Published:Updated:

நள்ளிரவு...ஆம்னி பஸ்... 5 கோடி...

தைரிய சங்கீதா !

ஆர்.லோகநாதன்

நள்ளிரவு...ஆம்னி பஸ்... 5 கோடி...

''ரொம்ப சந்தோஷமா இருக்கு. முன்னிலும் தைரியமா இருக்கேன்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான 'கல்பனா சாவ்லா' விருதை, தமிழக முதல்வர் ஜெயலலிதா கைகளால் பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார், திருச்சி ஆர்.டி.ஓ-வான சங்கீதா! வாழ்த்து சொல்ல வீடு தேடிச் சென்றபோது, சிம்பிளான சுடிதாரில் நம்மை வரவேற்றார்.

பணப்புழக்கம் கட்டுக்கடங்காமல் புழங்கிய சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில், அமைச்சராக இருந்த கே.என்.நேரு (தி.மு.க.) போட்டியிட்ட திருச்சி மேற்கு தொகுதியில், தேர்தல் அலுவலராக பணியாற்றினார் சங்கீதா. அப்போது... நள்ளிரவு நேரத்தில் துணிச்சலாகச் சென்று, ஆம்னி பஸ்ஸில் அதிரடி ரெய்டு நடத்தி 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய சாகசத்துக்காகத்தான் இந்த விருது!

அதைப் பற்றிச் சொல்லும்போதே குரலில் திடம் ஏறுகிறது 33 வயதாகும் சங்கீதாவுக்கு...

##~##

''திருவாரூர் மாவட்டத்துல பயிற்சி முடிச்சு, ஜனவரியிலதான் திருச்சி ஆர்.டி.ஓ. பதவிக்கு வந்தேன். அடுத்த சில மாசத்துலயே தேர்தல். அந்த வேலைகள்ல பிஸியானேன். ஏப்ரல் அஞ்சாம் தேதி விடியற்காலை ஒண்ணே முக்கால் மணிக்கு... என் செல்போன் அலறுது. எடுத்து பேசினா, 'பொன்னகர் ஏரியாவில் தியேட்டர் பின்பக்கம் இருக்கற ரோட்டில் ஆம்னி பஸ் ஒண்ணு நிக்குது. அதுல கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கு’னு சொல்லிட்டு போனை வெச்சுட்டார் ஒருத்தர். உடனடியா என் டிரைவர் துரைராஜை புறப்பட்டு வரச் சொன்னேன். வழக்கம்போல மின்னல் வேகத்துல அவர் வந்து சேர, உடனடியா ஸ்பாட்டை நோக்கிக் கிளம்பிட்டேன். ஆனா, 'ஒருவேளை இது நமக்காக குறிவெச்சு யாராவது நடத்தற நாடகமா இருக்குமோ?’ங்கற சந்தேகம் எட்டிப் பார்த்துச்சு. ஏன்னா... சில தினங்களுக்கு முன்னதான் ஆழ்வார்தோப்பு பகுதியில் வீடுவீடா விநியோகம் செய்யப்பட்ட வேட்டி - சேலைகள பறிமுதல் செஞ்சேன். பல இடங்கள்ல பண விநியோகம் நடக்கவிடாம கடுமையா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன்'' என்று சங்கீதா விவரிக்கும்போது, நம் மனமும் அவருடன் விரைகிறது.

''தைரியத்தோட பொன்னகர் ஏரியாவுக்குப் போனதும்... போன்ல சொன்னது போலவே ஆம்னி பஸ் இருந்துச்சு. என்னோட டிரைவரும் நானும் ஒரு ஓரமா காத்திருந்தோம். கொஞ்ச நேரத்தில் ஒரு இன்னோவா கார் வந்து, பஸ் பக்கத்துல நின்னுச்சு. சட்டுனு பஸ்ஸை நோக்கி நாங்க போகவும்... காரை விட்டுட்டு ஓடிட்டாங்க. பஸ்ஸுக்குள்ள ஏறிப் பார்த்தா... பணம் எதுவும் இல்ல. பஸ்ஸுக்கு மேலே தார்ப்பாய் போட்டு மூடிஇருந்தது. என் டிரைவர் மேலே ஏறி தார்ப்பாயைப் பிரிச்சார். உள்ளே அஞ்சு டிராவல் பேக்குகள். அதுக்குள்ளே கட்டுக்கட்டா பணம்!''

- ஜனநாயகத்துக்கு எதிரான அந்தக் குற்றத்தை நேரடியாக சந்தித்த அதிர்ச்சியும், கோபமும் இன்னும் மிச்சம் இருக்கிறது அவர் கண்களில்.

''பணத்தை பறிமுதல் செய்யச் சென்றபோது, தனியாளாப் போறோம் என்ற பயம் இல்லை. ஆனா, ஜாக்கிரதையா செயல்படணும்ங்கற நிதானமும், கவனமும் இருந்தது. இன்னிக்கு பெண்கள் பல துறைகளிலும் வேலை செய்றாங்க. அவங்களுக்கும் இதுபோன்று இரவு நேரத்தில் சவாலான வேலைகளுக்குச் செல்கிற சூழ்நிலை வரலாம். அதுமாதிரியான சந்தர்ப்பங்கள்ல கடமையை தவறாம செய்யுற அதேநேரத்துல, தங்களை காப்பாத்திக்கறதுலேயும் கவனமா இருக்கணும். எந்தப் பக்கம் இருந்தும் ஆபத்து வரலாம்னு எதிர்பார்த்து, எதிர்கொள்ளத் தயாரா இருக்கணும். ஜெயிக்கறப்ப கொண்டாடுற இந்தச் சமூகம், தோல்வி அடைஞ்சுட்டா எள்ளி நகையாடவும் தயாரா இருக்கும்ங்கறத மறந்துடக்கூடாது!'' என்று எச்சரிக்கை கொடுக்கும் சங்கீதா, அடிப்படையில் ஒரு சித்த மருத்துவர்.

''பிறந்து வளர்ந்தது எல்லாமே சேலம் மாவட்டம், மேட்டூர்லதான். அப்பா சண்முகம், கால்நடைத் துறை மருத்துவர். துணை இயக்குநரா இருந்து ஓய்வு பெற்றவர். அவர் விரும்பினபடி, சென்னை, அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். படிப்பு முடிஞ்சதும், மேட்டூர்லயே பிராக்டீஸ் செய்ய ஆரம்பிச்சேன். 2004-ல் சென்னையில் சிவில் கான்ட்ராக்டராக இருக்கும் முரளியுடன் திருமணம். அதுக்கு அப்புறம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் டூனு வரிசையா எக்ஸாம் எழுதினேன். பாஸ் ஆகல. வி.ஏ.ஓ. எக்ஸாம்கூட அட்டெண்ட் பண்ணேன். கிடைக்கல. எதுக்கும் லாயக்கு இல்லையோனு எனக்குள்ளேயே சின்னதா காம்ப்ளெக்ஸ். அவர்தான், 'உன்னால கண்டிப்பா முடியும். இன்னும் சின்ஸியரா டிரை பண்ணு’னு ஊக்கம் கொடுத்தாரு. மீண்டும் தீவிரமா படிச்சேன். 2008-ல் குரூப் ஒன் எக்ஸாமில் பாஸாகி, ஆர்.டி.ஓ. பதவியைப் பிடிச்சுட்டேன்!'' என்று வெற்றிக் கதை சொன்னார் சங்கீதா.

நள்ளிரவு...ஆம்னி பஸ்... 5 கோடி...

விருது தகவல் கிடைத்த தருணத்தைப் பற்றி பேச்சு திரும்பியது. ''விருதுக்கு ரெண்டு நாள் முன்னதான் தகவல் வந்தது. அன்னிக்கு என் வீட்டுக்காரர் இங்கேதான் இருந்தார். மதியம் கலெக்டர் மேடம் போன் செஞ்சு, 'சென்னையில இருந்து ஏதாவது தகவல் வந்ததா?’னு கேட்டாங்க. 'எதுவும் இல்லையே மேடம்’னு சொன்னேன். 'ஒரு முக்கியமான போன் வரும். காத்திருங்க’னு சொன்னாங்க. ஏதாவது பிரச்னை தொடர்பா இருக்குமோனு  ஒரே குழப்பம். மேடம் மறுபடியும் சாயந்திரமா போன் பண்ணி, அவார்டு தகவலைச் சொன்னாங்க. எனக்கும், வீட்டுக்காரருக்கும் ரொம்ப சந்தோ ஷம். ஊருக்கு போன் பண்ணி தகவல் சொல்ல, அவங்களும் மகிழ்ச்சியில துள்ளிட்டாங்க!'' என்று உற்சாகமானார்.

''கணவர் சென்னையில். பெற்றோர் மேட்டூரில். குடும்பத்தை பிரிஞ்சு இருக்கோமேனு வருத்தமா இல்லையா?'' என்றால்,

''தினம் தினம் எத்தனைப் பேருக்கு நல்லது செய்ய முடியுது, எத்தனைத் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியுது? குடும்பத்தை பிரிஞ்சு இருக்கிற கவலையை, இந்தப் பொறுப்பும், திருப்தியும் ஈடுகட்டுது!'' என்று புன்னகையுடன் விடை தருகிறார் சங்கீதா!

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்