Published:Updated:

“மீம்ஸ் என்றாலே நானும் சிஸ்டரும்தான் ஃபேமஸ்!”

“மீம்ஸ் என்றாலே நானும் சிஸ்டரும்தான் ஃபேமஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“மீம்ஸ் என்றாலே நானும் சிஸ்டரும்தான் ஃபேமஸ்!”

கலகல ஜெயக்குமார்

“மீம்ஸ் என்றாலே நானும் சிஸ்டரும்தான் ஃபேமஸ்!”

கலகல ஜெயக்குமார்

Published:Updated:
“மீம்ஸ் என்றாலே நானும் சிஸ்டரும்தான் ஃபேமஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“மீம்ஸ் என்றாலே நானும் சிஸ்டரும்தான் ஃபேமஸ்!”

‘‘ஒரு மீம்ஸ் வந்துச்சு. அதுல, முதல்ல என் தலை... அடுத்தும் என் தலை, அடுத்தது மழையில நனையுற ஒரு ஜோடி, அடுத்தது தாஜ்மகால்... இதைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோணுச்சு சொல்லுங்க பார்ப்போம்...’’

- இப்படி மாணவப் பத்திரிகையாளர்களிடம் கேட்டு, அதற்கான பதிலையும் தானே எடுத்துச்சொல்லி, அந்த அரங்கத்தையே அதிரவைத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

அது, விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் மூன்று நாள் கூட்டுப் பயிற்சி முகாம். இரண்டாம் நாள் அரங்கில், அரசியல் சிந்தனையைத் தூண்டியும், பல்வேறு அனுபவப் பாடங்களை அள்ளி வழங்கியும் அசரடித்தனர் தமிழக மீன்வளத்துறை மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை  சௌந்தரராஜன் ஆகிய மூவரும். ஜெயக்குமார் மற்றும் தமிழிசை என்றால், சோஷியல் மீடியா மீம்ஸ் பார்ட்டிகளுக்குக் கொண்டாட்டம்தான். அந்த இருவரும் ஒரே மேடையில், அதுவும் மாணவர்களின் முன்பாக என்றால் எப்படி இருக்கும்? ஆரம்ப நிமிடம் முதலே அதிர்வேட்டுதான்.

“மீம்ஸ் என்றாலே நானும் சிஸ்டரும்தான் ஃபேமஸ்!”

திருமாவளவன், ‘‘ஒரு தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய கருவி, ஊடகம். அதுவும் இந்தத் துறை, தற்போது 360 டிகிரியிலும் இயங்கிவருகிறது. இளைஞர்கள் எல்லோருமே ஊடகவியலாளராக மாறிவிட்டோம். இப்படியான இளைஞர்களை முழுநேரப் பத்திரிகை யாளர்களாக வடிவமைக்கும் பணியைத்தான் விகடன் செய்துவருகிறது. தேர்தல் அரசியலை மட்டுமே மையப்படுத்தி, அதில் இருக்கும் நிறைகுறைகளை மட்டும் கணித்து, அரசியலைத் தவறாகச் சித்திரித்துவிட்டார்கள். அரசியல் என்பது அது அல்ல. அரசியல் கட்சிகள் இல்லை யென்றாலும், அரசு இருக்கும். ‘அரசியல் ஒரு சாக்கடை, அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்பதெல்லாம் தவறான மதிப்பீடு. அத்தனையிலும் இறுதி முடிவெடுக்கும் உரிமை அரசியலுக்குத்தான் இருக்கிறது. அரசியல் என்பதில் சிறிய அங்கங்கள்தான் இத்தனை அரசியல் கட்சிகளும். இந்தத் தெளிவு, ஊடகவியலாளர் களுக்கு அவசியம் இருக்க வேண்டும்” என்று ஒரு பேராசிரியர் போல வகுப்பெடுத்து அமர்ந்தார்.

‘‘எட்டுவழிச் சாலைக்கு உங்கள் நிலத்தைக் கொடுக்கவேண்டியிருந்தால் தருவீர்களா?’’ என்றொரு கேள்வி தமிழிசையை நோக்கிப் பாய்ந்தது. ‘‘கன்னியாகுமரியில் ரயில் நிலையம் கட்டுவதற்காக எங்கள் நிலத்தை விட்டுக்கொடுத்தவர்கள் நாங்கள். தமிழகத்துக்கு நன்மையென்றால் நிச்சயம் தருவோம்’’ என்று பளிச் பதில் கொடுத்தார் தமிழிசை.

சமூகநீதி குறித்துக் கேள்வி எழுப்பிய ஒரு மாணவரை இடைமறித்து, ‘‘இந்தியாவில் முதன்முதலாக இடஒதுக்கீடுக்கான செயல்பாடு எங்கே தொடங்கியது என்று தெரியுமா?’’ என்று எதிர்கேள்வியைத் தொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், ‘‘தமிழகத்தில்தான் முதன்முறையாகத் தொடங்கப்பட்டது’’ என்று பதிலையும் தந்ததுடன், பிரஸ்மீட்டின்போது பத்திரிகையாளர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான டிப்ஸ்களையும் கொடுத்தார். மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இடையிலேயே திருமாவளவன் கிளம்ப, ‘‘எப்போ சார் உங்க திருமணம்?’’ என்ற  கேள்வி, அவரை சற்றே பிரேக் போட வைத்தது. ‘‘விடை தெரியாது’’ என்று திருமாவளவன் சமாளிக்க, மைக்கை வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார், ‘‘அவர் பீஷ்மராக இருக்கச் சபதம் எடுத்திருக்கிறார்’’ என்று சொல்லிச் சிரிப்பலையை உண்டாக்கினார்.

அடுத்து எழுந்தது... ‘‘மீம்ஸ்கள் உங்களைப் பாதிக்கின்றனவா?’’ என்ற மிகமுக்கியமான கேள்வி.

‘‘ஆமாங்க! மீம்ஸ் என்றாலே சோஷியல் மீடியாவில் நானும் நம்ம சிஸ்டரும்தான் (தமிழிசை) ஃபேமஸ். நாங்கள் பேசினாலும் பேசாவிட்டாலும் கலாய்க்கிறார்கள். என் தலையில் முடி வளர்ந்திருப்பதுபோல போட்டோஷாப் செய்து, ‘இது நடந்தாலும் நடக்கும்... தமிழகத்தில் தாமரை மலராது’ என்று மீம்ஸ் செய்திருந்தார்கள்’’ என்று ஜெயக்குமார் சொல்ல, சிஸ்டர் தமிழிசை விழுந்து விழுந்து சிரித்தார்.

‘‘நான் பிரஸ் மீட் முடித்துவிட்டு காரில் ஏறுவதற்குள், என் தொடர்பான மீம்ஸ் ரெடியாகி இருக்கும். மீம்ஸ் போடலாம், அதில் தவறில்லை ஆனால், ஒருவரின் நிறத்தையும் தலைமுடியைப் பற்றியும் அதில் கேலிக்குள்ளாக்குவது தவறு. ஒருவரின் உருவத்தைக் கேலி செய்வது உங்களைத்தான் தரம் தாழ்த்தும். இதற்கான நேரத்தை நல்லவழியில் பயன்படுத்தலாமே நண்பர்களே...’’ என்று கோரிக்கை வைத்த தமிழசை, மீம்ஸ்கள் பற்றிப் பேசிக்கொண்டே இருக்க, ‘‘எவன் பார்த்த வேலைடா அது’’ என்று பிரபலமான மீம்ஸ் தலைப்பை இடையில் எடுத்துவிட்டு வெடிச்சிரிப்பை ஏற்படுத்தினார் ஜெயக்குமார்.

கூடவே, தன் தலையுடன் தாஜ்மகால் படம் இணைத்து வெளியிடப்பட்ட மீம்ஸுக்கு, ‘‘சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்’’ என்று விடையைச் சொல்லி, ‘‘இதைப் பார்த்துவிட்டு, என் குடும்பமே குலுங்கிக்குலுங்கிச் சிரித்தது’’ என்று அவர் சொல்ல... அரங்கமே குலுங்கி அதிர்ந்தது.

‘‘அண்ணாவின் ‘மாதமோ சித்திரை, மணியோ பத்தரை’ என்ற அண்ணாவின் அடுக்குமொழிபோல உங்களுடைய ஃபேமஸ் அடுக்குமொழியைக் கூறுங்கள்’’ என்று கேட்டதுதான் தாமதம்... கொஞ்சம்கூட சளைக்காமல், ‘‘சூரியன் உதிக்கவில்லை என்றாலும், இலைகள் துளிர்க்கவில்லை என்றாலும், மாம்பழம் பழுக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’’ என்று வழக்கமான தன்னுடைய உச்சஸ்தாயியில் முழங்கினார் தமிழிசை. மைக்கை வாங்கிய ஜெயக்குமார், ‘‘இலை எப்போதும் துளிர்த்துக்கொண்டுதான் இருக்கும்’’ என்று சொல்லி, கலகலப்பை உருவாக்கினார்.

மொத்தத்தில் மாணவர்கள் மனதில் பல்வேறு விஷயங்களையும் மென்மையாகப் பதிய வைத்தது இந்த அரசியல் அரங்கு.

- ஐஷ்வர்யா
படம்:  பா.காளிமுத்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism