Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

செயல்படுங்கள்! இல்லாவிட்டால்..?

பிரீமியம் ஸ்டோரி
##~##

இன்னும்கூட குறைந்துவிடுமோ! என்கிற கவலையோடு, எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்துவந்த நான்காம் காலாண்டிற்கான ஜி.டி.பி. மூன்றாம் காலாண்டைவிட கொஞ்சம் அதிகமாகவே வந்திருக்கிறது. மூன்றாம் காலாண்டில் 4.7 சதவிகித வளர்ச்சி கண்ட நம் பொருளாதாரம், நான்காம் காலாண்டில் 0.1 சதவிகிதம் உயர்ந்திருப்பது சற்று ஆறுதல்தான்.

ஆனால், 2012-13ம் ஆண்டு கணக்கின்படி பார்த்தால், 5 சதவிகித ஜி.டி.பி. வளர்ச்சியையே நாம் கண்டிருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவான வளர்ச்சி இது என்பதைக் கேள்விப்படும்போது கொஞ்சநஞ்சம் வந்த மகிழ்ச்சியும் நீர்க்குமிழிபோல சட்டென வெடித்து, கவலையாக மாறிவிடுகிறது. இந்த ஆண்டில் ஆறு சதவிகித வளர்ச்சி என்பது பெரிய சவாலாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

நாட்டின் வளர்ச்சிக்காக உருப்படியாக எதையும் செய்யாமல் வெறுமனே காலத்தை ஓட்டும் காங்கிரஸ் அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால்தான் நாட்டின் பொருளாதாரம் பாழாகிறது. புதிய புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக, எல்லாப் பொருட்களையும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்தாலே போதும் என்கிற தவறான கொள்கை முடிவால், சீனாவில் ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான வேலையை உருவாக்குகிறோம். ஆனால், நம் நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால், பல லட்சம்பேர் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினால் மட்டும் போதாது; அதற்கான நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் முடுக்கிவிட வேண்டும்.

ஹலோ வாசகர்களே..!

வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களையும் இன்னும் வேகமாகச் செய்ய ஆரம்பிக்கவேண்டும். உதாரணமாக, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னை காரணமாக கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய் அளவுள்ள திட்டங்கள் நிறைவேறாமல் கிடப்பிலேயே கிடக்கிறது.

இப்படி எல்லாத் திட்டங்களும் ஏதோ ஒருவகையில் முட்டுக்கட்டையில் மாட்டி, மேலே செல்ல முடியாமல் திணறும் பிரச்னைகளைத் தீர்க்காமல், நம் நாட்டின் ஜி.டி.பி. 6-7 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தங்களுடைய ஆட்சிதான் முடிவுக்கு வருகிறதே என்று சுணக்கம் காட்டாமல், பொருளாதார வளர்ச்சிக்கு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்கள் காங்கிரஸை தூக்கி எறியவும் தயங்கமாட்டார்கள்!

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு