கடந்த மாதம் பெய்த பெரும் மழை, மாடி வீடுகளில் இருந்தவர்களையே தவிக்கவிட்டது. குடிசை வீடுகளில் வாழ்ந்த சிறுவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? கடலூர் மாவட்டம், நவமால்மருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கண்ணீர் அனுபவங்கள்...



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.முகேஷ் (6-ம் வகுப்பு):

‘‘மழை பெய்ஞ்சு எங்க வீடு இடிஞ்சு விழுந்துருச்சு. வீட்டுல இருந்த எல்லாப் பொருள்களும் தண்ணியில போயிருச்சு. என் புத்தகங்களும்தான். ரெண்டு நாளா சாப்பிட எதுவுமே கிடைக்கல. அப்பறம், வெளியூர் போயிட்டோம். 10 நாள் கழிச்சு வந்து பார்த்தா, எங்க வீடு இருந்த அடையாளமே இல்லை!’’
பி.அன்பரசி (6-ம் வகுப்பு):

‘‘நானும் அம்மாவும் மட்டும் வீட்டுல தனியா இருந்தோம். ஏரியில் இருந்து வந்த தண்ணியில வீட்டுச் சுவர் இரண்டும் விழுந்துருச்சு. அதனால, நாங்க சமுதாய நலக் கூடத்திலேயே ஒரு வாரம் தங்கியிருந்தோம். வீட்டுல இருந்த என் புத்தகங்கள் எல்லாமே தண்ணியில போயிருச்சு.’’
பி.தனசெல்வம் (7-ம் வகுப்பு):

‘‘மழைத்தண்ணி எங்க வீட்டுக்குள்ளே வந்துருச்சு. ரெண்டு நாளா சாப்பிடவே இல்லை. எங்க சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டோம். அங்கேயும் தண்ணீர் நிறைய இருந்தது. என் தங்கச்சி சுபலெட்சுமியை மின்சாரம் தாக்கி, ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். அது என் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.’’
பி.காயத்ரி (7-ம் வகுப்பு) :

‘‘தொடர்ந்து மழை பெய்ஞ்சதால எங்க வீட்டுக்குள்ள, கால் முட்டி அளவு தண்ணி வந்துருச்சு. பாம்பு, பூரான் எல்லாம் வீட்டுக்குள்ள வந்து, பார்க்கவே பயமா இருந்தது. என் புக்ஸ் எல்லாம் தண்ணியில நனைஞ்சிருச்சு. எங்க பாட்டி வீட்டுக்குப் போய்ட்டு, 10 நாள் கழிச்சுத்தான் வந்தோம். வீடு முழுசா இடிஞ்சுபோயிருச்சு. இனி, புது வீடுதான் கட்டணும்!’’
சக்திப்பிரியன் (8-ம் வகுப்பு):

‘‘விடாமப் பெய்ஞ்ச மழையால, எங்க வீட்டு சுவர் ஒவ்வொன்னா விழ ஆரம்பிச்சது. வீட்டுல இருந்த சில பொருள்களை மட்டும்தான் எடுக்க முடிஞ்சது. பக்கத்துல இருந்த மாட்டுவண்டியிலேயே ரெண்டு நாள் இருந்தோம். அப்போ, சாப்பிட எதுவுமே கிடைக்கலை.’’
ஆர்.சுவாதி (6-ம் வகுப்பு):

‘‘மழையில எங்க வீட்டோட ஒரு பக்கச் சுவர் விழுந்துருச்சு. அந்தச் சுவர் மேலேயே ரெண்டு நாள் தங்கியிருந்தோம். அப்புறம், பக்கத்து ஊர்ல இருக்கிற பெரியம்மா வீட்டுக்குப் போய்ட்டோம். மழை விட்டு ஒரு வாரம் கழிச்சுத்தான் வந்தோம். எங்க வீட்டைப் பார்த்ததும் எனக்கு அழுகையா வந்துருச்சு!’’
சந்திப்பு மற்றும் படங்கள்: அ.குரூஸ்தனம்