##~## |
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆகிவருகிறது நம் நாட்டின் வளர்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட நம் நாட்டின் வளர்ச்சி 9.3 சத விகிதமாக இருந்தது. கடந்த ஆண்டு அது 6.2 சதவிகிதமாக குறைந்து, இந்த ஆண்டில் வெறும் 5 சதவிகித வளர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கலாம் என்று கணித்திருக்கிறது மத்திய புள்ளிவிவரத் துறை. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான வளர்ச்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தக் கணிப்பு பொத்தாம் பொதுவாக இருக்கிறது. இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் நடந்த விஷயங்களை வைத்து, அடுத்துவரும் ஆறு மாதங்களுக்கான வளர்ச்சியை எப்படி சரியாக கணிக்க முடியும் என அரசு அதிகாரிகளான அலுவாலியா முதல் சி.ரங்கராஜன் வரை அத்தனை பேரும் ஒரேகுரலில் கேள்வி கேட்டிருக்கின்றனர். அதோடு, நிதி ஆண்டின் முடிவில் கிடைக்கும் புள்ளிவிவரங்களை வைத்துப் பார்த்தால், நம் வளர்ச்சி 5 சதவிகிதத்தைவிட அதிகமாகவே இருக்கும் என சொல்லி இருக்கின்றனர்.
ஆனால் வேடிக்கை என்னவெனில், நம் நாட்டின் வளர்ச்சி இந்த ஆண்டில் வெறும் 4.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று சொல்லி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது ஐ.எம்.எஃப்.! வளர்ச்சி குறையும் என்று சொன்னவுடன் நம் புள்ளிவிவரத் துறையை கிண்டலடித்த அதிகாரிகள், இப்போது ஐ.எம்.எஃப்.-ஐ கேள்வி கேட்பார்களா?
உண்மையை ஒப்புக்கொள்ள மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். அது இன்றைய ஆட்சியாளர்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் இல்லவே இல்லை. நம்மைவிட சிறிய நாடுகளான இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம்கூட 5.7 சதவிகித வளர்ச்சி காண, நம் நாடு மட்டும் ஏன் தளர்ச்சியைத் தழுவுகிறது என்கிற கேள்விக்கு பதில் காணவேண்டியது ஆட்சியாளர்களின் கடமை இல்லையா? இதற்கான உதவிகளை செய்வதுதானே அதிகாரிகளின் வேலை?
நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், இலவசங்களைத் தந்தே காலத்தை ஓட்டிவிடலாம் என இன்றைய அரசியல்வாதிகள் நினைத்தால், எதிர்காலம் அவர்களை ஒழித்துக்கட்டிவிடும் என்பதை அவர்கள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?
- ஆசிரியர்.

நாணயம் விகடன் இதழ் தொடர்பாக நீங்கள் தெரிவிக்க விரும்பும் எண்ணங்களை எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அனுப்ப முடியும். உங்கள் மொபைலில்
PUB (space) உங்கள் எண்ணம் (space) உங்கள் பெயர் டைப் செய்யுங்கள். 562636 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்!