‘‘மழை வருதா... ஜாலிதான். இன்னிக்கு லீவு கிடைக்கும்னு இதுவரைக்கும் சந்தோஷப்பட்டோம். ஆனா, ‘ஐயையோ மழையா?’னு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்துடுச்சு இந்த மழை’’ என்கிறார் ஏழாம் வகுப்பு படிக்கும் நவீன் குமார்.

மறக்க முடியாத மழை!

சென்னை, ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் இருக்கும் சுட்டிகள், தங்களுக்கு ஏற்பட்ட மழை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

“நான் முதல் மாடியில் இருக்கிறதால, எங்க வீட்டுக்குள்ளே தண்ணி வரலை. ஆனா, தெரு முழுக்க வெள்ளம் ஓடுறதைப் பார்த்துப் பயந்துட்டேன். மூணு நாளா வெளியே வரல. முதல்ல, ‘என்னடா, ஃப்ரெண்ட்ஸோட விளையாட முடியாமப் போயிடுச்சே’னு நினைச்சேன். ஆனா, வீடு, சாப்பாடுகூட இல்லாமல், உயிருக்குப் போராடிட்டு இருக்கிறவங்க பற்றி கேள்விப்பட்டதும், மனசுக்கு கஷ்டமாப் போயிடுச்சு. அவங்களுக்கு நானும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு.  அப்பாவோடு சேர்ந்து சில பேருக்கு ஹெல்ப் பண்ணினேன்’’ என்றார் நவீன்.

ஆறாம் வகுப்பு படிக்கும் சௌந்தர்யா, ‘‘என் லைஃப் முழுக்க இதை மறக்க மாட்டேன். முதல் நாள், சில ஃப்ரெண்ட்ஸுக்கு போன் பண்ணிப் பேசினேன். ‘எங்க வீட்டுக்குள்ளே தண்ணி வந்துடுச்சு, நாங்க மாடியில இருக்கோம்’னு ஒருத்தி சொன்னா. இன்னொரு ஃப்ரெண்டு, அவங்க சொந்தக்காரங்க வீட்டுல இருக்கிறதா  சொன்னா. அடுத்த நாள், யார்கிட்டேயும் பேச முடியலை. ஷாலினி என்ன ஆனா? தீட்ஷிதா என்ன ஆனானு நினைச்சுக்கிட்டே இருந்தேன். பவரும் டவரும் கிடைச்சு, அவங்ககிட்டே பேசின பிறகுதான் நிம்மதியா இருந்துச்சு” எனப் புன்னகைத்தார்.

மறக்க முடியாத மழை!

ஏழாம் வகுப்பு விதுரன், ‘‘முதல்ல எனக்கு இதோட சீரியஸ்னெஸ் தெரியல. தங்கச்சியோடு சேர்ந்து கேரம், செஸ்னு விளையாடிட்டு இருந்தேன். பவர் எப்போதான் வருமோனு எரிச்சல்பட்டேன். ஆனா, மொத்த வீடும் முழுகிப்போய், நிறையப் பேர் வெளியே தங்கியிருக்கிறதைக் கேள்விப்பட்டதும் நாம எவ்வளவோ சேஃப்ட்டியா இருக்கோம்னு புரிஞ்சது. இப்போ மழை விட்டுடுச்சு. ஆனா, தொற்றுநோய் வரும், எச்சரிக்கையா இருக்கணும்னு சொல்றாங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கு வெளியே போய் விளையாடக் கூடாது’’ என்கிறார்.

மறக்க முடியாத மழை!

ஆறாம் வகுப்பு ஷர்மிளா, ‘‘ஏரியை உடைச்சுட்டாங்க. சென்னையின் பல பகுதிகள் மூழ்கிடுச்சு. அடுத்து, பெரிய புயல் வருது. அதில், சென்னையே அழிஞ்சுடும்னு ஏதேதோ சொல்லி பயமுறுத்திட்டாங்க. நைட்ல பயங்கர கனவு எல்லாம் வந்துச்சு. என் அப்பாதான் ‘அப்படி எல்லாம் இல்லை. தைரியமா இரு’னு சொன்னார். ‘இனிமே, உலகத்தில் எங்கேயும் இப்படி நடக்கக் கூடாது சாமி’னு வேண்டிக்கிட்டேன்’’ என்கிறார்.

மறக்க முடியாத மழை!

“வெள்ளம் புகுந்த ஒவ்வொருத்தர் வீட்டிலும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்காம். ரோடு சரிபண்றது, புது டிரான்ஸ்பார்மர் வைக்கிறதுனு கவர்மென்ட்டுக்கும் பல ஆயிரம் கோடி தேவையாம். நாடு முழுக்க நிறையப் பேர் ஹெல்ப் பண்றதை, டி.வி-யில் பார்த்தேன். நாமும் செய்யலாமேனு ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே போனில் பேசினேன்.  அவங்களும் அதே எண்ணத்தோடுதான் இருக்காங்க. எப்படா ஸ்கூல் திறக்கும்னு காத்திருக்கோம். போனதும் முதல் வேலையா, டீச்சர்ஸ்கிட்டே பேசணும். நம்மால் முடிஞ்சதைச் செய்யணும்” என்றார் ரோகன்.

மறக்க முடியாத மழை!

‘‘சரியாச் சொன்னே. நம்மைச் சுற்றி இருக்கிறவங்க கஷ்டப்படும்போது நாமதான் உதவி செய்யணும்’’ என்றார்கள் உறுதியாக.

சந்திப்பு மற்றும் படங்கள்: ஜெ.விக்னேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு