Published:Updated:

கார்ட்டூன் மாஸ்டர் ஹாசிப்கானோடு ஓர் உரையாடல்... நீங்களும் கலந்துகொள்வது எப்படி?

ஹாசிப் கான்
ஹாசிப் கான்

கடந்த பத்து ஆண்டுகளாக கேலிச்சித்திரங்களின் மூலம் இந்தியச் சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியாக விளங்குபவர். பெரும் உரைகளும் விளக்கப் புத்தகங்களும் நிகழ்த்தாத அற்புதத்தை இவரின் ஓர் ஓவியம் உணர்த்திவிடும்.

நம் தேசத்தில் தரமான கேலிச்சித்திரங்களுக்கு என்று பாரம்பர்யம் இருக்கிறது. பாரதி தொடங்கி பல்வேறு அரசியல் நோக்கர்கள் தங்களின் கருத்துகளைத் துல்லியமாகச் சொல்லக் கேலிச்சித்தரங்களையே நாடுவர். இது ஒன்றும் எளிமையான வேலையில்லை. சரியான அரசியல் புரிதலும் அதை வெளிப்படுத்த உதவும் கற்பனைத் திறனும் இல்லையென்றால் கேலிச்சித்திரங்கள் சாத்தியமே இல்லை. இந்தக் கலையை மிகவும் முழுமையாகக் கைவரப் பெற்றவர் ஹாசிப்கான். இந்தியாவே திரும்பிப்பார்க்கும் கார்ட்டூனிஸ்ட்.

ஹாசிப்கான்
ஹாசிப்கான்

விகடன் வழங்கிய நம்பிக்கை மனிதர் விருதுக்குச் சொந்தக்காரர். கடந்த பத்து ஆண்டுகளாக கேலிச்சித்திரங்களின் மூலம் இந்தியச் சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியாக விளங்குபவர். பெரும் உரைகளும் விளக்கப் புத்தகங்களும் நிகழ்த்தாத அற்புதத்தை இவரின் ஓர் ஓவியம் உணர்த்திவிடும். அதனால்தான் தமிழக எல்லைகளைத் தாண்டியும் இவரின் ஓவியங்கள் அகில இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகின்றன.

எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவர் ஹாசிப் கான். எட்டுவயதுமுதலே ஓவியத்தில் ஆர்வம் மிகுந்தவராகக் காணப்பட்டாலும் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத நிலை. குடும்ப பாரத்தைச் சுமக்க வேலைக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. வேலைக்குப் போனாலும் தன் கனவையும் கலையையும் கைவிடாத ஹாசிப் கான் 2010 ல் ஓவியங்கள் பக்கம் மீண்டும் வந்து சேர்ந்தார். அதன்பின் ஆனந்தவிகடனோடு இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். அதன்பின் நிகழ்ந்தது அனைத்தும் வரலாறு.

சமூக அநீதி
சமூக அநீதி

ஹாசிப் கானின் கேலிச்சித்தரம், ஒரு பிரச்னையின் தீவிரத்தைச் சொல்லும். கேலியைத் தாண்டி அதில் காணப்படும் விமர்சனம், உணர்வு, தீவிரம், கலகம் ஆகியன பார்வையாளர்களை ஒரு கணத்தில் தாக்கும். அவர் மீது கட்சி அரசியல் முத்திரையைப் பதிக்க முடியாது. காரணம் அவரின் கலகம் அதிகாரத்துக்கு எதிரானதுதானே தவிர குறிப்பிட்ட கட்சிக்கோ தனிநபருக்கோ சார்ந்த விமர்சனமாக ஒருபோதும் இருந்ததில்லை.

இவரின் டெசோ மாநாடு குறித்த ஓவியம், காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி, அனிதா மரணம், டீமானிடைசேசன் கொரோனா காலத்து சமூக இடைவெளி ஓவியம் என அனைத்து கேலிச்சித்திரங்களும் நம் மனசாட்சியைக் கேள்விக்குள்ளாக்குபவை. இன்று ஒரு பிரச்னையை அவரின் கேலிச்சித்திரம் கொண்டே புரிந்துகொண்டுவிடலாம் என்று பலரும் நினைக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் ஹாசிப்கான் இன்னும் எளிமையாகி தான் உண்டு தன் தூரிகை உண்டு என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

வளரும் இளம் கார்ட்டூனிஸ்ட்களின் ஆதர்சமாகிவிட்ட ஹாசிப் கான், விகடன் வாசகர்களோடும் இளம் கலைஞர்களோடும் உரையாட இருக்கிறார். ஆனந்த விகடன் நடத்தும், 'ஹாசிப்கானோடு உரையாடுங்கள்' என்னும் நிகழ்ச்சியின் மூலம் நேரலையில் பேச இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தன் அனுபவத்திலிருந்து ஒரு கார்ட்டூன் எப்படி உருவாகும்? கார்ட்டூன் பொதுவெளியில் ஏற்படுத்தும் தர்க்கங்கள் என்னென்ன? கார்ட்டூன்கள் பெற்றுத்தந்த எதிர்வினைகள் விமர்சனங்கள் என்று தன் அனுபவத்திலிருந்து பேசுபவர் வருங்கால கார்ட்டூனிஸ்களுக்கு சில வழிகாட்டுதல்களையும் தர இருக்கிறார்.

சமூக இடைவெளி
சமூக இடைவெளி

வரும் சனிக்கிழமை (27.2.21) மாலை 5 மணி முதல் 6 மணிவரை நேரலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெறலாம். இதற்கான முன்பதிவு இலவசம். அதே வேளையில் முன்பதிவும் அவசியம்.

நீங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சக மனிதனின் குரலாய் கேலிச்சித்திரத்தின் மூலம் சமகால வரலாற்றைப் பதிவுசெய்யும் ஹாசிப்கானோடு நிகழும் இந்த உரையாடலுக்கு உங்களை வரவேற்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு