##~## |
கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கவேண்டும் என அரசாங்கமும், தொழில்துறையைச் சேர்ந்தவர்களும், வங்கித் தரப்பினரும் கடந்த பல மாதங்களாகவே சொல்லி வருகின்றனர். பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்ததால் வட்டி விகிதங்களைக் குறைக்கவே முடியாது என ஆர்.பி.ஐ. பிடிவாதம் காட்டி வந்தது. இதனால் புது முதலீடுகள் தடைபட்டு தொழில் வளர்ச்சியும் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது பணவீக்கம் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பது சிறப்பான விஷயம்தான். இந்த நிலையிலாவது வட்டி விகிதங்களை கொஞ்சம் குறைப் பதற்கான நடவடிக்கையை மத்திய ரிசர்வ் வங்கி எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. தவிர, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கை களை மத்திய அரசாங்கம் எடுக்க ஆரம்பித்துவிட்டது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிதி அமைச்சர் பதவியை சிதம்பரம் ஏற்றுக்கொண்டபிறகு செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக, வெளிநாட்டு முதலீடு மீண்டும் இந்தியாவை நோக்கி வேகமாக வருகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்களைதான் ஆர்.பி.ஐ. செய்யவேண்டுமே ஒழிய, முட்டுக்கட்டை போடும் வேலைகளைச் செய்யக்கூடாது.
வட்டி விகிதத்தைக் குறைத்தால் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் இருந்தாலும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவாவது இம்முறை வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ. கொஞ்சம் குறைக்கட்டும்! வேகமான பொருளாதாரச் செயல்பாட்டுக்கு வழிவிட்டு நிற்கட்டும்!
- ஆசிரியர்.