Published:Updated:

செல்வம் செல்வாக்கு உங்களுக்கு எப்படி?

பரிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
பரிகாரம்

பாக்கிய ஸ்தானமும் பரிகாரங்களும்! - ஜோதிடஸ்ரீ முருகப்ரியன்

செல்வம் செல்வாக்கு உங்களுக்கு எப்படி?

பாக்கிய ஸ்தானமும் பரிகாரங்களும்! - ஜோதிடஸ்ரீ முருகப்ரியன்

Published:Updated:
பரிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
பரிகாரம்

ஜோதிட சாஸ்திரத்தில் லக்னம் முதல் மோட்ச ஸ்தானம் வரை 12 பாவங்கள் உள்ளன. ஒவ்வொரு பாவமும் சில காரகத்துவங்களைக் கொண்டிருக்கின்றன. 12 பாவங்களில் 9-ம் பாவமான பாக்கியஸ்தானம், தந்தை, தந்தையுடனான உறவு எப்படி, தந்தையின் மூலம் கிடைக்கும் சொத்துகள், தர்ம சிந்தை, வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை, தெய்வ அனுகிரகம், செல்வம், செல்வாக்கு போன்றவற்றைக் குறிப்பிடும்.

பாக்கியஸ்தானம்
பாக்கியஸ்தானம்


ஜாதகத்தில் இந்த பாவத்தில் அமைந்திருக்கும் கிரகத்தைப் பொறுத்து ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றிப் பார்ப்போம்.

வாக்கு வன்மை தருவார் புதன்!

ஒன்பதாம் பாவத்தில் புதன் இருந்தால், ஜாதகர் உயர்கல்வி, நல்லொழுக்கம், வாக்குவன்மை, நற்பண்புகள், செல்வ வளம் பெற்றிருப்பதுடன் தர்மநெறிப்படி வாழ்வதில் விருப்பம் கொண்டவராக இருப்பார். ஆனால், புதன் வக்கிரம் பெற்றிருந்தாலோ அல்லது பகை நீசம் பெற்றிருந்தால், ஏகாதசி தினங்களில் விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்வதன் மூலம் அனுகூலம் பெறலாம்.

சஷ்டி விரதம் சந்தோஷம் தரும்

செவ்வாய் இந்த பாவத்தில் (9-ல்) இருப்பது அவ்வளவு சிலாக்கியமல்ல. இப்படியான அமைப்புள்ள ஜாதகர், தீய செயல்கள் செய்வதில் விருப்பம் உடையவராக இருப்பார். மற்றவர்களுடன் விரோத மனப்பான்மை கொண்டிருப்பார். சகோதர வகையிலும் சிற்சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தர்ம சிந்தனை சிறிதும் இருக்காது. சஷ்டி தினத்தில் முருகப்பெருமானை வழிபடுவதுடன், தினமும் வீட்டில் சஷ்டிக் கவசம் பாராயணம் செய்வது நலம் தரும்.

செல்வம் தரும் சந்திரன்

ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அன்பும் பணிவும் நிரம்பப் பெற்றிருப்பர். தெய்வ பக்தி மிகுந்திருக்கும். அனைவராலும் விரும்பத்தக்கவராக இருப்பர். செல்வத்துக் கும், குழந்தை பாக்கியத்துக்கும் ஒரு குறையுமில்லை. சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்தால், பிரதோஷ நாள்களில் சிவபெருமானை வழிபடுவதால், மேற்கூறிய பலன்களை அடையலாம்.

பித்ரு ஸ்தானத்தில் சூரியன்

பித்ரு காரகனான சூரியன் பித்ரு ஸ்தானமான 9-ம் இடத்தில் அமர்வது, தந்தைக்குக் கெடுதியை யும் பித்ரு தோஷத்தையும் ஏற்படுத் தும். வசதி வாய்ப்புகள் அனைத்தும் இருந்தாலும் அவற்றை அனுபவிப்ப தில் பல தடைகளை ஏற்படுத்தும்.

இந்த பாவத்தில் சூரியன் அமையப் பெற்றவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து சூரியனை வழிபடுவதும், அமாவாசைதோறும் தவறாமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் சிறந்த பரிகாரமாகும்.

பிள்ளையார் வழிபாடு
பிள்ளையார் வழிபாடு

பிள்ளையார் வழிபாடு நன்மை தரும்

இந்த பாவத்தில் கேது இருப்பதும் சிறப்பல்ல. தந்தை இருக்கமாட்டார். அப்படியே இருந்தாலும் உறவு சுமுகமாக இருக்காது. தவறான செயல்கள் செய்யத் தயங்கமாட்டார். நல்லவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவார். எப்போதும் கடுகடுப்பாக இருப்பார். தந்தைவழி உறவினர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பார். ஒன்பதில் கேது அமையப் பெற்றவர்கள் சங்கடஹர சதுர்த்தி மற்றும் அஸ்தம் நட்சத்திர நாளில் விநாயகருக்கு அருகு அர்ச்சனை செய்வது, மிகவும் விசேஷமான பரிகாரமாகும்.

அனுமனுக்கு வெற்றிலை மாலை

சனி இந்த பாவத்தில் அமையப் பெற்றிருப்பது சாதகமான பலன்களைத் தராது. வாழ்க்கையில் சதா சர்வகாலமும் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். தர்ம சிந்தை அற்றவர்கள். பிறருக்குத் துன்பம் விளைவிப்பதில் சற்றும் சளைக்காதவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை மதிக்கவும் மாட்டார்கள். உடன்பிறப்புகளால் பயன் ஏதும் இருக்காது.

ஒன்பதில் சனி அமையப் பெற்றவர்கள் மாதம்தோறும் வரும் மூலம் நட்சத்திர நாளில், அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

குருவருளால் செல்வாக்கு கூடும்

பாக்கியஸ்தானத்தில் குரு அமையப் பெற்றவர்கள், பெற்றோரிடம் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருப்பார். முன்னோர் வழிபாடுகளைச் செய்வதில் சுணக்கம் காட்டமாட்டார். தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பார். மிகுந்த செல்வமும் செல்வாக்கும் பெற்றிருப்பார். குருபகவான் பகை, நீசம், வக்கிரம் பெற்றிருந்தால், வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட, நன்மைகள் நடக்கும்.

9-ல் ராகு இருந்தால் தலைவன் ஆகலாம்

சர்ப்ப கிரகமான ராகு பித்ரு ஸ்தானத்தில் இருப்பதும் அனுகூலமற்ற நிலையே. பேச்சில் கடுமை நிறைந்திருக்கும். பிறரை தூஷணை செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தவறான செயல்களில் ஈடுபடத் தயங்க மாட்டார்கள். ஆனாலும், தன் சமூகம் அல்லது தன்னுடைய ஊருக்குத் தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒன்பதில் ராகு அமையப் பெற்றவர்கள் ஞாயிறுதோறும் துர்கை அம்மனுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வர நன்மைகள் ஏற்படும்.

சுக்கிரன் அருளால் இல்லறம் இனிக்கும்

சுக்கிரன் ஒன்பதில் அமையப் பெற்றவர்கள், மற்றவர்களைக் கவரக்கூடிய அழகிய தோற்றம் கொண்டிருப்பார்கள். வாழ்க்கையில் திட்டமிட்டுச் செயல்படுவர். இல்லற சுகத்துக்குக் குறைவிருக்காது. இறை நம்பிக்கை மிகுந்திருக் கும். ஆசார்யர்களிடம் ஆழ்ந்த பக்தியும் மரியாதையும் கொண்டிருப்பர். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். சுக்கிரன் அனுகூலமற்ற நிலையில் இருந்தால், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிதெவிக்கு நெய்தீபம் ஏற்றி, லக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்து வருவது, சிறப்பான பலன்களைத் தரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism