Published:Updated:

குருப்பெயர்ச்சி மேஷ ராசி பலன்கள்!

குருப்பெயர்ச்சி 
மேஷம் பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி மேஷம் பலன்கள்

13.11.21 முதல் 13.4.22 வரை

வாக்கு தவறாத மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் சுற்றம் சூழ வாழ்பவர். 13.11.21 முதல் 13.4.22 வரை உங்கள் ராசிக்கு 11- ம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கப்போகிறார் குருபகவான். நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்கள்.

குருப்பெயர்ச்சி
மேஷ ராசி பலன்கள்!

சாதாரண வேலையைக்கூட முடிக்க முடியாமல் திணறினீர்களே... வரவேண்டிய பணம் வராமல் தவித்தீர்களே... இனி அந்த நிலைகள் மாறும். பழைய கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கூச்சல் குழப்பங்கள் விலகும். சந்தோஷம் பெருகும். சகோதரிக்குத் தடைப்பட்டிருந்த திருமணம் சிறப்பாக முடியும்.

உங்களின் 3 - ம் வீட்டை குரு பார்ப்பதால், இளைய சகோதர வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குரு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் சிறப்பாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் சோர்வு, விரக்தி விலகும். கடின வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் பணவரவு உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வீடு, மனை வாங்குவதும் விற்பதும் லாபகரமாக அமையும். சகோதரர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வழக்கு சாதகமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும்.

31.12.21 முதல் 2.3.22 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன் - மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். மனைவிக்குச் சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து நீங்கும்.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்களின் பாக்கிய மற்றும் விரயாதிபதியான குருபகவான், தன் நட்சத்திரத்தில் செல்வதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாள்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். கடையை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். உணவு, இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.

உத்தியோகத்தில், உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். பதவி- சம்பள உயர்வுகள் தடையில்லாமல் கிடைக்கும். மூத்த அதிகாரியிடமிருந்து அலுவலக ரகசியங்களை அறிந்துகொள்வீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். கலைஞர்களுக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும்; நம்பிக்கையோடு துளிர்த்தெழுவார்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி திடீர் வளர்ச்சியையும், வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: பூச நட்சட்சத்திர நாளில் காஞ்சிக்கு அருகிலுள்ள தக்கோலம் தலத் துக்குச் சென்று, அங்குள்ள ஈசனையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள். முதியோருக்கு உதவுங்கள்; நல்லதே நடக்கும்.