சீட்டிங் நிறுவனங்கள்!
##~## |
மீண்டும் ஒரு சீட்டு நிறுவனம் கம்பி நீட்டியிருக்கிறது - மெகா அளவில்! மேற்கு வங்கத்தில் சாரதா குழுமம், சிட் ஃபண்ட் என்ற பெயரில், அரும்பாடுபட்டு மக்கள் சேர்த்து வைத்தப் பணம் சுமார் இருபதாயிரம் கோடி ரூபாயை அநியாயத்துக்கு கொள்ளை அடித்துக்கொண்டு ஓடியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது நடந்தது மேற்கு வங்கத்தில்தானே! அதனால் நமக்கென்ன ஆச்சு? என்று நாம் சும்மா இருந்துவிடக் கூடாது. தமிழகத்திலும் கிராமம், நகரம் என எந்த வித்தியாசமுமில்லாமல் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீட்டு நிறுவனங்கள் ஜோராகச் செயல்பட்டு வருகின்றன. இந்த சீட்டு கம்பெனிகளில் 99 சதவிகிதமானவை அரசு அனுமதி பெறாதவை. முறைப்படி பதிவு செய்யப்படாதவை.
சந்துக்கு சந்து ஒன்றுக்கு ஒன்பதாக நடந்து வரும் இந்த அங்கீகரிக்கப்படாத சீட்டு கம்பெனி களில் பல, இனிவரும் நாட்களில் மக்களின் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடாது என்பதற்கு என்ன நிச்சயம்? சீட்டு கம்பெனிகளில் மக்கள் போடும் பணத்திற்கு என்னதான் உத்தரவாதம்?
தவிர, நிதி நிறுவனங்கள் மக்களின் பணத்தை வாரிக்கொண்டு ஓடுவது புது விஷயமல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன், சென்னையில் பல நிதி நிறுவனங்கள் அதிக வட்டி என்கிற ஆசையைக் காட்டி, கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை அள்ளிச் சென்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பாஸி என்கிற நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தின்று தீர்த்தது. சமீபத்தில் கோவையில் ஃபைன் ஃப்யூச்சர் என்கிற நிறுவனம் பல நூறு கோடி ரூபாய்க்கு உலை வைத்தது. இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கு ஒரு முக்கியமான காரணம் அரசியலும்தான் என்பதை சொல்லவே தேவையில்லை.
அதிக வட்டிக்கு ஆலாய்ப் பறக்கும் மக்களின் பேராசைதான் சீட்டு கம்பெனிகள் கொழிப்பதற்கு காரணம் என்று சொல்லி அரசாங்கம் தப்பிக்க முடியாது. மக்களை மொட்டை அடிப்பதற்கு என்றே பல அரசியல்வாதிகள் பெரும் நாடகம் நடத்தி இருப்பது புரிகிறது. கடுமையான சட்டங்கள் இயற்றினாலும் குற்றவாளிகள் அரசியல்வாதிகளாக இருக்கும்போது, நீதி எந்த அளவுக்கு தன் கடமையைச் செய்யும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது!
- ஆசிரியர்
