Published:Updated:

குருப்பெயர்ச்சி கன்னி ராசி பலன்கள்!

கன்னி
பிரீமியம் ஸ்டோரி
News
கன்னி

13.11.21 முதல் 13.4.22 வரை

கனிவான பேச்சால் அனைவரையும் ஈர்ப்பவர் நீங்கள். குரு பகவான் 13.11.21 முதல் 13.4.22 வரை ஆறாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். சகட குருவாச்சே... சங்கடங்களைத் தருவாரே என்று கலங்காதீர்கள். குரு பகவான் யோக பலன்களை அள்ளித் தருவார். எனினும் அவ்வப்போது மரியாதை குறைவான சம்பவங்கள் நிகழும். பண வரவு திருப்திகரமாக இருந்தாலும், வெளியில் கடன் வாங்க நேரிடும்.

குருப்பெயர்ச்சி 
கன்னி ராசி பலன்கள்!

குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பேச்சில் நிதானம் பிறக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். தாம்பத்தியம் இனிக்கும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை கிடைக்கும். டிரஸ்ட் தொடங்குவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில், அதிக சம்பளத்துடன் பதவி உயர்வு கிட்டும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகளைக் கட்டுப் படுத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். அரைகுறையாக நின்ற கட்டடப் பணிகளை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்கள் திருதியாதிபதியும் - அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் முன்கோபம், திடீர்ச் செலவுகள், சொத்துப் பிரச்னைகள், சகோதர வகையில் மனவருத்தங்கள் வந்து செல்லும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். வாகனத்தை இயக்கும்போதும், சாலைகளைக் கடக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம்.

31.12.21 முதல் 2.3.2022 வரை, ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்க வேண்டி வரும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்களின் சுக-சப்தமாதிபதியான குரு, தன் நட்சத்திரமான பூரட்டாதியில் செல்வதால், கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துபோகும். எந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கைத் துணைவரை மரியாதைக் குறைவாகப் பேச வேண்டாம். உங்களுக்கும் கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். தாயாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். போட்டிகள் அதிகரிக்கும். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். உங்களின் அன்பான பேச்சால் புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்களிடம் கோபம் வேண்டாம்.

உத்தியோகத்தில் பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பதவி- சம்பள உயர்வு தேடி வரும். வெளிநாட்டு தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். கணினித் துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கலைஞர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு தேடி வரும்.

மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி, மறைமுக வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: உத்திரட்டாதி நட்சத்திர நாளில் சிதம்பரம் ஶ்ரீநடராஜரையும் ஶ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வாருங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்; சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.