Published:Updated:

குருப்பெயர்ச்சி ரிஷப ராசிபலன்கள்!

குருப்பெயர்ச்சி 
ரிஷப ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி ரிஷப ராசி பலன்கள்

13.11.21 முதல் 13.4.22 வரை

தயவு தாட்சண்யமும் தாராள மனசும் கொண்ட நீங்கள், தடைக் கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறுபவர். குருபகவான் 13.11.21 முதல் 13.4.22 வரை பத்தாவது வீட்டிற்குள் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியைப் பறித்து விடுவாரே; கையில் காசுபணம் தங்காதே என்றெல்லாம் பதற்றப் படாதீர்கள். வெற்றி வாய்ப்புகள் தேடி வந்து குவியும்.

குருப்பெயர்ச்சி 
ரிஷப ராசிபலன்கள்!

குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் ஒரு முதிர்ச்சி தெரியும். வரவேண்டிய பணம் வரும். கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குரு சுக வீட்டைப் பார்ப்பதால் எப்போதும் புலம்பிக்கொண்டிருந்த தாயாரின் மனசு மாறும். கை, கால், முதுகு வலியிலிருந்து தாயார் விடுபடுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தாய்மாமன் வகையிலிருந்த மனக்கசப்புகள் நீங்கும். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வழக்கு சாதகமாக முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

13.11.21 முதல் 30.12.21 வரை உங்களின் சப்தம-விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், உங்களின் பலவீனத்தைச் சரி செய்துகொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் உள்ள வில்லங்கம் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக முடியும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு. தடைகள் நீங்கி திருமணம் கூடிவரும். தூக்கமின்மை, கனவுத் தொல்லைகள் விலகும்.

31.12.21 முதல் 2.3.22 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், மறைமுக எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். சொத்து சேரும்.

2.3.22 முதல் 13.4.22 வரை உங்களின் அஷ்டம-லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால், ஓய்வெடுக்கமுடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். புது பொறுப்புகள், பதவிகளை ஏற்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள். சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து கொள்முதல் செய்ய வேண்டும். மற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே ஏற்க வேண்டாம். வேலையாட்கள் சில நேரங்களில் பிரச்னை தருவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுப் படுத்துவீர்கள். கெமிக்கல், கமிஷன், எலெக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்; எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். தேவையில்லாமல் விடுமுறை எடுக்க வேண்டாம். சக ஊழியர்களை அரவணைத்துப் போகவும். மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள். அலுவலகத்தில் ஓரளவு உயர்வு உண்டு. கலைஞர்களே! உங்களைச் சிலர் விமர்சித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். படைப்புகளைப் போராடி வெளியிடுவீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு அனுபவ அறிவைத் தருவதுடன், தன் கையே தனக்குதவி என்பதையும் புரியவைப்பதாக அமையும்.

பரிகாரம்: அனுஷம் நட்சத்திர நாளில் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் உள்ள தென்குடித்திட்டையில் அருளும் ஶ்ரீபசுபதிநாதரையும் ஶ்ரீதட்சணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள். ஆதரவற்ற சிறுவருக்கு உதவுங்கள்; நிம்மதி கிட்டும்.