Published:Updated:

குருப்பெயர்ச்சி விருச்சிகம் ராசிபலன்கள்!

விருச்சிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
விருச்சிகம்

13.11.21 முதல் 13.4.22 வரை

மனதில் பட்டதை மறைக்காமல் பேசுபவர் நீங்கள். குரு பகவான் 13.11.21 முதல் 13.4.22 வரை நான்காவது வீட்டில் அமர்வதால், நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு இரண்டு, ஐந்தாம் வீடுகளுக்குரிய குரு பகவான் தன் நட்சத்திரமுள்ள வீட்டில் அமர்வதால், தீய பலன்கள் குறையும் என்றாலும் அலைச்சல் இருக்கும்; சேமிப்புகள் கரையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரும். உணர்ச்சிவசப்படாமல் தீர்வு காணவேண்டும். பயணங்களில் கவனம் தேவை. உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போகவும்.

குருப்பெயர்ச்சி
விருச்சிகம் ராசிபலன்கள்!

குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் வேற்று மொழிக்காரர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலனில் கவனம் தேவை. உயர் கல்வி - உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. சொத்து வாங்குவது - விற்பதில் உஷாராக இருங்கள். உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரச்னைகளைப் பேசித் தீர்க்கவும். 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் எவரையும் விமர்சிக்க வேண்டாம்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் தோற்றப் பொலிவு கூடும். பேச்சில் கம்பீரம் தெரியும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாக்கித் தொகையைக் கொடுத்து புதிய சொத்துகளுக்குப் பத்திரப் பதிவு செய்வீர்கள்.

31.12.21 முதல் 2.3.22 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்களின் தன - பூர்வ புண்ணியாதிபதியான குரு, தன் நட்சத்திரமான பூரட்டாதியில் செல்வதால், எதிலும் வெற்றி கிட்டும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கையாளுங்கள். கெமிக்கல், பர்னிச்சர் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் கொஞ்சம் முரண்படுவார்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்களுக்கு எதிராகச் சிலர் குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். மேலதிகாரியிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. குருபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள். கணினித் துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் சிற்சில தடைகளுடன் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி சற்று அலைக்கழிப்பைத் தந்தாலும் நிறைவில் நினைத்ததை முடிக்கும் வல்லமையைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: பூரட்டாதி நட்சத்திர நாளில், கருவூரில் அருளும் ஶ்ரீபசுபதீஸ் வரரையும், ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். பார்வையற்றோருக்கு உதவி செய்யுங்கள்; மகிழ்ச்சி பொங்கும்.