பிரீமியம் ஸ்டோரி

கறுப்புப் பண வங்கிகள்!

##~##
நமது
நிதி அமைச்சர் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாத 70,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வருமான வரியைக் கட்டாமல் கறுப்புப் பணத்தை முதலீடு செய்பவர்களைச் சட்டத்தின் பிடியில் கொண்டுவருவதற்கு பல நடைமுறைகளை அரசாங்கமும் அவ்வப்போது எடுத்து வந்தாலும், இவர்களின் எண்ணிக்கைக் குறைந்ததாகத் தெரியவில்லை.

நமது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்குள் வரும் பணத்தை நெறிப்படுத்தக் கடுமையான விதிமுறைகளை வைத்திருந்தும், இந்தியாவின் மூன்று முன்னணி தனியார் வங்கிகள் அவை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கி முதலீடு செய்ய துணைபோக முயற்சித்திருக்கின்றன.

ஆனால், இந்த விதிமுறைகள் எல்லாம் அப்பாவி சாமானிய முதலீட்டாளர் களுக்குத்தான். பல கோடி ரூபாய் கறுப்புப் பணம் வைத்திருக்கும் 'பவர்ஃபுல்’ முதலீட்டாளர் எனில், அவருக்கு இந்த விதிமுறைகள் எதுவும்  செல்லுபடி ஆகாது என்கிற உண்மையைத்தான் கோப்ராபோஸ்ட் என்னும் இணையதளம் வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது.  

மேலும், இந்த வங்கிகள் தங்களுடைய பணியாளர்கள் இந்தத் தவறை செய்ய முயற்சித்தார்கள் என்று தப்பிக்க முடியாது. காரணம், கறுப்புப் பணத்தை முதலீடு செய்ய சர்ச்சையில் சிக்கிய வங்கிகளின் பல்வேறு கிளைகளும் ஒன்றுபோலவே யோசனை கூறியுள்ளன. வங்கியின் தலைமை அதிகாரிகளுக்குத் தெரியாமல் இப்படி பிஸினஸ் செய்வது சாத்தியமில்லை என்பது, அவர்கள் தாங்கள் இதுபோல் ஏற்கெனவே செய்துள்ளோம் என்று கூறியுள்ள திலிருந்து தெள்ளத் தெளிவாகிறது.

அரசாங்கம் வழக்கம்போல் சில தனிமனிதர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு நிற்காமல், ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறிய வங்கிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் எல்லோருக்கும் வங்கிச் சேவை என்னும் அரசாங்கத்தின் கனவு நனவாகாது.

- ஆசிரியர்.

ஹலோ வாசகர்களே..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு