Published:Updated:

குருப்பெயர்ச்சி மிதுனம் ராசிபலன்கள்!

மிதுனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மிதுனம்

13.11.21 முதல் 13.4.22 வரை

அறிவியல் பூர்வமாக எதையும் யோசிக்கும் அன்பர் நீங்கள். குருபகவான் 13.11.21 முதல் 13.4.22 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் அமர்வதால், நீங்கள் இனி உற்சாகம் அடைவீர்கள்.

குருப்பெயர்ச்சி 
மிதுனம் ராசிபலன்கள்!

குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் துவண்டிருந்த உங்கள் முகம் பிரகாசிக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கையில் நாலுகாசு தங்கும்; சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், வட்டிக் கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். காரியங்களில், முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வெகுநாட்களாக போக நினைத்தும் தடைப்பட்டுக் கொண்டிருந்த குலதெய்வப் பிராத்தனைகள் நிறைவேறும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உதவுவர்.

குருபகவானின் நட்சத்திரம் சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்கள் சஷ்டம - லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மறைமுக எதிர்ப்பு, வீண் செலவுகள், சிறுசிறு அவமானம் வந்து செல்லும். கை, காலில் அடிப்படக் கூடும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சகோதரர்களால் சங்கடங்கள் வரும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

31.12.21 முதல் 2.3.22 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் சிறு மனச் சஞ்சலங்கள், வீண் டென்ஷன், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். உறவினர்களுடன் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்களின் சப்தம - ஜீவனாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால், மனைவியுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. கடந்த காலத்தை நினைத்து டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப் படுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தாக இடமாற்றம் வரும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும்.

குரு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் வியாபாரத்தில் போராட்ட நிலை மாறும். பெரிய முதலீடுகளைப் போட்டு, போட்டியாளர்களைத் திகைக்கச் செய்வீர்கள். தொல்லை கொடுத்த வேலையாட்கள் மாற்றிவிட்டு, அனுபவம் மிகுந்தவர்களைப் பணியில் அமர்த்துவீர்கள். பழுதாகியிருந்த கடையை அழகாக்குவீர்கள். நவீன வசதிகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த கருத்துமோதல்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் உங்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்த உயரதிகாரி, இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி செலவுகளைக் குறைப்பதாகவும், எதிர்பார்ப்புகளில் வெற்றியைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: மூலம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் விருத்தாசலம் ஶ்ரீவிருத்தகிரீஸ்வரர், விபசித்து முனிவர் மற்றும்  தட்சணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.