Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

இதுவும் மதவெறி துரோகம்தான்!

##~##
ஹலோ வாசகர்களே..!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மீண்டும் 'ஸ்பாட் ஃபிக்ஸிங்’ மோசடிக்குள் மாட்டியிருக்கிறது. ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் டெல்லி போலீஸால் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டு உள்ளனர். 'ஸ்பாட் ஃபிக்ஸிங்’கை செய்தது இந்த மூன்று பேர் மட்டும்தானா, இல்லை வேறு அணியிலும் இதேமாதிரியான மோசடிகள் நடந்திருக்கிறதா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

ஆண்டுக்கொருமுறை நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு நாம் தரும் மரியாதையும், பணமும் மிக மிக அதிகம். தவிர, இந்தப் போட்டியால் வீணாகும் மனித நேரமும், சக்தியும் அளவிட முடியாதது. ஒரு நாள் அல்ல, கிட்டத்தட்ட 50 நாட்கள் நடக்கும் இந்த கிரிக்கெட் போட்டி பலகோடி மக்களின் வேலைதிறனை திசை திருப்புகிறது. ஆண்டுக்கு 8 சதவிகித ஜி.டி.பி. வளர்ச்சிகொண்ட சீனாவில்கூட இந்த அளவுக்கு மனித சக்தியும், நேரமும் விளையாட்டை நோக்கியே மொத்தமாக செலவு செய்யப்படுவதில்லை. உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க, அங்கும் பல விளையாட்டுகளை விளையாடவே செய்கின்றனர். ஆனால், நம் நாட்டில் மட்டும் பத்து பேர் விளையாடுவார்கள்; பத்து கோடி பேர் உட்கார்ந்து பார்ப்பார்கள் என்கிற நிலை தொடர்ந்து இருக்கிறது.

பொதுச் சொத்துகளுக்கு அரசியல் மற்றும் சாதியின் பெயரால் சேதம் விளைவிப்பவர்களுக்கு  அரசாங்கம் கொடுக்கும் கடுமையான தண்டனையை தமிழ்நாட்டில் பார்க்கிறோம். இந்தியாவில் கிரிக்கெட் என்பதுகூட அறிவிக்கப்படாத ஒரு மதம்தான். அந்த மதத்தின் பெயரால் வெறியை வளர்த்து, பல லட்சக்கணக்கானவர்களை நம்பவைத்து, கடைசியில் காசுக்காக நம்பிக்கைத் துரோகம் செய்வதும்கூட அப்படி ஒரு பெருங்குற்றமாகவே பார்க்கப்பட வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்ற தடையை இந்த துரோகிகளுக்கு இந்திய அரசு விதிக்கவேண்டும். 'அது விளையாட்டு... அதற்கு ஒரு வாரியம் இருக்கிறது... அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லி, அரசாங்கம் ஒதுங்கி இருக்குமானால்... அந்த அரசாங்கத்தையும் துரோகப் பட்டியலில் சேர்க்கவேண்டும்!

- ஆசிரியர்.

ஹலோ வாசகர்களே..!
அடுத்த கட்டுரைக்கு