
"இந்தச் சந்திப்புக்கான மேடையை எனக்கு ரொம்பவே பிடிச்ச ‘ஆனந்த விகடன்’ அமைச்சுத் தர்றது இன்னும் சந்தோஷத்தைத் தருது!" - சித்ரா
செமயான ஹேப்பி மோடில் இருக்கிறார் சித்ரா. சின்னத்திரை ரசிகர்களைப் பொறுத்தவரைக்கும் சித்து.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தந்த பெரிய ரீச்சின் ஊடாகவே வரும் சில நாட்களில் வாழ்க்கையின் அடுத்த புரமோஷன் கிடைக்க இருக்கிறது. அது சித்துவின் திருமணம்.
சினிமாவைப் போலவே சீரியல்களும் கேரளா, பெங்களூரு என பக்கத்து மாநிலங்களில் ஹீரோயின்களைத் தேடிக் கொண்டிருந்த சூழலில், சாதாரண மிடில் கிளாஸ் பின்னணியிலிருந்து வந்து சீரியல் ஏரியாவில் தனக்கென ரசிகர் கூட்டத்தைக் கட்டி எழுப்பியிருக்கும் சித்ராவிடம் அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் சொல்லிப் பேசினோம்.
‘’டிவியில நான் இன்னைக்கு இந்த உயரத்துக்கு வந்திருக்கேன்னா, அதுக்கு முழுக் காரணம் என்னுடைய ரசிகர்கள்தான். சீரியல் ஆடியன்ஸ்னு பார்த்தா பொதுவா பெண்கள்தான் அதிகளவுல இருப்பாங்கன்னு ஒரு கருத்து இருக்கு. ஆனா எனக்கு ஆண்கள் மத்தியிலிருந்தும் பெரிய ஆதரவு கிடைச்சிட்டு வருது. அதுல நிறையப் பேர் முதன் முதலா நான் டிவிக்கு வந்ததுல இருந்து என்னை ஃபாலோ பண்ணிட்டு வர்றவங்க. டிவியில சின்ன இடைவெளி விட்டாக் கூட, சோஷியல் மீடியாவுல வழியா வந்து ‘எங்க போயிட்டீங்க’னு என்னைத் தேடறவங்க. இந்த ரசிகர்களுக்காகவாவது நான் தொடர்ந்து டிவியில் இருக்கணும்" என்கிறார்.
அன்பு செலுத்தும் அந்த ரசிகர்களுக்குப் பதிலுக்கு சித்ரா என்ன செய்யப் போகிறாராம்?

"அப்பப்ப சோஷியல் மீடியாவுல லைவ் வந்து அவங்ககிட்டப் பேசுவேன். எங்கிட்டத் தொடர்புல இருக்கிறவங்க வீடுகள்ல விசேஷம்னு கூப்பிட்டா முன்னுரிமை கொடுத்துப் போயிட்டு வருவேன். இதெல்லாம் போதாதுன்னுதான் ’கல்யாணம்’கிற என் வாழ்வின் முக்கியமான நிகழ்வு நடக்கப் போற சூழல்ல அந்த சந்தோஷத்தை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துக்கலாம்னு அவங்களை நேர்ல சந்திக்கலாம்னு முடிவு செய்தேன். அதேநேரம் சமூக இடைவெளி உட்பட என்னென்ன கோவிட் நிபந்தனைகள் இருக்கோ அவையெல்லாம் நிச்சயம் ஃபாலோ பண்ணப்படும்" என்றவர்,
"இந்தச் சந்திப்புக்கான மேடையை எனக்கு ரொம்பவே பிடிச்ச ‘ஆனந்த விகடன்’ அமைச்சுத் தர்றது இன்னும் சந்தோஷத்தைத் தருது" என்கிறார்.
வருகிற வியாழக்கிழமை, அதாவது 26/11/20 சென்னையில் நடக்க இருக்கிற ‘Fan meet with Chithu’ நிகழ்ச்சி ஆனந்த விகடன் இதழிலும் சினிமா விகடன் யூடியூப் சேனலிலும் வெளியாகும்.