Published:Updated:

கை கொடுப்போம்... 'தானே' துயர் துடைப்போம்!

கை கொடுப்போம்... 'தானே' துயர் துடைப்போம்!

கை கொடுப்போம்... 'தானே' துயர் துடைப்போம்!

ன்பார்ந்த வாசகப் பெருமக்களே...

'தானே’ புயலின் கோரத் தாண்டவம் ஏற்படுத்திய அழிவுகளில் இருந்து கடலூர், புதுச்சேரி மக்களை மீட்டு எடுப்பதற்குத் தன்னாலான முயற்சிகளில் விகடன் குழுமம் இறங்கி இருக்கிறது. புயல் ஏற்படுத்தியுள்ள அழிவின் பரிதாப பரிமாணங்களை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்களில் வெளியிட்டு, என்னவெல்லாம் மீட்பு உதவிகளை பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்காகச் செய்யலாம் என்று வாசகர்களின்   எண்ணங்களைக் கேட்டிருந்தோம். அந்த இதழ்கள் வெளியான ஒரு சில மணி நேரத்தில் இருந்தே, இதற்கென பிரத்யேகமாக அளித்திருந்த தொலைபேசிக் குரல் பதிவிலும், மின் அஞ்சல் மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் உருக்கமான இதயத்தோடு பிரமிப்பான யோசனைகளை நீங்கள் குவிக்கத் தொடங்கி விட்டீர்கள்.

கை கொடுப்போம்... 'தானே' துயர் துடைப்போம்!

உலகமே திடுக்கிட்டு கண்ணீர் வடித்த சுனாமியின் அழிவுகள் ஒரு வகை என்றால்... கடலூர், புதுச்சேரி, நாகை மாவட்டத்தின் சில பகுதி மக்களையும் உயிரோடு நடைபிணங்களாக மாற்றிவிட்ட 'தானே’ புயலின் பேரழிவு இன்னொரு விதமான பெரும்சோகம். 'கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகும் - இந்த மக்கள் முழுமையாக மீண்டு வர!’ என்று நிபுணர்கள் சிலர் சொல்வதைக்கேட்டால், நடுக்கம் அதிகமாகிறது. புயல் முடக்கிப்போட்ட பலா, முந்திரி மரங்களை அங்கே இருந்து வெட்டி அகற்றுவதற்குக்கூட வழி இல்லாமல் குடும்பம் குடும்பமாகத் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் கண்ணீர்க் காட்சிகள், கலக்கமூட்டுபவை.

'சூறைக்காற்று பிய்த்துப்போட்ட லட்சக்கணக்கான குடிசைகளின் உடனடித் தேவை ஓலைக்கீற்றுகளும் மூங்கில் கழிகளும்தான். மனமும் பணமும் படைத்த நல்லவர்கள் அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யலாமே!’ என்பதில் தொடங்கி, 'மின்சாரம் இல்லாத இருட்டு வாழ்க்கையில் இருந்து அவர்களை மீட்பதற்கு மெழுகுவத்திகளும் மண்எண்ணெயும் கொண்டு போய்ச் சேர்த்து உதவலாமே!’ என்பது வரை முதல்கட்ட யோசனைகளை அள்ளிக் குவித்திருக்கிறீர்கள் வாசகர்களாகிய நீங்கள்.

கொந்தளிக்கும் உணர்வுகளோடு விகடனைத் தொடர்பு கொண்டார் ஓவியர் வீரசந்தானம். 'தமிழகத்தின் மிகப் பிரபலமான ஓவியர்கள் அனைவரையும் அணுகி ஆளுக்கு ஒரு ஓவியம் தரக் கேட்கலாம். அந்த ஓவியங்களை ஒரு கண்காட்சியாக விகடன் குழுமம் ஏற்பாடு செய்யலாம். பெரும் தொழில் அதிபர்களும்  முக்கியஸ்தர்களும் கலையார்வத்தோடும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மீது அக்கறைகொண்டும் அந்த ஓவியங்களை நல்ல விலைக்கு ஏலம் எடுப்பார்கள். அந்தத் தொகையை 'தானே’ துயர் துடைப்புக்காக உபயோகிக்கலாம்’ என்று, நெகிழவைக்கும் யோசனையை சொன்னார்.

புயலின் புது விளைவாக நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகி வரும் கிராமங்களைக் கண்டறிந்து மருத்துவக் குழுக்களை அனுப்பி வைக்கும் யோசனையையும் உங்களில் பலர் தந்திருக்கிறீர்கள். இதுபோல இன்னும் இன்னும் ஈரம்மிக்க எண்ணங்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன.

'தானே’ துயர் துடைப்புத் திட்டத்துக்கு உதவிடும் வகையில் முதல் பங்களிப்பாக விகடன் குழும நிறுவனங்கள் சார்பாக 10 லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுக்க முன் வந்துள்ளோம். நீங்களும் உங்களால் இயன்ற நிதியை எங்களிடம் அனுப்பத் தொடங்கிவிட்டீர்கள். 'எந்தப் பெயருக்கு நிதி அனுப்புவது? எப்படி அனுப்புவது?’ என்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து மனிதநேயமிக்க விசாரணைகள்.

Vasan Charitable Trust  என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு நீங்கள் செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம்.  நேரடியாக நிதியை நெட்பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009, நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாகவும் அனுப்பலாம்.

வெளிநாட்டு வாசகர்கள் ஆன்லைன் மூலமாக பணத்தை அனுப்பிவைக்க வசதியாக Payment gateway ஏற்பாட்டுக்கு முயற்சி செய்து வருகிறோம். அதுபற்றிய விவரத்தை எங்கள் www.vikatan.com-ல் விரைவில் வெளியிடுகிறோம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர் விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அதை அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக் கொள்ளலாம்.

Vasan Charitable Trust  பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-G பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் கீழே நாங்கள் அளித்துள்ள படிவத்தையும் தயவுசெய்து முழுமையாகப் பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைப்பதோடு, துயர் துடைப்புத் திட்டத்தின் அடுத்தடுத்த முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம்.

ஊருக்கெல்லாம் சோறிடும் தஞ்சை மண்ணின் விவசாயிகள் பஞ்சத்தில் வாடித் தவித்தபோது, விகடன் நிறுவனத்தோடு பெருங்கடலாகக் கைகோத்து வாசகர்கள் திரட்டிக் கொடுத்த நிதியும்... அதன் மூலம் அடுத்தடுத்துப் பல கிராமங்களைத் தத்தெடுத்து நாம் நடத்திய அரிசி விநியோகமும் என்றைக்கும் வரலாற்றில் நிலைத்திருக்கக்கூடியது. இதோ, மீண்டும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு இயற்கையால் நேர்ந்துவிட்ட இந்த சோகத்திலும் கை கோக்கிறோம்.

வாருங்கள்... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!

கை கொடுப்போம்... 'தானே' துயர் துடைப்போம்!
கை கொடுப்போம்... 'தானே' துயர் துடைப்போம்!

- ஆசிரியர்

அடுத்த கட்டுரைக்கு