Published:Updated:

நாணயம் மேடை

தொழில் தொடங்க எவ்வளவு கடன் கிடைக்கும்? தொகுப்பு: சி.சரவணன்,படம்: ஜெ.வேங்கடராஜ்.

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஒரு தொழில் தொடங்க எவ்வளவு பணம் கடனாக கிடைக்கும்? தொழில் தொடங்குபவர் எவ்வளவு பணத்தை மூலதனமாகப் போட வேண்டி இருக்கும்?

- சுரேஷ் கோபாலன், மதுரை-2

''தொழில் கடன் என்பது தொழில் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. தொழில் திட்ட மதிப்பீடு என்பது நிலம், கட்டடம், இயந்திரத் தளவாடங்கள், மின் இணைப்பு செலவு மற்றும் தொழிலை ஆரம்பிப்பதற்கான இதர நிலையான செலவுகளை உள்ளடக்கியதாகும். பொதுவாக, இந்தத் தொழில் திட்ட மதிப்பீட்டில் 75 சதவிகிதம் கடன் கிடைக்க வாய்ப்புண்டு.  மீதியை தொழில்முனைவோர்  தனது கையிலிருந்துதான் போட வேண்டியிருக்கும். தொழில் கடனுக்கு மானியம் கிடைக்கும் என்றாலும், அது உடனடியாகக்  கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் திட்ட மதிப்பில் சுமார் 25 சதவிகிதத் தொகையைத் திரட்டிக்கொண்டு மீதியை வங்கியில் கடனாக வாங்க முயற்சிக்கலாம்.''  

நாணயம் மேடை

சிறு தொழில்களுக்கு மத்திய, மாநில அரசுகள் என்னென்ன மானியங்களை அளிக்கின்றன?

- கார்த்தி சரவணன், இ-மெயில் மூலம்.

நாணயம் மேடை

''முதலில், மாநில அரசு வழங்கும் தொழில் மானியங்களைப் பார்ப்போம். தமிழக அரசு புதிதாக ஒரு தொழில் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி தொழில் திட்ட மதிப்பீட்டில்

25 சதவிகிதம் மானியமாக அளிக்கப்படும். இதில், அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஒரு கோடி ரூபாய். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். தமிழக அரசு குறுந்தொழில்களுக்கு இயந்திரங்களின் மதிப்பில் 15 சதவிகிதம் அல்லது 20 லட்ச ரூபாய் - இதில் எது குறைவோ அதை முதலீட்டு மானியமாக வழங்குகிறது.

மத்திய அரசு, பாரதப் பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தில் தொழில் திட்ட உச்சவரம்பு அதிகபட்சம் 25 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இத்திட்டத்தைக் காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது. மானியம் மற்றும் கடன் வரம்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வரலாம். கூடுதல் விவரங்களுக்கு, காதி மற்றும் கிராமத் தொழில்கள் கமிஷன், அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-600 086-ஐ அணுகலாம்.

உணவு பதப்படுத்துதல் தொழிலின்  திட்ட மதிப்பில் 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் 50 லட்சம் ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இவை தவிர, மத்திய கயிறு வாரியம், தேசிய தோட்டக் கலைத் துறை போன்ற அமைப்புகள் பல்வேறு தொழில் மானியங்களை அளித்து வருகின்றன.''  

சிப்காட் தொழில் மையத்தில் இடம் வாங்கி தொழிற்சாலை அமைக்கும்போது பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்திற்கு முழு விலக்கு கிடைக்குமா?

- காயத்ரி, தூத்துக்குடி.

''முழுமையாக கிடைக்காது. 2 சதவிகித சலுகைக் கட்டணத்தில் நிலத்தை பத்திரப் பதிவு செய்யலாம்.''

உங்கள் தொடர்புக்கு

நாணயம் மேடை

நாணயம் விகடன், 757,
அண்ணா சாலை,
சென்னை-600 002.
போன்: 044 2851 1616  
இ-மெயில்: navdesk@vikatan.com
உங்களுடைய குரலிலேயே பதிவு செய்ய : 044- 66802924

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு