Published:Updated:

குருப்பெயர்ச்சி கடகம் ராசிபலன்கள்

கடகம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடகம்

13.11.21 முதல் 13.4.22 வரை

காலத்திற்கேற்ப யோசித்து செயல்படும் அன்பர் நீங்கள். 13.11.21 முதல் 13.4.22 வரை ராசிக்கு எட்டாவது வீட்டில் சென்று மறைகிறார் குரு. 8-ல் நிற்கும் குருவால் பெயர் கெடுமே, எந்த வேலையையும் திறம்படச் செய்ய முடியாதே என வருந்தாதீர்கள். சர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் ஸ்திர வீட்டில் மறைவதால் நல்லதே நடக்கும்.

குருப்பெயர்ச்சி 
கடகம் ராசிபலன்கள்

குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழி உறவினர்களால் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிக்கவும் செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். அம்மா வழிச் சொத்து கைக்கு வரும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். அரசியல்வாதிகள் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்கள் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். புது பொறுப்புகள், பதவிகள் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, வேலை கிடைக்கும். வீடோ, மனையோ வாங்கிவிட வேண்டுமென முயற்சி செய்வீர்கள்.

31.12.2021 முதல் 2.3.22 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் கட்டட வேலையைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் முடியும். தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். ஓட்டுநர் உரிமத்தைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். விதிகளை மீற வேண்டாம்.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்களின் சஷ்டம - பாக்கியாதிபதியான குரு தன் சுய நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் புகழ், கௌரவம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களுடனான பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படியாக வரவழைப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுக்கு செலுத்த வேண்டியவற்றை முறையே செலுத்தி விடுங்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த கூச்சல், குழப்பங்களெல்லாம் நீங்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.

உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கம் ஆவீர்கள். அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் பேச வேண்டாம். புது வேலைக்கு மாறும்போது யோசித்து செயல்படுங்கள். கணினித் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கலைஞர்களே, உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றியை யும் முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சித்திரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் காஞ்சி-உத்திரமேரூர் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் எனும் ஊரில் அருளும் ஶ்ரீசிம்ம குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்; வெற்றி உண்டு.