ற கடல் மண் அரிப்பை இயற்கையிலேயே தடுக்கும் அரண்களாக மாங்குரோவ் செடிகள் விளங்குகிறது.

கடற்கரையோரம் மற்றும் கழிமுகப் பகுதியில் மட்டுமே வளரக்கூடிய இந்த மாங்குரோவ் செடிகள் கடற்கரையின் இயற்கை அரணாக செயல்படுகிறது. ஆனால், மும்பை போன்ற கடற்கரை நகரங்களில் இந்த மாங்குரோவ் காடுகள் கட்டட கழிவுகளைக்கொண்டு அழிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் இருக்கும் வென்குர்லா மந்தாவி ஆற்றங்கரையோர கழிமுகப்பகுதியில் அதிக அளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன.

கடல் தாவரத்தில் பஜ்ஜி
கடல் தாவரத்தில் பஜ்ஜி

இந்த மாங்குரோவ் காடுகளின் பாதுகாவலர்களாக மாறியிருக் கின்றனர் அப்பகுதி மீனவப் பெண்கள். மீனவப் பெண்கள் எப்போதும் கடலும் கடல் சார்ந்த தொழிலுமாகவே இருப்பர். அவர்களும் இப்போது வேறு வழியில் வருவாயைத் தேட ஆரம்பித்துள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த 9 பெண்கள் சேர்ந்து ஸ்வாமினி என்ற பெயரில் சுய உதவிக்குழு ஒன்றை அமைத்திருக்கின்றனர்.

அக்குழுவைச் சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் 2017-ம் ஆண்டில் இருந்து இந்தக் கழிமுகப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக மாங்குரோவ் செடிகளுக்கு நடுவே படகு சவாரியைத் தொடங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் ஸ்வேதாவுக்கு அவரின் கணவர்தான் படகு எப்படி ஓட்ட வேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். அதன் பிறகு ஸ்வேதாவே சுற்றுலாப் பயணிகளை படகில் அழைத்துச் சென்று மாங்குரோவ் பகுதியை சுற்றிக் காட்டிவிட்டு திரும்ப கொண்டு வந்துவிடுகிறார்.

இதோடு மாங்குரோவ் வனப்பகுதியில் காணப்படும் ஒரு வகையான கடற் தாவரங்கள் உணவுப்பொருளாகவும் பயன்படுகிறது. இந்தத் தாவரங்களை பிடுங்கி மீனவப் பெண்கள் பஜ்ஜி செய்து சுற்றுலா பயணிகளுக்குக் கொடுக்கின்றனர். மாங்குரோவ் மரங்களிடையே வளரக்கூடிய இந்தச் செடிகளை பிடுங்குவதால் அது மாங்குரோவ் மரங்களைப் பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது.

இந்த சுய உதவிக்குழுவுக்கு மகாராஷ்டிரா வனத்துறையும், ஐக்கிய நாடுகள் சபையும் நிதியுதவி செய்கின்றன. அந்த நிதியில் கழிமுகப் பகுதியில் பறவைகள், கடல் உயிரினம், மாங்குரோவ் பகுதியைப் பாதுகாக்க இப்பெண்கள் பாடுபட்டு வருகின்றனர். அதோடு அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுகின்றனர்.

படகு சவாரி
படகு சவாரி

கழிமுகப் பகுதியில் உள்ள செடிகளை எப்படி உணவுப்பொருளாக பயன்படுத்த ஆரம்பித்தீர்கள் என்று ஸ்வேதாவிடம் கேட்டதற்கு, ``எங்கள் வீட்டுக்கு மும்பையில் இருந்து சில முஸ்லிம் விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்கள் நோன்பு காலத்தில் சாப்பாட்டில் உப்பு சேர்க்க மாட்டார்கள். அவர்கள் சாப்பாட்டில் கடற்கரை பகுதியில் காணப்படும் செடியில் பிடுங்கப்பட்ட சில இலைகளை சாப்பாட்டோடு சேர்த்து பயன்படுத்தினர். அந்த இலையில் உப்புத்தன்மை அதிகமாக இருந்தது. அந்த இலைகளை நாங்கள் எங்கள் பகுதியில் தேட ஆரம்பித்தோம். அந்தச் செடியில் உப்புத்தன்மை அதிகமாக இருந்ததோடு, அதில் அதிகமான வைட்டமின் சத்துக்களும் இருந்தன. அவற்றைக் கொண்டு நாங்கள் பஜ்ஜி தயார் செய்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்க ஆரம்பித்தோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது'' என்று தெரிவித்தார்.

ஸ்வாமினி சுய உதவிக்குழு சார்பாக சுற்றுலா பயணிகளுக்கு ரெஸ்டாரன்ட் ஒன்றையும் நடத்துகின்றனர். சுற்றுலா பயணிகள் மீன் பிடித்துக் கொடுத்தாலும் அதை இங்கு சமைத்துக் கொடுக்கின்றனர். இதனால் இவர்களின் உணவகத்துக்கு லண்டனில் இருந்துகூட சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு தங்களின் வாழ்வாதாரத்தையும் பெண்கள் இதன் மூலம் பூர்த்தி செய்துகொள்கின்றனர்.