Published:Updated:

நண்பர்களே... நண்பர்களே!

நண்பர்களே... நண்பர்களே!
நண்பர்களே... நண்பர்களே!

நண்பர்களே... நண்பர்களே!

லோ நண்பர்களே, தினமும் நீங்கள் பள்ளிக்கு எப்படிச் செல்வீர்கள்?

பள்ளிப் பேருந்து, அப்பாவின் டூ வீலர், சைக்கிள் என்பவர்களா நீங்கள்? மிகவும் மகிழ்ச்சி. உங்கள் பள்ளிப் பயணம் இவ்வளவு இனிமையாக அமைந்திருப்பதற்கு, உங்கள் பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில், அரசுப் பேருந்தை மட்டுமே நம்பி, பேருந்து நிலையத்தில் காத்திருந்து, பல கிலோமீட்டர்கள் பயணம்செய்து பள்ளிக்குச் செல்லும் நண்பர்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தினமும் சந்திக்கும் பிரச்னைகள் பற்றித் தெரியுமா? வாங்களேன், அந்த நண்பர்களைச் சந்திப்போம்.

நண்பர்களே... நண்பர்களே!

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனோஜ், “நான் இப்போ ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். எங்க ஊர்ல  ரெண்டு தெரு தள்ளி இருந்த ஒரு நடுநிலைப் பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு வரை படிச்சேன். மேல படிக்கணும்னா 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கிற திருவண்ணாமலைக்குப் போகணும். அப்படி எங்க ஊர்ல இருந்து தினமும் 30 பேருக்கு மேல திருவண்ணாமலைக்குப் போய்ப் படிக்கிறோ. அதுக்கு நாங்க எல்லோரும் நம்பி இருப்பது அரசுப் பேருந்தைத்தான்’’ என்கிறார்.

இதேபோல வேலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சில மாணவர்கள், ‘‘காலையிலேயே சீக்கிரமா எழுந்து குளிச்சு ரெடியாகி, பஸ் ஸ்டாண்டுக்கு வந்துருவோம்.  ஏன்னா, ஒரு பஸ்ஸை விட்டுட்டா, அடுத்த பஸ் எப்போ வரும்னு சொல்ல முடியாது. பள்ளிக்கு நேரத்துக்கு போகணுமே. எங்க அப்பா படிச்ச காலத்துல, நடந்தே போயிருவாங்களாம். எங்களுக்கு அந்தச் சிரமம் கூடாதுனு, அரசு இலவச பஸ் பாஸ்  கொடுத்திருக்காங்க. ஆனா, இந்த பாஸை ­பயன்படுத்துறதுலதான் பிரச்னையே’’ என்கிறார்கள்.

தினமும் பேருந்தில் சென்றுவரப் பணம் இல்லை என எந்த ஒரு மாணவனின் கல்வியும் தடைபடக் கூடாது என்பதற்காகவே, மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. ஆனால், பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை, பேருந்தின் நடத்துநர்களும் ஓட்டுநர்களும் மதிப்பது இல்லை. இதனால், மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன தெரியுமா?

‘‘பஸ்ஸை கரெக்ட்டா பஸ் ஸ்டாப்ல நிறுத்த மாட்டாங்க. கும்பலா நிற்கிற எங்களைப் பார்த்துட்டாலே, தள்ளிப் போய் நிறுத்துவாங்க. நாங்க புத்தகப் பையோட ஓடிப்போய் பஸ்ல ஏறுரதுக்குள்ளே எடுத்துருவாங்க. அப்புறம், அடுத்த பஸ்ஸுக்காகக் காத்திருக்கணும். இதனால, ஸ்கூலுக்கு லேட்டாகி, டீச்சர்ஸ்கிட்ட திட்டு வாங்குவோம். அது மட்டுமா? பஸ்ஸுக்காக காத்திருக்கும் பெரியவங்களும் ‘இந்தப் பசங்களாலதான் நாமும் ஓடிப்போய் ஏற வேண்டியதா இருக்கு’னு எங்களைத்தான் திட்டுவாங்க’’ - இது, திருப்பூர் மாவட்ட கிராமத்து மாணவர்களின் ஆதங்கம்.

நண்பர்களே... நண்பர்களே!

‘‘தேர்வு நேரத்துல காலையில் இந்த மாதிரி பஸ்ஸை விட்டுட்டா, ரொம்பப் பதற்றம் ஆயிடும். பரீட்சை எழுத முடியாமப் போயிடுமோங்கிற பயத்திலேயே, படிச்சது எல்லாம் மறந்துடும். சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பும்போதும் இதே கதைதான். ‘ஃப்ரீ பாஸ்தானே, அடுத்த வண்டியில வாங்க’னு பஸ்ல ஏற விட மாட்டாங்க. லேட்டாக லேட்டாக கூட்டம் அதிகமாகிடும். புத்தகப் பையோட கனத்துல கூட்டத்துல நசுங்கிக்       கசங்கி எவ்வளவு கஷ்டம் தெரியுமா?’’ என்கிறார்கள்.

எப்படியோ, அடித்துப் பிடித்து பேருந்துக்குள்ள ஏறிவிட்டாலும் சில கண்டக்டருங்க, பஸ் பாஸை காட்டினாலே முணுமுணுப்பாங்க. பாஸை மறந்துட்டு வந்திருந்தா சொல்லவே வேண்டாம். எல்லோருக்கு முன்னாடி பயங்கரமா திட்டுவாங்க” என்கிறார் ஒரு மாணவர்.

எல்லோரும் அப்படி இல்லை. பஸ் பாஸைக் காட்டாவிட்டாலும், அமைதியா விட்டுடுற நடத்துநர்களும் இருக்கிறாங்க. ‘‘படிக்குப் பக்கத்துல நிற்காதே, செளகர்யமா உள்ளே தள்ளி வா’’னு அன்பா சொல்வாங்க.

‘‘இது எல்லாம் முடிஞ்சு, பஸ்ல நிற்கும்போது இன்னொரு பிரச்னை வரும். பையை முதுகுல மாட்டியிருந்தா, இடத்தை அடைச்சுக்குறீங்கன்னு பக்கத்துல நிற்கிறவங்க திட்டுவாங்க. கழட்டி கீழே  வெச்சோம்னா, இப்படியா வழியில வைக்கிறதுனு எரிஞ்சுவிழுவாங்க. உட்கார்ந்து இருக்கிறவங்ககிட்டே பையை வெச்சுக்கச் சொல்லி கொடுத்தா, சில பேர் வாங்கிக்குவாங்க. சிலர் வாங்காம முறைப்பாங்க. உட்கார இடம் கிடைச்சாலும் சில சமயம் எழுப்பிடுவாங்க’’ என்று 10 மார்க் பதில் போல பக்கம் பக்கமாகச் சொல்கிறார்கள் இந்த மாணவ நண்பர்கள்.

இலவச பஸ் பாஸ் அரசு கொடுத்தாலும், உண்மையில் இந்த நண்பர்கள் இலவசமாகச் சென்று வருவது இல்லை. பொதுமக்களின் வரிப்பணம்தான் இதுபோன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது, பேருந்து நடத்துநர்களுக்குத் தெரியாதா? பிறகு ஏன் இப்படிச் செய்கிறார்கள்?

‘‘மாணவர்களும் சும்மா இருப்பது இல்லை. பஸ்ல ஏறினதும் கூச்சல் போட்டு கத்துறாங்க. வழியிலயே நின்னுக்கிட்டு மத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறாங்க. வேலைக்குச் செல்பவர்கள், டிக்கெட் வாங்கிச் செல்பவர்கள் எல்லாம் மாணவர்கள்  கூட்டத்தைப் பார்த்தாலே ஏறத் தயங்குகிறார்கள். அதனால், சில கண்டக்டர்கள் இப்படிச் செய்றாங்க’’ என்கிறார் ஒரு நடத்துநர்.

ஒரு சில மாணவர்கள் செய்யும் தப்புக்காக எல்லா மாணவர்களையும் இப்படி சிரமப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது?

நண்பர்களே... நண்பர்களே!

பள்ளிக்கூட நேரங்களில் இன்னும் சில பேருந்துகளை கூடுதலா விட்டாலே ஓரளவு பிரச்னை தீர்ந்துவிடும். இது அரசு செய்யவேண்டிய விஷயம். மாணவர்களைத் தினமும் சந்திக்கும்  நடத்துநர்களும் மற்றவர்களும் செய்ய வேண்டியது என்ன?

நடத்துநர்கள், இலவச பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யும் மாணவர்களைத் தொந்தரவாக நினைக்கக் கூடாது. சரியான இடத்தில் பேருந்தை நிறுத்தி, அவர்களை ஏற்றிக்கொள்ள வேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளும், மாணவர்களைப் புரிந்துகொண்டு, சக பயணிகளாக மதிக்க வேண்டும். மாணவர்கள் வயதில் சிறியவர்கள் என்பதால், நடத்துநர்களிடம் தட்டிக்கேட்க முடியாது. எனவே, ஊரின் பெரியவர்கள் மாணவர்களுக்கு உதவ வேண்டும். ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்கள் பேருந்தில் வருவதில் தொந்தரவு இருக்கிறது எனத் தெரிந்தால், நடத்துநர்களிடம் சுமூகமாகப் பேச வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் மட்டும் இலவச பஸ் பாஸ் மூலம் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை சராசரியாக 25 லட்சம் என அரசு பெருமையாகச் சொல்கிறது. அந்தப் பெருமையும் நோக்கமும் முழுமையாக நிறைவேற வேண்டுமானால், இந்த மாணவர்களைப் புரிந்துகொள்ளுங்கள். ஏனெனில், இன்று சரியான நேரத்துக்கு பள்ளிக்குச் சென்று படித்து உயரும் மாணவர்களால்தான், வருங்கால இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது. இதோ, இந்தக் கல்வியாண்டு முடியப்போகிறது. புதிதாகத் தொடங்க இருக்கும் கல்வி ஆண்டிலாவது மாணவர்கள் இந்தப் பிரச்னைகள் இல்லாமல் இனிமையாகக் கல்வி கற்க வேண்டும்.

- சுப.தமிழினியன், மு.சித்தார்த், பா.நரேஷ் படம்: க.சத்தியமூர்த்தி

அடுத்த கட்டுரைக்கு