Published:Updated:

குருப்பெயர்ச்சி மகர ராசி பலன்கள்!

மகரம்
பிரீமியம் ஸ்டோரி
News
மகரம்

13.11.21 முதல் 13.4.22 வரை

நிர்வாகத் திறமை அதிகமுள்ளவர் நீங்கள். குரு பகவான் 13.11.21 முதல் 13.4.22 வரை உங்கள் ராசியை விட்டு விலகுவதால் அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். சந்தேகத்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். செலவுகளைச் சமாளிக்கும் விதம் பணபலம் கூடும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதி உண்டாகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். ஆரோக்கியம் கூடும். வங்கியில் அடமானத்தில் இருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். பேச்சில் நிதானம் கூடும்.

குருப்பெயர்ச்சி 
மகர ராசி பலன்கள்!

குரு ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். குருபகவான் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் கூடி வரும். குரு பத்தாவது வீட்டைப் பார்ப்பதால் பதவிகள் தேடி வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசியல்வாதிகள் தலைமையுடன் நெருக்கமாக இருப்பீர்கள்; புதிய பதவி கிடைக்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்கள் சுக - லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் தடைகள் நீங்கும். முக்கிய பதவி, பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். சகோதரர்களின் மனசு மாறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பழைய கடன் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகன வசதிகள் பெருகும். தாயாரின் உடல்நிலை மேம்படும்.

31.12.21 முதல் 2.3.22 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தடைகள் நீங்கி திருமணம் கூடி வரும். புறநகர்ப் பகுதியில் மனை வாங்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை, விரும்பத்தகாத இடமாற்றம் வந்துச் செல்லும். வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்களின் திருதியாதிபதியும் விரயாதிபதியுமான குரு தன்னுடைய பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால், தள்ளிப்போன சுப காரியங்கள் கூடிவரும். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாகக் கிடைக்கும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம், விலை உயர்ந்த நகையைக் கவனமா கக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.

வியாபாரத்தில், கடையை அலங்கரிப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். பழைய பாக்கிகள் எளிதாக வசூலாகும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். கெமிக்கல், கமிஷன், ஹோட்டல், ஃபைனான்ஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் குற்றம் சொல்லிக்கொண்டிருந்த மேலதிகாரி பணிந்து போவார். பதவி உயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிடைக்கும். சில வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையினர் சலுகைகளை மீண்டும் பெறுவர்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, வாடியிருந்த உங்கள் வாழ்வில் வசந்தம் வீசச் செய்வதாக அமையும்.

பரிகாரம்: திருவிடைமருதூர் அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருளும் அக்னீஸ்வரரையும் தட்சணாமூத்தியையும் பூசம் நட்சத்திர நாளில் வணங்கி வழிபட்டு வாருங்கள். வாரிசு இல்லாத தம்பதிக்கு உதவுங்கள்; நிம்மதி பெருகும்.