Election bannerElection banner
Published:Updated:

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021: தி.மு.க, அ.தி.மு.க - வெல்லப்போவது யார்? ஜோதிடம் சொல்வது என்ன?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021

தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவது யார்... தேர்தல் நடைபெறும் தேதி எந்தக் கட்சிக்கு சாதகம்... முடிவுகள் வெளியாகும் நாள் எந்தத் தலைவருக்குச் சாதகமாக இருக்கும் போன்ற விஷயங்கள் குறித்த ஜோதிடர்களின் கருத்துகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, தமிழகம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அனைத்து மாநிலத் தேர்தல்களில் நடைபெற்ற ஓட்டுப்பதிவுகளும் மே-2 ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்களின் வாக்குகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது தற்போது இருக்கும் ஆட்சியே தொடருமா எனப் பல கருத்துக்கணிப்புகள் வெளியாகி அரசியல் களத்தைச் சூடாக்கத் தொடங்கியிருக்கின்றன.

அதேவேளையில் தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவது யார்... தேர்தல் நடைபெறும் தேதி எந்தக் கட்சிக்கு சாதகம்... முடிவுகள் வெளியாகும் நாள் எந்தத் தலைவருக்குச் சாதகமாக இருக்கும் போன்ற விஷயங்கள் குறித்த ஜோதிடர்களின் கருத்துகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ஏப்ரல் 6 என்கிற நாளே ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நாள்தான் என்கிறார்கள் ஜோதிடர்கள். கோசாரப்படி குறிப்பாக அந்த நாளில்தான் குருபகவான் அதிசாரமாக மகர ராசியிலிருந்து கும்பராசிக்குப் பெயர்கிறார். இந்த அதிசார குருப்பெயர்ச்சி யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

பிரபல ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயனிடம் இந்தத் தேர்தல் யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பது குறித்தும் தேர்தல் தேதி முடிவைத் தீர்மானிக்கும் தன்மைகொண்டதுதானா, முதல்வர் வேட்பாளர்களாகக் கருதப்படும் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஜாதகம் என்ன சொல்கிறது என்பது குறித்துக் கேட்டோம்.

"தேர்தல் நடைபெறும் நாள் 6.4.2021. தேய்பிறை. தசமி திதி. திருவோண நட்சத்திரம். ஆட்சி ஆளுமை நிறைந்த நட்சத்திரம். அதன்பின் தமிழ்ப் புத்தாண்டுக்கு 8 நாள்கள்தான் உள்ளன. இந்தத் தேர்தலில் தேதியையே மார்ச் மாதத்தில் கொடுத்திருந்தால் அது மிகவும் தர்ம சங்கடமான நிலையைக் கொண்டுவந்திருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. அதேபோன்று ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தால் அது தற்போதைய ஆட்சியாளர்களுக்கே சாதகமாகவும் இருந்திருக்கும். காரணம், புத்தாண்டு பிறந்ததும் சூரியன் மேஷ ராசியில் உச்சமடைவார். எடப்பாடி பழனிச்சாமி மே 12-ம் தேதி பிறந்தவர். ஆகையால் அவரின் ஜாதகத்தில் சூரியன் உச்சம்.

எனவே அது அவர்களுக்கு சாதகமாகவே அமைந்திருக்கும். இப்போது எட்டு நாள்கள் முன்னதாகவே தேர்தல் வந்துவிடுகிறது. இது சில விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும் என்று உறுதியாக நம்பலாம். எந்த ஒரு கட்சியுமே தனிப்பெரும்பான்மை என்பதை அடையக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மூன்றாவது அணி என்பதற்கு சாத்தியமே இல்லை. அ.தி.மு.க - தி.மு.க ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையிலேதான் போட்டி இருக்கும். தற்போது இருக்கும் கட்சிகளுக்கு இடையிலான குழப்பங்கள், தொகுதிப் பங்கீடு ஆகியவற்றில் இருக்கும் சிக்கல்கள் எல்லாம் வரும் மார்ச் 11-ம் தேதிக்குள் தீர்ந்து உறுதியான நிலைப்பாடுகளோடு இரண்டு அணியுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவர்.

ஶ்ரீ ரங்கம் கார்த்திகேயன்
ஶ்ரீ ரங்கம் கார்த்திகேயன்

ஸ்டாலினைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. அவரை அவர் நிரூபிக்க வேண்டிய தேர்தல். அவர் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் சூரிய புக்தி ஆரம்பிக்கிற காலகட்டம். இந்த இரண்டு கிரகங்களுமே ஒருவருக்கொருவர் ஆகாத கிரகங்களாகவே ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. எனவே அவர் வெற்றிக்காகக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். ஒருவேளை அவர்கள் வீட்டில் யாரேனும் சூரியன் உச்சமாக இருக்கும் ஜாதகத்தைக் கொண்டிருந்தால் அவர்களின் யோகத்தில் இவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எடப்பாடி அவர்களின் ஜாதகத்தைப் பொறுத்தவரை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தற்போதுள்ள நிலையே தொடர்கிறது. அது, ஒரு சிறிய அளவு சாதகத்தை அவருக்கு வழங்குகிறது. அவரின் பிறந்த நாளான வரும் மே 12 அவருக்கு கொஞ்சம் மகிழ்ச்சி உடையதாகவே அமைய வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவித்தார்.

ஜோதிடர் காந்தி முருகேஷ்வரிடம் வரும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்துக் கேட்டோம்.

"மிகப்பெரிய இரண்டு ஆளுமைகள் இல்லாமல் இரண்டு முக்கிய கட்சிகள் போட்டியிடும் தேர்தல் இது. அ.தி.மு.க-வின் கட்சி தொடங்கப்பட்ட நேரம், அதன் தலைவர்களின் ஜாதகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால், இதுவரை இருந்த தலைவரின் ஜாதக அமைப்பில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் அவர்கள் ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டது. தற்போது தலைமை மாறியிருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அவர்கள் கட்சிக்குள்ளாகப் பெரும் மாற்றம் நிகழப்போகிறது.

காரணம் இந்த வெற்றி அ.தி.மு.க-வுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தேர்தல் தேதியை அடிப்படையாக வைத்து கணித்தால் அவர்கள் முதலிடம் பிடிப்பது என்பது நெருக்கடிதான். 6-ம் தேதி சுக்கிரனின் பலம் பெற்ற நாளாக இருக்கிறது. எனவே அவர்கள் மிகவும் நம்பிக்கையோடு இந்தத் தேர்தலை சந்திப்பார்கள். அதேவேளை முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான மே 2 மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த நாள் குருவின் ஆளுகைக்கு உட்பட்ட நாளாக இருக்கிறது. இது இவர்களுக்கு சாதகமாக இருக்குமா என்று சொல்ல இயலாது. எனவே ஆட்சி மாற்றம் என்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

க. காந்தி முருகேஷ்வரர்
க. காந்தி முருகேஷ்வரர்

தி.மு.க-வைப் பொறுத்த அளவில் இது முக்கியமான தேர்தலாக இருக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நாளைப் பொறுத்த அளவில் அது தி.மு.க-வுக்கு சாதகமில்லாது போன்ற நிலை காணப்படும். தலைவர்களிடையே சந்தேகங்கள் காணப்படும். ஆனால் முடிவுகள் அறிவுக்கும் நாள் என்பது குருவின் ஆதிக்கத்தில் உள்ள நாள் என்பதால் அது கண்டிப்பாக தி.மு.க வுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

அதேவேளையில் வெற்றி நிச்சயமாக வந்துவிடும் என்று உதாசீனமாகத் தேர்தலை தொண்டர்கள் சந்திக்கக் கூடாது. கூட்டணியைப் பொறுத்த அளவிலும் அவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். அதிகமான இடங்களில் தாங்களே போட்டியிடுவதும் கூட்டணிக்கட்சிகளைத் தங்கள் சின்னத்தில் போட்டியிட வைப்பதும் சாதகமான முடிவுகளைத் தரும். காரணம் தேர்தலில் கடுமையான போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதாவது, இந்தத் தேர்தலின் முடிவில் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக அமர்ந்தாலும் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாகவே இருக்கும். எனவே இந்தத் தேர்தல் தி.மு.க-வுக்கு சாதகமானது என்று உறுதியாகச் சொல்லலாம்" என்றார் காந்தி முருகேஷ்வர்.

இரண்டு ஜோதிடர்களும் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்திருக்கும் இந்தச் சூழலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு