Published:Updated:

செவ்வாய்க்கிழமை பூரண சந்திர கிரகணம்... செய்யவேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்! #Astrology

சந்திர கிரகணம் வரும் 16-ம் தேதி இரவு 1.32 மணிக்குப் பௌர்ணமி திதி, உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் தொடங்குகிறது. 

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

கிரகண காலம் என்பது நம் சாஸ்திரங்களில் புண்ணிய காலமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. கிரகண காலத்தில் நாம் செய்யும் நல்ல காரியம், ஒன்றுக்குப் பல மடங்கு பலன்களைத் தரவல்லது. நம்முடைய நல்ல கர்மாக்களின் மூலமாக புண்ணிய பலன்களைப் பெருக்கிக்கொள்வதற்கு உகந்த நேரம் கிரகண நேரம். வரும் 16-ம் தேதி பூர்ண சந்திர கிரகணம் வருவதையொட்டி கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன என்று முனைவர். வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் கேட்டோம்.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

“கிரகண காலத்தில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகளைப் பற்றி நம் வேதகால ரிஷிகள் விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள். கிரகணம் தொடங்கும்போது நாம் செய்யவேண்டிய நீராடல், மந்திர ஜபம், தர்ப்பணம் கொடுத்தல், தானம் செய்தல், கிரகணம் முடிந்த பிறகு மறுபடியும் நீராடல் ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம்.தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி, சந்திர கிரகண காலத்தில் நாம் செய்யும் மந்திர ஜபங்கள் நமக்கு அளவற்ற நற்பலன்களைத் தரும். அப்போது நாம் செய்யும் மந்திர ஜபம் ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன்களைத் தரும். குறிப்பாக உபநயனம் செய்விக்கப்பட்டு பிரம்மோபதேசம் செய்விக்கப் பட்டவர்கள் கண்டிப்பாகக் கிரகண காலத்தில் மந்திர ஜபம் செய்யவே வேண்டும். காயத்ரி மந்திரம் ஜபம் செய்வதற்கு உகந்த நேரம். பெண்கள் உள்பட மற்றவர்கள், தங்கள் குருநாதர் மூலம் ஏதேனும் மந்திரோபதேசம் பெற்றிருந்தால் அந்த மந்திரத்தை ஜபம் செய்யலாம்.

அப்படி உபதேசம் பெறாதவர்கள், இறைவழிபாடுகளில் ஈடுபடலாம். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்ற தெய்வப் பாடல்களை பாராயணம் செய்யலாம். அல்லது, 'ஓம் நமசிவாய', 'ஓம் விஷ்ணவே நம:',  'ஓம் நாராயணாய நம' என்ற நாமாவளிகளை ஜபிக்கலாம். குலதெய்வ மந்திரங் களையும் ஜபிக்கலாம்.

மந்திர ஜபத்துக்குப் பிறகு மறைந்த நம் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். தந்தை இருப்பவர்கள் தர்ப்பணம் கொடுக்கக்கூடாது. அதற்குப் பதில் தானம் கொடுக்கலாம்.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

கிரகணம் தொடங்குவதற்கு சுமார் ஒன்பது மணி நேரத்துக்கு முன்பாகவே நாம் உணவு உண்டுவிட வேண்டும். அதற்குப் பிறகு கிரகணம் முடியும்வரை எதுவும் சாப்பிடக்கூடாது. முதியவர்கள், குழந்தைகள், கருவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த விஷயத்தில் நம்முடைய ரிஷிகள் விலக்கு அளித்திருக்கிறார்கள். மற்றவர்கள் கிரகணம் தொடங்குவதற்கு ஒன்பது மணி நேரத்துக்கு முன்பு சாப்பிடவேண்டும் என்றால், இவர்கள் மூன்று அல்லது இரண்டு மணிநேரத்துக்கு முன்பு உணவு எடுத்துக்கொள்ளலாம்.

காரணம் மற்றவர்களுக்குக் கிரகணத்தினால் ஏற்படக்கூடிய தீட்டு என்பது 16-ம் தேதி மாலை 4.02 மணிக்குத் தொடங்குகிறது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு இரவு 10.02 மணிக்கே தீட்டுக் காலம் தொடங்குகிறது.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

இந்தியா மட்டுமல்லாமல், லண்டன், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மலேசியா, அபுதாபி, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சந்திர கிரகணம் ஏற்படும் என்பதால், அங்கே உள்ளவர்களும் மேலே சொன்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். அமெரிக்காவில் சந்திர கிரகணம் தெரியாது என்பதால், அவர்கள் மேலே கூறியவற்றைக் கடைப் பிடிக்கத் தேவையில்லை.

சந்திர கிரகணம் முடிந்ததும் மறுபடியும் ஸ்நானம், ஜபதபங்கள், தர்ப்பணம் ஆகியவை செய்யவேண்டும். அன்று தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் ஆடி மாதமும் பிறக்கிறது. எனவே சந்திர கிரகணத்தை முன்னிட்டு செய்யக்கூடிய தர்ப்பணத்துடன், ஆடி மாதம் பிறந்த பிறகும் மறுபடியும் தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

சந்திர கிரகணம் 16-ம் தேதி இரவு 1.32 மணிக்குப் பௌர்ணமி திதி, உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் தொடங்குகிறது. 

கிரகண மத்திய காலம் இரவு 3.01 மணி; கிரகண முடிவு காலை 4.30.

தர்ப்பணம் கொடுக்கும் நேரம் 16-ம் தேதி 3 மணிக்கு மேல் நீராடிவிட்டுக் கொடுக்கவேண்டும். காலை 4.3-க்கு கிரகணம் முடிந்ததும் மறுபடியும் நீராடவேண்டும். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களிலும், ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் உரிய சாந்தி பரிகாரங்கள் செய்துகொள்ளவேண்டும்.

கிரகணம்
கிரகணம்

கிரகண தர்ப்பணம் முடிந்து ஸ்நானம் செய்த பிறகு, மாதப் பிறப்பும் வருவதால், மாதப் பிறப்பு தர்ப்பணம் கொடுப்பதற்கு முன்பும் நீராடவேண்டும். 17-ம் தேதி காலை 6.00 மணிக்குச் சூரிய உதயம். ஆனால், அன்று முற்பகல் 11.38 மணிக்குத்தான் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதம் தொடங்குகிறது. எனவே, சூரியோதயம் ஆனவுடன் மறுபடியும் அனுஷ்டான ஸ்நானம் செய்துவிட்டு, உத்தராயணம் இருக்கும்போதே ஆடி மாதப் பிறப்புக்கான புண்ணிய கால தர்ப்பணம் கொடுக்கவேண்டும். ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்களா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படலாம். அவசியம் செய்யவேண்டும் “ என்றார்.